நன்றி குங்குமம் தோழி
கலை சார்ந்த தொழில் செய்வது பலருக்கும் மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் தரும். சொந்தமாக நம் நேரத்தை நிர்ணயித்து சுயேட்சையாக வேலை செய்யலாம். பிடித்தமான வேலை என்பதால் மன நிறைவு கிடைப்பதோடு மட்டுமின்றி, நம் தனித்துவமான திறன்களை உலகிற்கு காட்டுவதற்கான ஒரு சிறந்த வழியாகவும் இருக்கும். கோயம்புத்தூரை சேர்ந்த ரித்திகா மற்றும் யுவஸ்ரீ ஆகிய இரு தோழிகள் இணைந்து ஹாண்ட் பெயின்டிங் மூலம் வால் ஆர்ட் டிசைனிங் செய்யும் தொழிலில் அசத்தி வருகின்றனர்.
“எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல்தான் இந்தத் தொழில் எங்களுக்கு அமைந்தது” என்று பேசத்தொடங்கினார் ரித்திகா. “கடந்த மார்ச் மாதத்திலிருந்துதான் நாங்க இருவரும் இணைந்து வால் ஆர்ட் பெயின்டிங் செய்ய தொடங்கினோம். கேன்வாஸில் வரைந்து பழகிய எங்களுக்கு வால் ஆர்ட் செய்வதற்கான கிடைத்த முதல் ப்ராஜெக்ட் ஒருவித நம்பிக்கையையும் ஊக்கத்தையும் கொடுத்தது. இப்போது வீடு, கஃபே, ரெஸ்டாரன்ட்ஸ், இன்ஸ்டிட்யூஷன்ஸ், கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்ற இடங்களில் சிறப்பாக வால் ஆர்ட் டிசைன்களை செய்து வருகிறோம்.
நான் ஓவியக்கலை தொடர்பான படிப்பையே தேர்ந்தெடுக்க விரும்பினேன். ஆனால், பெற்றோரின் அறிவுறுத்தலால், கணினி துறை சார்ந்து படித்தேன். கல்லூரி படிக்கும் போதே ஒரு பயிற்சி நிறுவனத்தில் பகுதி நேரமாக ஓவியக்கலை ஆசிரியராக பணியாற்றினேன். யுவஸ்ரீ என் கல்லூரியில் வேறு டிபார்ட்மென்டில் படித்துக் கொண்டிருந்தார். அவரும் ஓவியக்கலையில் ஆர்வமுள்ளவர் என்பது தெரிந்தது. இருவரும் கல்லூரி மூலம் நடைபெறும் ஓவியப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொள்வோம். அங்குதான் எங்களுக்கு அறிமுகம் ஏற்பட்டது. இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை முடித்தேன்.
ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் நான் சொந்தமாக ஓவியக்கலை பயிற்சியளிக்க தொடங்கினேன். நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகளையும் எடுத்து வந்தேன். என் திருமணத்திற்குப் பின்னரும் இது தொடர்ந்தது. அதன்பின்னர் நான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை செய்யத் தொடங்கலாமே என்று தோன்றியதும் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். எனக்கு க்ரோச்சே பிடிக்கும் என்பதால், க்ரோச்சே கைவினைப் பொருட்களை தயாரித்து வார இறுதி நாட்களில் ஸ்டால் அமைத்து விற்பனை செய்து வந்தேன்.
பின்னர் ஐடி பணியில் ஆர்வமில்லாததால் சில மாதங்களில் அதிலிருந்து விலகிவிட்டேன். நான் தயாரிக்கும் க்ரோச்சே பொருட்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்ததால் அவ்வப்போது ஸ்டால் அமைத்தும், ஆர்டர்கள் எடுத்தும் விற்பனை செய்து வருகிறேன். ஓவிய பயிற்சி வகுப்புகளும் தொடர்கிறது. கடந்த மார்ச் மாதம் என் கணவரின் நண்பர் மூலமாக வால் ஆர்ட் ப்ராஜெக்ட் வந்தது. பெரிய அளவிலான படைப்பு என்பதால் என்னால் தனியாக வேலையை முடிக்க முடியாது. உடனே என் நினைவுக்கு வந்தது யுவஸ்ரீதான். இருவரும் கலந்துரையாடி அந்த வேலையை செய்து முடித்தோம்” என்றார்.
யுவஸ்ரீ பேசத் தொடங்கியதில், “கல்லூரி படிக்கும் காலத்திலேயே, பல பொட்டிக் கடைகளில் ஃபேப்ரிக் பெயின்டிங் டிசைனர் ஆக பணியாற்றினேன். வீட்டில் ஓவிய பயிற்சி வகுப்புகளும் எடுத்துக்கொண்டிருந்தேன். படிப்புக்கு பின்னர் ஐடி துறையில் வேலைக்கு சேர்ந்தேன். ஆனால், ஒரு வருடம் மட்டுமே வேலை செய்துவிட்டு பணியிலிருந்து விலகிவிட்டேன். என் திருமணத்திற்குப் பின்னர் முழு நேரமாக ஓவிய பயிற்சி வகுப்புகள் எடுத்து வந்தேன்.
குழந்தை பிறப்புக்கு சில மாதங்களுக்கு முன்பு இடைவெளி எடுத்து, அடுத்த சில மாதங்களில் மீண்டும் வகுப்புகள் எடுப்பது, ஃபேப்ரிக் பெயின்டிங் செய்வது போன்றவற்றை தொடர்ந்தேன். கடந்த மார்ச் மாதம் ரித்திகாவுடன் இணைந்து வால் ஆர்ட் ப்ராஜெக்ட் செய்ய தொடங்கினேன். அங்கு இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் டிசைனிங் செய்தோம். பார்க்கிறவர்கள் எல்லோரும் எங்க படைப்பை பாராட்டினார்கள். அப்போதுதான் எங்கள் இருவருக்கும் இதை ஒரு தொழிலாக தொடங்கலாம் என்கிற யோசனை வந்தது.
அடுத்த சில நாட்களில் விசிட்டிங் கார்டு தயார் செய்துவிட்டோம். ‘வண்ணச்சித்திரம்’ என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் தொடங்கினோம். எங்களுடைய முதல் பதிவிற்கே அதிக வரவேற்பு இருந்தது. முதல் ப்ராஜெக்ட்டிலேயே மற்ற சில ஆர்டிஸ்டுகளை வேலைக்கு எடுத்திருக்கலாம் என்ற யோசனை வரவில்லை. 1200 சதுரடி பரப்பளவிலான பெரிய சுவர் ஓவியத்தை நாங்க இருவர் மட்டுமே செய்து முடித்தோம். இவ்வாறு எந்தவித திட்டமிடலும் இல்லாமல்தான் முதல் ப்ராஜெக்ட் அமைந்தது.
அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கியதும் ப்ராஜெக்ட்டை பொறுத்து ஃப்ரீலான்ஸாக ஆர்டிஸ்டுகளை சேர்த்துக் கொள்கிறோம். நிறைய அனுபவத்திற்கு பின்னர், இப்போது எங்களுடைய ஒவ்வொரு ப்ராஜெக்ட்டும் நன்றாக திட்டமிடப்பட்டதாக இருக்கும். என்ன ஓவியம், எத்தனை பேர், எத்தனை நாட்களில் முடிக்க போகிறோம் போன்ற எல்லாவற்றையும் பிளான் செய்துவிடுவோம். வேலையை தொடங்குவதற்கு முன் சைட் விசிட் செய்வது, எங்களுக்கென்று சில க்ரைட்டீரியா வைத்துக்கொள்வது என எல்லாவற்றையும் வெகு விரைவாக கற்றுக்கொண்டு ஒரு தொழிலாகவும் மற்ற ஆர்டிஸ்டுகளுக்கும் கிடைக்கும் வேலைவாய்ப்பாகவும் இதை அமைத்துக் கொண்டோம்” என்றார்.
சுவர் ஓவியங்கள் மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றன என்பதை குறிப்பிடும் ரித்திகா, தங்கள் கலைப் படைப்புக்கான வரவேற்பு பெருகுவது குறித்து பகிர்ந்தார். “நாங்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே ஓவி யர்கள் என்றாலும் கேன்வாஸ் போர்டில்தான் அதிகம் வரைந்திருப்போம். முதலில் சுவர் ஓவியம் வரையும் போது சற்றே சவாலாகவே இருந்தது. ஆனால், எங்களது முதல் படைப்பிலேயே நாங்க பல வருடமாக சுவர் ஓவியம் படைப்பவர்கள் என்கிற கண்ணோட்டத்திலேயே பாராட்டுகள் வந்தன.
நிறைய மக்கள் தங்கள் வீடுகளில் கூட வால் ஸ்டிக்கரை விட வால் ஆர்ட் செய்வதையே விரும்புகின்றனர். ஸ்டிக்கர் ஒட்டும் போது ஏதோ ஒரு இடத்தில் டேமேஜ் ஆனாலும், அதை முழுவதுமாக நீக்க வேண்டியுள்ளது போன்ற நிறைய காரணங்களால் ஸ்டிக்கர்களை தவிர்க்கின்றனர். ஓவியங்களால் சுவர்களை அலங்கரிக்கும் போது அவை உயிரோட்டமுள்ளவையாகவும் மனநிறைவாகவும் இருக்கும். பலரும் தங்கள் பெட் ரூம்களில் கூட சுவர் ஓவியங்களை எதிர்பார்க்கின்றனர். குழந்தைகளுக்கான அறைகளும் வண்ணமயமாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களும் கைகளால் வரையப்படும் ஓவியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அலுவலகத்தின் இன்டீரியரை அழகுப்படுத்துகின்றனர்.
ரெஸ்டாரன்டுகளில் சுவாரஸ்யமான, நகைச்சுவையான, சிந்திக்கக்கூடிய ஓவியங்களால் அலங்கரிக்கிறோம். பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் அவர்களின் விருப்பத்தை சொல்வார்கள், நாங்களும் சில யோசனைகளை தருவோம், கலந்துரையாடி இறுதியாக ஒரு படைப்பை திட்டமிட்டு அதை சிறப்பாக செய்துவிடுவோம்” என்ற ரித்திகாவை தொடர்ந்தார் யுவஸ்ரீ.
“நாங்க இருவருமே திருமணம் ஆனவர்கள். எனக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் எங்களது குடும்பத்தினர் பெரும் ஆதரவாக இருந்து வருகின்றனர். குழந்தையை விட்டு வெளியில் செல்வது குற்ற உணர்வாக இருக்கும். ஆனால், எங்களுக்கென்ற ஒரு அடையாளமும், பிடித்தமான ஒரு வேலையும் அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம். சுயாதீனமான வேலை என்பதால் குறிப்பிட்ட வேலை நேரம் என்பதெல்லாம் இதில் கிடையாது.
சமயங்களில் 10 மணி நேரத்திற்கும் மேலாக கூட வேலையை தொடர்வோம். அப்போதெல்லாம் எங்கள் இருவரின் கணவர்கள் அவர்களின் வேலையை முடித்துவிட்டு எங்களுடன் வந்திருப்பார்கள். கோயம்புத்தூர் மட்டுமின்றி பழனி, கரூர் போன்ற ஊர்களுக்கு சென்று வேலை செய்துள்ளோம். சென்னை, பெங்களூரு போன்ற ஊர்களில் இருந்தும் அழைக்கின்றனர். பெண்கள் நிச்சயம் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும். நமக்கு பிடித்ததை செய்ய எந்த தயக்கமும் வேண்டாம்” என்று பேசி முடித்தார்.
ரித்திகா மற்றும் யுவஸ்ரீயின் இந்தப் பயணம், திருமணத்திற்குப் பின்னர் தங்களது கனவுகளைத் தொடர விரும்பும் பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.
தொகுப்பு : ரம்யா ரங்கநாதன்


