நன்றி குங்குமம் தோழி
மைனஸ் 20 டிகிரி கடுங் குளிர், கடல் மட்டத்திலிருந்து 18,000 அடி உயரம், சுவாசிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு என அனைத்தையும் கடந்து எவரெஸ்ட்டில் மாரத்தான் ஓட்டத்தைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் முடித்திருக்கும் ‘கோவைப் புயல்’தான் 30 வயதாகும் நௌஷீன் பானு சாந்த்.மரணத்தின் விளிம்பில் நிற்க வைக்கும் செங்குத்தான மலைப்பாதைகள், திடீரென ஏற்படும் மலைச் சரிவு, இங்கு நடப்பதே பெரும் சவால். ஆனால், அந்த 18,000 அடி உயரத்தில் ஒரு தமிழ்நாட்டுப் பெண், 42 கிலோமீட்டர் தூரத்தை ஓடிக் கடந்துள்ளார். அதுவும் அடுத்தடுத்து மூன்று முறை ஓடியுள்ளார். இந்தாண்டு ‘கல்பனா சாவ்லா’ விருது பெற்றிருக்கும் நௌஷீன் பானு சாந்த் மனம் திறக்கிறார்.
‘‘கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த நான் பள்ளிப் படிப்பை ஓமன் நாட்டில் முடித்தேன். அப்பாவுக்கு கோபிச்செட்டிப்பாளையம் சொந்த ஊர். அப்பா பார்மசிஸ்ட்டாக வேலை பார்த்தார். குடும்பக் கடன்களை அடைக்க 30 ஆண்டுகள் ஓமனில் உழைத்துத் தேய்ந்தவர். அதனால் பள்ளிப் படிப்பை ஓமனில் படிக்க முடிந்தது. பள்ளியிலும், பொறியியல் கல்லூரியில் படிக்கும் போதும் நான் எப்போதுமே முதல் மாணவி.
2017ல் தங்கப் பதக்கத்தோடு கல்லூரியை விட்டு வெளியே வந்த எனக்குச் சமூகம் கொடுத்த அறிவுரை இதுதான், ‘நல்லா படிச்சிருக்கே... ஒரு கார்ப்பரேட் கம்பெனில வேலையில உக்காந்துட்டு, அப்படியே ஒரு கல்யாணத்தைப் பண்ணி செட்டில் ஆக வேண்டிய வழியைப் பார்...’ ஆனால், நான் என் வாழ்க்கையை வித்தியாசமாக அமைத்துக் கொள்ள முடிவு செய்திருந்தேன்.
எனது ரத்தத்தில் வீராங்கனையின் மரபணு கலந்துள்ளது. என் அம்மா கல்லூரியில் படிக்கும் போது சிறந்த கபடி வீராங்கனையாக இருந்தார். NCC கேடட். காவல்துறையில் எஸ்.ஐ வேலை கிடைத்தும், குடும்பச் சூழ்நிலையால் அந்த வேலையை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திருமண பந்தத்திற்குள் தள்ளப்பட்டார். தாயின் நிறைவேறாத கனவுகள்தான் ஆட்கொண்டதுன்னு சொல்ல வேண்டும்.
பொதுவாக மலையேற்றம் பற்றி தெரியும். ஆனால், நான் செய்வது ‘ட்ரைய்ல் ரன்னிங்’ (Trail Running). அதாவது, எவரெஸ்டின் கரடுமுரடான மலைப் பகுதியில் கடுங்குளிரில் ஓடுவது. ‘டென்சிங்-ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தான்’ என்பது உலகின் மிக உயர்ந்த உயரத்தில் நடைபெறும் ஒரு சவாலான சர்வதேச மாரத்தான் போட்டி. டென்சிங் நோர்கே ஷெர்பா மற்றும் சர் எட்மண்ட் ஹிலாரி ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தின் மீது முதன்முதலில் ஏறி வரலாற்றுச் சாதனை படைத்ததைக் கொண்டாடும் விதமாக, இப்போட்டி ஆண்டுதோறும் மே 29 அன்று நேபாளத்தில் நடத்தப்படுகிறது.
இப்பந்தயம் எவரெஸ்ட் அடிப்படை முகாமில் (5,356 மீட்டர்) தொடங்கி, நம்ச்சே பஜாரில் (3,440 மீட்டர்) நிறைவடையும். 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் சிலர் மட்டுமே ஈடுபடும் சவாலான விளையாட்டு. இந்த ஓட்டத்தில் நினைத்தவுடன் யாரும் பங்கெடுத்துக் கொள்ள முடியாது. மலையில் ஓடிய அனுபவம் இருக்க வேண்டும். நான் இதில் பங்கு பெற விரும்புவதாக கூறிய போது, அவர்கள் முதலில் என்னிடம் கேட்ட கேள்வி, ‘நீங்க இதற்கு முன் ஏதாவது மலையில மாரத்தான் ஓடியிருக்கீங்களா’ என்பதுதான்.
நான் சாதாரண மாரத்தானில் ஓடியிருக்கேன் என்று சொன்ன போது, ‘அது போதாது, மலை உச்சியில் லடாக் மாதிரி இடத்தில் ஓடிய அனுபவம் வேண்டும்’ என்று கூறினார்கள். அதற்காக நோபல் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ல பதிவு பண்ணி, 2023ல் லடாக்கில் நடந்த உயர்நிலை மாரத்தானில் ஓடினேன். அதன் பிறகுதான் ‘ட்ரைய்ல் ரன்னிங்’ ஓட தகுதியானவள் என்று சான்றிதழ் ெகாடுத்தாங்க. அதை வைத்துதான் எவரெஸ்ட் மாரத்தானில் கலந்து கொள்ள அனுமதி பெற்றேன். அதைத் தொடர்ந்து எவரெஸ்ட் பேஸ் கேம்பில் (17,600 அடி உயரம்) இருந்து தொடங்கி செங்குத்தான சரிவுகளில் 42 கிலோ மீட்டர் தூரத்தை ஓடிக் கடந்தேன்.
கல்லூரிப் படிப்பினை முடித்தவுடன் ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். அப்போது, உடல் பயிற்சி செய்ய நேரம் கிடைக்காது. அதனால், தாம்பரத்திலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சைக்கிளில் வருவேன். தற்போது கோவையில் விளையாட்டு உடல்நலம் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன். வருடத்தில் 11 மாதங்கள் சிறுகச் சிறுகச் சேமித்து, உயிரைப் பணயம் வைத்து எவரெஸ்ட் மாரத்தானில் கலந்து கொண்டேன்.
மாரத்தானில் முதல் முதலாகக் கலந்து கொண்ட போது திருமணத்திற்காக பெற்றோர்கள் செய்து வைத்த நகைகளை அடமானம் வைத்துச் சென்றேன். இன்று எனது சாதனைகளை பார்த்து, எங்கள் குடும்பத்திலேயே பல பெண்களின் வாழ்வில் மாற்றம் நிகழத் தொடங்கியுள்ளது. பத்தாம் வகுப்பு முடித்தவுடனேயே திருமணம் செய்து கொள்ளும் வழக்கமுள்ள எங்க குடும்பத்தில் மற்ற உறவுக்காரப் பெண்கள் ‘நௌஷீன் அக்கா இமயமலையிலேயே ஓடும்போது, எங்களால் போலீஸ் ஆக முடியாதா?’ எனக் கேட்டு, இன்று தமிழ்நாடு காவல்துறையில் காவலர்களாகப் பணியில் இணைந்துவிட்டனர்’’ என்றவர், வார விடுமுறை நாட்களில் மேட்டுப்பாளையம், ஊட்டியில் பயிற்சி மேற்கொள்கிறார்.
‘‘நான் ஓடும் ட்ரைய்ல் ரன்னிங் ஒலிம்பிக்ஸில் சேர்க்கப்படவில்லை. 2030ல் பிரிஸ்பேன் ஒலிம்பிக்ஸில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள். அப்படி சேர்க்கப்பட்டால் இந்தியாவிற்காக ஓடி ஒலிம்பிக்ஸ் பதக்கம் பெறவேண்டும். என் படிப்பு மற்றும் விருப்பத்திற்காக நகைகளை அடமானம் வைத்த என் பெற்றோருக்கு, ஒரு வீடு கட்டி வருகிறேன்” என்று நௌஷீன் பெருமையுடன் சொல்கிறார்.
தொகுப்பு: கண்ணம்மா பாரதி


