Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வண்ணக் கூரையும் வால்போஸ்டரும்!

நன்றி குங்குமம் தோழி

நான்கு சுவர்களுக்குள் ஒரு நந்தவனம்

வீட்டின் ஒவ்வொரு பகுதியும் பார்த்துப் பார்த்து அலங்கரிப்போம். சுவர், தரை, ஜன்னல் அனைத்துமே அலங்கரிக்கும் நாம் தலை மேல் இருக்கும் மேற்கூரையில் கவனம் செலுத்துவதில்லை. அதுதான் ஒரு அறையை முழுமையாக்கிக் காட்டுகிறது. நான்கு பக்கமும் சுவர்கள் எடுத்தாலும் மேல்தளம் போட்டு மூடியபின்தான் அது முழுமையடைகிறது.

அந்தக் காலகட்டங்களில் அரண்மனைகள் போன்ற இடங்களில் மேற்கூரைகள் கூட கலையம்சத்துடன் பல்வேறு வடிவமைப்புக் கொண்டவையாக நம்மால் பார்க்க முடியும். அதேசமயம் நம்முடைய வீட்டு மேற்கூரை மேல் நாம் அதிகம் அக்கறை எடுப்பதில்லை. காரணம், உயரத்தில் உள்ளதால் அழுக்குப்படவோ, கறைகள் ஏற்படவோ வாய்ப்பில்லை. அதனால் வெள்ளை அடித்துவிட்டால் போதும். அதையும் அழகுபடுத்திப் பார்ப்பது என்பதுதான் ‘பால்ஸ் சீலிங்.’ வெப்பம் அதிகம் தெரியாமல் இருக்க ‘பால்ஸ் சீலிங்’ படுக்கையறையில் மட்டும் போடுவதுண்டு. அலுவலகங்கள், மால், கடைகள் போன்ற இடங்களில் அலங்காரத்திற்காகப் போடுவார்கள். படுக்கையறைக்கு மட்டும் என்றில்லாமல், வரவேற்பறைக்கும் கூட போடலாம்.

அனைத்து அலங்காரங்களுடன், ‘பால்ஸ் சீலிங்’கும் சேர்ந்து அறை முழுவதுமே அழகு பெறும். காரணம், இது வெறும் மேற்கூரை அலங்காரம் மட்டுமில்லாது, அதனுடன் இணைந்த ‘ஸ்பாட்லைட்’டுகளும் அலங்கார விளக்குகளும் நம்மை நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பது போன்ற உணர்வை தரும். இதற்காக, ரொம்பவும் செலவு செய்ய தேவையில்லை. மிகக் குறைந்த விலைகளில் ‘பானலிங்’ கிடைக்கின்றன. வெறும் அலங்காரத்திற்கு மட்டும் சில விலை குறைவான வகைகள் உள்ளன. நமக்கு பராமரிக்கும் ஆற்றலும், ரசிக்கும் தன்மையும் இருந்தால் போதும். அறையின் மற்ற அலங்காரங்கள் அழகாக கண்ணுக்கு விருந்தளிக்கும். ஆனால், ‘பால்ஸ் சீலிங்’ என்பது அழகைத் தருவதோடு, வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும் ஒரு பாதுகாப்பு கவசம் போட்டது போல அமைந்துவிடும்.

சிறிய அறை அல்லது அலுவலகத்தில் போடும் பொழுது அதன் தோற்றமே மாறி கண்களுக்கு குளிர்ச்சியை தருவதாக அமையும். சிலர் பணம் ரொம்ப செலவு செய்ய முடியாது. ஆனால், ‘பால்ஸ் சீலிங்’ போட்டுப் பார்க்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். அதற்காகவே புதுமையான ‘பானலிங்’ கிடைக்கிறது. இது அலங்கார நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்துவதாகும். தூரத்திலிருந்து பார்த்தால் ‘பிளாஸ்டிக்’ என்பதே தெரியாது.

கிரீன், பிரவுன் போன்ற நிறங்களிலும் அமைக்கலாம். கூரையில் அமையும் விளக்குகள் மேலும், மகுடம் போல அமைகின்றன. ‘ஸ்பாட்லைட்’ விதவிதமான வகைகளில் விளக்குகள் போடும் பொழுது ஒரு நட்சத்திர ஹோட் டல் அமைப்பு போல காணமுடியும். இப்பொழுது புதிய வகையில் ‘பால்ஸ் சீலிங்’ கொத்து விளக்குகள் அமைக்கும் பொழுது வண்ண ஜாலங்களுடன் ஜொலிப்பதுடன், ‘ரிமோட்’ மூலம் இசையைத் தரும் புதிய யுக்திகள் காணப்படுகின்றன. கயிறு போன்ற ‘ரோய் லைட்’ 2ன் பக்கம் அமைத்து அறைக்கு மேலும் கலையம்சம் தரச்செய்யலாம்.

வண்ணக் கூரைகள் பற்றி பொதுவாக யாரும் யோசிப்பதில்லை. சாதாரணமாக மேல் பகுதி வெள்ளையடித்து, ‘விளக்குகளும்’, ‘ஃபேன்’ மட்டும்தான் போடுவோம். ஆனால், மேற்கூரை என்பதே ஒரு அழகைத் தருவதுடன், அதில் காணப்படும் ‘ஸ்பாட் லைட்டு’கள் மேலும் ரிச் லுக்’ தரும். பெரிய தனி வீடுகளில் ஒவ்வொரு அறைக்கும் செலவு செய்வது சிரமம். ஆனால், சிறிய வீடுகளில், என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை செய்து அசத்தலாம். ‘ரோப்லைட்’ வெளிக்குத் தெரியாமல் அமைக்கப்படும் பொழுது அறை ரம்மியமாகக் காட்சித் தரும்.

அறையின் பொருட்கள் மீது வெளிச்சம் படும் பொழுது, பொருட்களும் மின்னும். ஒரு அலங்காரத்தின் சரியான நோக்கத்தையும், அதன் பலனையும் புரிந்து கொண்டால் நம் கண்களுக்கு எப்போதும் அது விருந்தாகும். முன்பெல்லாம் ஒரு சில வகைகளில் ‘பால்ஸ் சீலிங்’ விளக்குகள் இருந்தன. ஆனால், இப்பொழுதெல்லாம் நிறைய மாடல்கள் வந்துவிட்டன. ஒரு நிறத்தில் இருந்தாலும் கொஞ்சம் எரிந்த பின் பச்சை, சிவப்பு, மஞ்சள் என மாறும் அளவுக்கு ‘மாஜிக் விளக்குகள்’ கிடைக்கின்றன. கவலைகளை மறந்து வாழவும் அடைக்கலம் தருவது நம் வீடுகள் மட்டுமே! வீட்டின் ஒவ்வொரு அழகையும் ரசிக்க ஆரம்பித்தாலே, மனம் குதூகலிக்கும்.

ஆரோக்கியமான இல்லத்தில் இருந்து கொண்டு, சுகாதாரமான காற்றை சுவாசித்துக் கொண்டு, நல்ல உணவை உட்கொள்ளும் போது, வந்து போகும் பிரச்னைகள் நம் மனதை பாதிக்காது. தரை, சுவர், மேற்கூரை என்று வீடு அழகாக, விஸ்தாரமாக இருந்தாலும், அதை நாம் அப்படியே விட்டு விடுவதில்லை. மென்மேலும் அலங்கரிக்க ஆசைப்படுகிறோம். எந்தவித அலங்காரமும் செய்யாமல், நான்கு சுவர்கள் நன்கு பெயின்ட் செய்யப்பட்டாலும், பளபளக்கும் விலையுயர்ந்த ‘டைல்ஸ்’ தரையில் போடப்பட்டிருந்தாலும், மேலே எதுவுமே அலங்கரிக்கப்படாமல் வெற்றிடமாகவே காணப்பட்டால், அது மனித நடமாட்டம் இல்லாத இடம் போலத்தான் தோன்றும். நம் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி பராமரிக்க ஏதுவானதாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இப்பொழுதெல்லாம் எல்லோருமே அழகிய சித்திரங்கள், ஓவியங்கள், கை வேலைப்பாடுகள் மற்றும் பல்வேறு விதமான விசிறி அமைப்புகள் வரை சுவரில் போட்டு அலங்கரிக்க விரும்புகிறார்கள். நிறைய இயற்கைக் காட்சிகள் கொண்ட படங்கள், மலை அருவி, கடல் மற்றும் பசுமை நிறைந்த காட்சிகள், கடற்கரை மணலில் வீடு கட்டுவது போன்ற படங்கள் கூட 3D வடிவில் கிடைக்கின்றன. அருவி கொட்டும் காட்சியை பார்த்து காலையில் எழுந்தால் நல்லது என்று கூட நம்பப்படுகிறது. நம் மனம் எதை நாடுகிறதோ, அதில்தான் நம் நம்பிக்கையும் அடங்கியுள்ளது. நுழைந்தவுடன் நம் கண்களில் படும் சுவரை கொஞ்சம் அலங்காரமாக வைத்தால் கூட போதும். மேற்கூரை முதல் தரை வரை போடக்கூடிய 3D போஸ்டர்கள் நிறைய வந்துவிட்டன. நல்ல தரம் வாய்ந்த போஸ்டர்கள் 25 ஆண்டுகள் வரை அப்படியே இருக்கும்.

சுவரின் மேல் பகுதியில் எப்படியும் கை, கால்கள் பட வாய்ப்பில்லாததால், பெயின்ட் அடித்தபடி ‘பளிச்’சென்றே இருக்கும். அடிப்பாகம் பர்னிச்சர்கள் மறைக்கும் என்பதால், சுவரின் நடுப்பகுதியை அலங்கரிக்க நாம் முயற்சிக்கலாம். நடுவில் சுவரின் நீள அகலங்களை குறித்துக் கொண்டு அதற்கேற்ற போஸ்டர் படங்களை தேர்ந்தெடுக்கலாம். நாம் இருக்கும் இருப்பிடத்திற்கு சுமார் இரண்டாயிரம் முதல் ஐயாயிரம் செலவு செய்தால் கூட போதும்.

பார்ப்பதற்கு வீடு ‘பளிச்’சென இருப்பதோடு, அனைவர் மனதையும் ஈர்க்கும். இதெல்லாம் சொந்த வீட்டுக்காரர்களுக்குத் தானே சாத்தியம். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கும், அடிக்கடி ஊர் மாற்றிப் போகிறவர்களுக்கும் சாத்தியமா என்றால் அதற்கும் வழி உண்டு. அனைவருமே, வாழ்நாள் முழுவதும் சொந்த வீட்டில் வாழ்வது என்பது அவரவர் பாக்கியம். ஆனால், இருக்குமிடத்தை நமக்குப் பிடித்த மாதிரி அமைத்துக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.

நிரந்தரமாக சொந்த வீட்டில் வசிக்காதவர்கள், ஊர் மாற்றலாகிப் போகிறவர்கள் முன்பு சொன்னபடியே அரை சுவருக்கு போஸ்டர் படம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நடு சுவற்றில் பெரியதொரு படம் போன்று பொருத்திவிட்டால் போதும். எங்கு சென்றாலும் எடுத்துச் செல்ல முடியும். தகடு போன்ற ‘ப்ளைவுட்’டில் படம் ‘செட்’ செய்யலாம். இது போல் நிறைய வசதிகள் வந்துவிட்டன. சிறிய ‘வெல்வெட்’ டிசைன்களை கண்ணாடி போட்டு அழகுபடுத்தலாம்.

பித்தளை வேலைப்பாடு கொண்டு தட்டுக்களைக்கூட ‘லாமினேட்’ செய்து அங்கங்கே மாட்டலாம். நம் கற்பனைக்கேற்றவாறு, ரசனைக் கேற்றவாறு, பொருட்களின் மதிப்பு, தரம் குறையாமல் அலங்கரிக்கலாம். எதுவும் போட இயலாவிடில், நிறைய ‘ஃபேப்ரிக் பெயின்ட்’ செய்யப்பட்ட சமிக்கு, கண்ணாடி வேலைப்பாடுகளுடன் கூடிய சுவர் மாட்டிகள் நிறைய கிடைக்கின்றன. நமக்குப் பிடித்த மாதிரி தேர்ந்தெடுத்து, கண்ணாடி போட்டு நடு சுவற்றில் மாட்டலாம். அத்தகைய சுவற்றின் கீழே ஒரு தரை பிரிப்புப் போட்டு, இருபுறம் செடிகள் வைத்துக்கூட அலங்கரிக்கலாம். உழைத்துக் களைத்து சிறிது நேரம் ஓய்வெடுக்கும் போது, இத்தகைய அலங்காரங்களை பார்த்து ரசிக்கலாம்.

நாம் ‘ஜமக்காளம்’ என்று சொல்லும் தரைவிரிப்பை, மேலை நாடுகளில் ‘கார்ப்பெட்’ போல பயன்படுத்துகிறார்கள். நம் பாரம்பரியமும் பழமையும் மாறாத பல பொருட்கள் கலைநயத்தோடு கிடைக்கின்றன. பட்டுத் துண்டுகளை தேர்ந்தெடுத்து கண்ணாடி போட்டுக்கூட மாட்டலாம். ஒவ்வொரு அறைக்கும் ஒன்றுகூட போடலாம். பொருட்களை வீணடிக்காமல், நம்மிடம் உள்ளவற்றை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை யோசித்து செய்தாலே போதும்.

வீடு என்பது நான்கு சுவர்கள், தரை, மேற்கூரை என்பது மட்டும் கிடையாது. ஒவ்வொரு பகுதியையும் அழகுற மிளிரச் செய்வது முக்கியம். கட்டடம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், கலையம்சம் இருந்தால்தான் அழகிய வீடாகப் பார்க்கப்படும். அளவுக்கு அதிகமாக செய்யாமல், அங்கங்கே நம் ரசனை வெளிப்படும் விதத்தில், ஏதாவது ஒரு அலங்காரம் செய்யலாம். ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது போல, பொருத்தமில்லாத அளவுக்கு அதிகமான அலங்காரங்களும் தேவையில்லை. தூய்மை, ஆரோக்கியம் இவற்றை கருத்தில் கொண்டு கண்களுக்கும் விருந்தாக அதிக பணம் செலவழிக்காமல், மனத்திற்குத் திருப்தி தந்தால் போதுமானது.

தொகுப்பு : சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்