Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இது பெண்ணின் கூட்டுவிவசாய தொழிற்புரட்சி!

நன்றி குங்குமம் தோழி

‘நாலு பெண்கள் ஒண்ணு சேர்ந்தாலே கலகம்’ன்னு சொல்வாங்க. அந்தச் சொல்லை நாங்க மாற்றி இருக்கிறோம் என்கிறார்கள் இன்றைய பெண்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து ஆக்கப்பூர்வமான மாற்றத்தையும் உருவாக்குகின்றனர். இன்று பெண்களுக்கான அமைப்புகள், மகளிர் குழுக்கள் மற்றும் வுமன் ஃபோரம்கள் செயல்பட்டு வருவதே இதற்கு உதாரணம். இதனை மேலும் உண்மையாக்கும் விதமாக சேலத்தில் பெண்கள் கூட்டாக இணைந்து ஆண்களுக்கு நிகராக விவசாய தொழிற்புரட்சி செய்து வருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஒருவர் இருவர் அல்ல பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயப் பெண்கள் இணைந்து சத்தமின்றி சாதித்து வருகிறார்கள்.

‘வீரபாண்டி களஞ்சிய ஜீவிதம் புரொடியூசர் கம்பெனி யூனிட்’ என்ற பெயரில் இயங்கி வரும் விவசாய பொருள் உற்பத்தி நிறுவனத்தினை முழுக்க முழுக்க பெண் விவசாயிகள் நிர்வகித்து வருகிறார்கள். தற்போது 2555 பெண் விவசாயிகள் பங்குதாரர்களாக இணைந்துள்ளனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பெண்கள் இந்த கூட்டமைப்புடன் சேர்ந்து விவசாய பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிறுவனத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து அதன் முதன்மை நிர்வாக இயக்குநர் சிவராணியிடம் விரிவாக கேட்ட போது...

‘‘எங்க ஊர் சேலம். வீரபாண்டி தொகுதியில் மட்டும் சுமார் பத்தாயிரம் பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களை நடத்தி வருகிறோம். அதில் விவசாயம் பார்ப்பவர்களுக்கு மட்டும் தனியாக ஒரு குழுவினை அமைத்து அதனை பதிவும் செய்திருக்கிறோம். ஒரு குழுவில் 5 முதல் 20 பேர் என 2555 பேர் இணைந்திருக்காங்க. சேலம் வீரபாண்டி வட்டார களஞ்சியம் தொண்டு நிறுவனம்தான் எங்களை வழிநடத்தி வருகிறார்கள். இது ஒரு அறக்கட்டளையாகவும் செயல்பட்டு வருகிறது.

இதன் மூலம் மகளிர் குழுக்கள் அமைத்து அவர்களுக்கு மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்களை பெற்றுத் தருதல், சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி, இளம்பெண்களுக்கு உதவுதல், வங்கிக் கணக்கு தொடங்குதல், வேலைவாய்ப்பு பயிற்சி வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் எனப் பல உதவிகளைச் செய்கிறார்கள். எங்க தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை பார்த்து நபார்டு வங்கியின் திட்டத்தின் மூலம் விவசாயம் பார்க்கும் பெண்களை ஒன்று சேர்த்து விவசாய பொருட்கள் உற்பத்தி நிறுவனம் அமைக்க ஆலோசனை கொடுத்தார்கள். அதன் படி தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த நிறுவனத்தை அமைத்தோம்’’ என்றவர், அதன் ஆரம்பகட்ட பணிகள் முதல் தற்போதைய உற்பத்தி பணிகள் வரை விளக்கினார்.

‘‘11 நபர்கள் இயக்குநராக இந்த அமைப்பில் செயல்பட்டு வருகிறார்கள். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் புது இயக்குநர்களை தேர்வு செய்வோம். இந்த அறக்கட்டளை முறையாக பதிவு செய்யப்பட்டு 26 வருடங்களாக இயங்கி வருகிறது. அறக்கட்டளையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட நலத்திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றியும் வருகிறோம். எங்களின் நடவடிக்கைகளை அரசாங்கமும் வருடந்தோறும் ஆடிட்டிங் செய்வார்கள்.

இந்த அறக்கட்டளை மூலமாக 2017ம் ஆண்டு வீரபாண்டி களஞ்சிய ஜீவிதம் புரொடியூசர் என்ற நிறுவனத்தை துவங்கினோம். அதில் இணைந்த பெண்கள் ஒவ்வொருவரும் பங்களிப்பாக கொடுத்த ஆயிரம் ரூபாயினைக் கொண்டுதான் நிறுவனத்தை தொடங்கினோம். நபார்டு வங்கியும் உதவி செய்தார்கள். இதன் மூலம் நிறுவனம் துவங்கிய நாள் முதல் கடந்த மாதம் வரை 92.30 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்திருக்கிறோம்’’ என்று பெரும் புரட்சி செய்த பூரிப்பில் பேசினார்.

‘‘நிறுவனம் துவங்கி முதல் மூன்று வருடங்கள் மட்டுமே நபார்டு வங்கி எங்களை வழிநடத்தினார்கள். அதன் பிறகு நாங்களே நிர்வகிக்க ஆரம்பித்தோம். குழு பெண்களின் சொந்த விவசாய நிலத்தில் விளையக்கூடிய நிலக்கடலை, தேங்காய், பருப்பு வகைகளை நேரடியாக கொள்முதல் செய்து அதை மதிப்பு கூட்டுப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்கிறோம். அதாவது, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்ெகண்ணெய் போன்ற எண்ணெய் வகைகளை ‘நறுமுகை’ என்று பிராண்ட் பெயரில் விற்பனை செய்கிறோம். தமிழ்நாடு அரசு மூலமாக இயந்திரங்கள் வாங்க உதவி கிடைத்தது. எங்களை போல் நாடு முழுதும் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. எங்களின் உற்பத்தி திறனைப் பாராட்டி பிரதமர் மோடி அவர்கள் எங்களிடம் நேரடியாக வீடியோ மூலம் பேசியது மட்டுமில்லாமல் எங்களை பாராட்டவும் செய்தார். அந்த நிகழ்வு எங்களை மேலும் உற்சாகத்துடன் செயல்பட ஊன்றுகோலாக அமைந்தது’’ என்று கூறுகிறார் சிவராணி.

‘‘இந்தப் பெருமையெல்லாம் நாங்க சாதாரணமாக அடையவில்லை. நிறுவனம் ஆரம்பித்த போது நாங்களும் சில சறுக்கல்களை சந்தித்தோம். முதல் மூன்று வருடம் லாபமே பார்க்கவில்லை. கொரோனா உலகத்தை புரட்டிப் போட்டாலும், நாங்க மீண்டது அந்தத் தருணத்தில்தான். ஊரடங்கு காலத்தில் எண்ணெய் அத்தியாவசிய உணவுப் பொருள் என்பதால் விளைப்பொருட்களை கொள்முதல் செய்ய, தயாரிக்க, விநியோகம் செய்ய அரசாங்கம் கட்டுப்பாடுகளில் சில தளர்வு, சலுகைகளை அறிவித்தது.

அதை நாங்க பயன்படுத்திக் கொண்டோம். மற்ற உற்பத்தி கூட்டமைப்புடனும் இணைந்து அரிசி, புளி, மிளகாய் போன்ற அனைத்து மளிகை சாமான்களையும் வீட்டிற்கே டெலிவரி செய்தோம். சேலம், நாமக்கல், திருப்பூர் என ஏழு மாவட்டங்களிலும் உள்ள எங்களின் உறுப்பினர்கள் அனைவரும் உழைத்தோம். அழிவுப் பாதையில் இருந்த பல உற்பத்தி நிறுவனங்கள் மீண்டது இந்த கொரோனா காலத்தில் தான்’’ என்று சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்.

‘‘தமிழ்நாடு முழுவதும் எங்களைப் போன்ற மற்ற பெண்கள் கூட்டமைப்பு உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து ‘நறுமுகை’ என்ற பிராண்டின் பெயரிலேயே அரிசி, சிறுதானியங்கள், மசாலாக்கள், பருப்பு வகைகள் மேலும் சில பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்குள் அந்தந்த வட்டார விளைப்பொருட்களுக்கு ஏற்றவாறு பொருட்களை மதிப்புக்கூட்டி தயாரிக்க வேண்டும்.

மற்றவர் தயாரிப்பதை நாங்கள் தயாரிக்கக்கூடாது என்பது எங்களுக்குள் இருக்கும் ஜென்டில்மேன் அக்ரிமென்ட். இப்படி தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் பெண்கள் ஒருங்கிணைந்து வேலை செய்து மதிப்புக்கூட்டுப் பொருட்களை சந்தைப்படுத்துகிறோம். விளைப்பொருட்களை கொள்முதல் செய்த 24 மணி நேரத்தில் அதற்கான பணத்தை விவசாயிகளுக்கு அனுப்பிவிடுவோம். இடைத்தரகர்கள் தொல்லை இல்லை. நேரடியாக கொள்முதல் செய்வதால், அதற்கான டெலிவரி கட்டணத்தையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம். இதனால் விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கிறது.

உழவர்கள்தான் எங்கள் வளர்ச்சிக்கு காரணம். அவர்களின் நலன் எங்களுக்கு ரொம்ப முக்கியம். விவசாயத்திற்கு தேவையான இடு பொருட்கள், விதைகள் அனைத்தும் நாங்களே வழங்குகிறோம். இப்போதைக்கு சோளம், நிலக்கடலை, பருப்பு வகைகளுக்கான விதைகளை வழங்கி வருகிறோம். விரைவில் இயற்கை பூச்சிக்கொல்லிகள், உரங்களையும் வழங்க இருக்கிறோம். கடந்த ஆறு ஆண்டுகளில் ஆறு லட்ச மரக்கன்றுகளையும் விற்பனை செய்துள்ளோம்.

மாடித் தோட்டத்திற்கு தேவையான காய்கறி விதைகளையும் வழங்கி பசுமை இந்தியா கனவிற்கும் துணை நிற்கிறோம். எங்க உற்பத்திப் பொருட்களை ஆன்லைனில் விற்க ‘நறுமுகை ஸ்டோர்’ என்ற பெயரில் வெப்சைட்டும் கடந்த வாரம் துவங்கி இருக்கிறோம். சளைக்காத உழைப்பும் விடா முயற்சியும் தான் எங்கள் கூட்டமைப்பு பெண்களின் தாரக மந்திரம்’’ என்கிறார் சிவராணி.

செய்தி:கலைச்செல்வி