நன்றி குங்குமம் தோழி
எஸ்.ஆர்.ஜானகி
ஓவியர் பொன்னுசாமிப்பிள்ளை நாடகக் கம்பெனியில் எஸ்.ஆர். ஜானகி அம்மாள் கதாநாயகனாக நடித்து வந்தார். மிக நன்றாகப் பாடுவார். அவரது குரல் கம்பீரமாக இருக்கும். வேடம் புனைந்து மேடைக்கு வந்துவிட்டால் பெண் என்ற நினைவே சபையோருக்கு ஏற்படாது. தோற்றம், நடை, பாவனை எல்லாம் ஆண் போலவே இருக்கும். அவர்கள் நடித்த நாலைந்து நாடகங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்ததும் எங்களுக்கெல்லாம் அவர்கள் மீது பற்றுதல் உண்டாகி விட்டது. முத்தமிழ் கலா வித்துவ ரத்தினம் அவ்வை.டி.கே.சண்முகம் திரைப்படங்கள் வெளிவந்த காலத்தில் மக்களை வெகுவாகத் தன்பால் ஈர்த்தன.
புதிய ஒரு வடிவம் திரையில் சலனப் படமாக தோன்றுவதைப் பார்ப்பதற்காக விழிகள் விரிய வியப்புடன் கூடிய கூட்டம் அது. அதற்கு முன்னர் அவர்கள் பொதுவெளியில் நாடகங்களாகப் பார்த்த அதே புராண, இதிகாசக் கதைகள் திரையிலும் தோன்றின. ஆனால், ஒரே ஒரு வேறுபாடு அதில் இருந்தது. நாடகங்களில் கடைசிப் பார்வையாளனாக அமர்ந்திருக்கும் ரசிகனுக்கும் கேட்கும் விதத்தில் உச்ச ஸ்தாயியில் தங்கள் தொண்டை வறள வசனங்களையும் பாடல்களையும் பேசி, பாடி மகிழ்வித்த கலைஞர்கள் நேரடியாகத் தோன்றவில்லை. அத்தகைய வசனங்களோ, பாடல்களோ எதுவும் இல்லாமல் திரைப்படங்கள் கொட்டகைகளில் பிம்பங்களாகத் திரையில் காண்பிக்கப்பட்டன. ஆனாலும், மக்கள் அதற்காக அந்தப் படங்களைப் புறக்கணித்து விடவில்லை. ஆம்! அவை பேசாத மௌனப் படங்கள்.
அத்தகைய மௌனப் படக் காலத்திலேயே திரையில் தோன்றி நடிக்க ஆரம்பித்தவர் முதுபெரும் நாடகக் கலைஞராக நாடகங்களில் நடித்துப் பேரும் புகழும் பெற்றவர். பின்னர் பேசும் படங்களிலும் தொடர்ந்து நீண்ட பல காலம் திரைப்படங்களில் நடித்த ஆளுமை மிக்க நடிப்புக் கலைஞர் எஸ்.ஆர். ஜானகி. பேசாப்பட காலம்தொட்டே நடிக்க ஆரம்பித்துப் பேசும் படங்களிலும் தொடர்ந்தவர்களில் டி.பி.ராஜலட்சுமி, கே.டி.ருக்மணி, அங்கமுத்து போன்றவர்கள் மட்டுமே நீண்ட காலம் திரைப்படங்களில் நடித்தவர்கள்.
தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி நடிகை என கொண்டாடப்பட்ட டி.பி.ராஜலட்சுமி 1950 ஆம் ஆண்டிலும், ஸ்டண்ட் நடிகை என்று பெயர் பெற்ற கே.டி.ருக்மணி 1947 ஆம் ஆண்டிலும், நகைச்சுவை நடிகையாகக் கொண்டாடப்பட்ட அங்கமுத்து 1979 ஆம் ஆண்டிலும் திரைப்படங்களில் நடிப்பதை முற்றிலுமாக விடுத்து ஓய்வினை மேற்கொண்டவர்கள். இவர்களிலும் 1934 ஆம் ஆண்டு தொடங்கி 1986 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஐம்பதாண்டுகளுக்கும் மேல் நடித்தவர் எஸ்.ஆர்.ஜானகி மட்டுமே. சிறு சிறு வேடங்கள் என்றபோதும் கவனம் பெறும் வகையில் நடித்து ரசிகர்களின் நினைவில் நின்றவர்.
நாடகமே உயிர் மூச்சு..! மாம்பழங்கள் மற்றும் மாடர்ன் தியேட்டர்ஸ் இவற்றால் பெயர் பெற்ற சேலம் மாவட்டத்தில் கள்ளிக்கோட்டை என்ற ஊரில் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்ட ஓர் எளிய குடும்பத்தில் 1905 ஆம் ஆண்டில் பிறந்து வளர்ந்தவர் ஜானகி. திண்ணைப் பள்ளியில் பாடம் பயின்றவர். படிப்புதான் சரியாக வரவில்லை ஜானகிக்கு. ஆனால், நாடகங்களை பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது.
தினந்தோறும் நடத்தப்படும் நாடகங்களை பார்த்து வளர்ந்ததால், இயல்பாகவே நாடகப் பாடல்களும் வசனங்களும் அவருக்கு மனப்பாடம் ஆயின. அதனால், நாடகங்களில் நடிக்க வேண்டும் என்ற பேராவல் அவருக்குள் எழுந்தது. கலையைக் கொண்டாடிக் களிக்கும் மனமும் அவருக்கு இருந்தது. அக்கால நாடகக் கம்பெனிகள் பல பள்ளிப்படிப்பைப் பாதியில் விட்டு வந்த குழந்தைகளுக்கு கல்விக்கூடங்களாகவே திகழ்ந்தன. நாடகத்துக்குத் தேவையான நடிப்பு, பாடல்கள், பயிற்சிகள் இவற்றோடு பாடங்களும் அங்கு சொல்லித் தரப்பட்டன. அதனாலேயே நாடக நடிக, நடிகையர் பலரும் மிக அழகான, சரியான தமிழ் உச்சரிப்போடு ஆற்றொழுக்காக வசனங்களை பேசவும் பாடல்களை பாடவும் நன்கு பயிற்சி பெற்றிருந்தனர்.
பள்ளியில் படிக்கத் தவறிய ஜானகி பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்ந்து பயிற்சி பெற்ற நடிகையாகவும் மாறினார். எஸ்.ஆர். ஜானகியின் வளர்ப்புத் தந்தையாக இருந்தவர் ஓவியர் பொன்னுசாமிப் பிள்ளை. அவர் நடத்தி வந்த தந்திமுகானந்த சபா, ஜானகியை சிறந்த ஓர் நடிகையாக வளர்த்தெடுத்தது. நல்ல கம்பீரமான குரல் வளம் கொண்டவராக அவர் திகழ்ந்ததால் மிக விரைவிலேயே நாடகத் துறையில் நல்ல முன்னேற்றம் கண்டார்.
அக்கால நாடக நடிகையரில் பால பார்ட் (குழந்தை நடிகை) நடிகையாக நடிக்கத் துவங்கி, அடுத்தடுத்த நிலையை நோக்கி முன்னேறி ராஜபார்ட் (கதாநாயகன்) நடிகையாக ஆண் வேடங்களை ஏற்று சிறப்பாக நடித்தார். பொதுவாக நடிகையர் ராஜபார்ட் வேடம் ஏற்பது என்பது சிறந்த நடிப்புத்திறனும் நல்ல வளமான குரல் வளமும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
எஸ்.ஆர்.ஜானகி மட்டுமல்லாமல், வி.பி.ஜானகி அம்மாள், கும்பகோணம் ராஜாமணி அம்மாள், டி.டி.தாயம்மாள், தாணுவாம்பாள், பி.ராஜாம்பாள், எஸ்.என்.விஜயலட்சுமி, டி.எஸ்.வேலம்மாள், கே.பி. சுந்தராம்பாள், என்.எம் சுந்தராம்பாள் போன்ற நடிகையர் பலரும் ராஜபார்ட்டாக ஆண் வேடமேற்று நடித்து, நாடகக் கலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களில் எஸ்.ஆர்.ஜானகிக்கு உள்ள பெருமை என்னவெனில், மிக கம்பீரமாக ஓர் ஆணைப் போலவே ராஜபார்ட் உடையை அணிந்து கொண்டு மேடையில் இங்கும் அங்குமாக அவர் மிடுக்காகவும் கம்பீரமாகவும் நடக்கும்போதே கீழே அமர்ந்திருக்கும் பார்வையாளர்களிடமிருந்து கைத்தட்டல்கள் எழத் தொடங்கி விடுமாம். அத்துடன் அவர் கம்பீரமான குரலில் பாடத் தொடங்கும்போதே மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்யத் தொடங்கி விடுவார்களாம்.
அந்த அளவு மிகச் சிறந்த ஒரு ராஜபார்ட் நடிகையாக வலம் வந்திருக்கிறார். மெலிந்த தோற்றமும், கருப்பு நிறமும் கொண்ட இவரா இவ்வளவு உத்வேகமாகப் பேசி நடிக்கிறார் என ரசிகர்கள் அவரை வியந்து பார்த்திருக்கிறார்கள். கள்ளிக்கோட்டை எஸ்.ஆர். ஜானகி என்ற பெயரிலேயே அக்காலத்தில் அவர் அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்.
ஸ்பெஷல் நாடக நடிகையாகப் பரிமாணம்!
ஸ்பெஷல் நாடக நடிகையாகவும் திகழ்ந்துள்ளார். ஒரு நாடகம் நடக்கிறது என்றால், அதில் அந்த நாடகத்தில் பங்கேற்கும் நடிக, நடிகையர் அனைவருக்கும் பங்கும் பெருமையும் உண்டு. ஆனால், ஸ்பெஷல் நாடக நடிகர், நடிகைகளுக்கு உள்ள மதிப்பு என்பது அவர்களை முன்னிறுத்தியே, அவர்களின் பெயரைக் குறிப்பிட்டே நாடகம் விளம்பரப்படுத்தப்படுவதோடு, அவர்களுக்கு முன்னுரிமை அளித்தே நடத்தப்படும். அவர்களுக்கான ஊதியமும் அதிகம். குறிப்பாகச் சொல்வதென்றால், இக்கால உச்சபட்ச திரைப்பட நடிகர்கள் எவ்வாறு இன்று முதன்மைப்படுத்தப்படுகிறார்களோ அவ்வாறே நாடகங்களில் ஸ்பெஷல் நடிக, நடிகையரும் முன்னிறுத்தப்பட்டார்கள். அவர்களாலேயே நாடகமும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது.
அப்படியான ஒரு ஸ்பெஷல் நடிகையாக எஸ்.ஆர். ஜானகி திகழ்ந்திருக்கிறார். இவ்வரிசையில் கே.பி. சுந்தராம்பாள் போன்ற நடிகைகளும் இன்னும் பலரும் இருந்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்கள் மட்டுமல்லாமல், சிங்கப்பூர், மலேயா, இலங்கை போன்ற பல அயல் நாடுகளுக்கும் பயணித்து நாடகங்களில் வெகு சிறப்பாக நடித்துப் பெயர் பெற்றிருக்கிறார் எஸ்.ஆர்.ஜானகி. மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, பாவலர் பாய்ஸ் கம்பெனி, தேசிகானந்தா பாய்ஸ் கம்பெனி என பல்வேறு குழுக்களுடனும் இணைந்தும் அவர் பங்காற்றியுள்ளார்.
பிறர் நலன் பேணும் பண்பாளர்!
1933 ஆம் ஆண்டில் தன் நாடகக் குழுவினருடன் கோவைக்கு நாடகம் நடத்துவதற்காகச் சென்றபோது மருதாயி அம்மாள் என்பவரது வீட்டில் தங்கியிருக்கிறார். அங்கு தங்கியிருந்த காலத்தில் மருதாயி அம்மாளின் மகள், ஜானகியை வெகுவாகக் கவர்ந்திழுப்பவராக மாறிவிட்டார். ஒரு குழந்தைக்குத் தாயான நிலையில் அந்தப் பெண்ணின் கணவர் அவரை விட்டுச் சென்றுவிட்டார். அதனால், தன் தாயாருடன் பிறந்த வீட்டில் குழந்தையுடன் அவர் தங்கியிருந்தார்.
நல்ல நெடுநெடுவென்ற உயரமும், அழகான கவர்ந்திழுக்கக்கூடிய தோற்றமும், கம்பீரமான குரலுடனும் அந்தப் பெண் இருந்தார். அந்தக் குரல் ஜானகியை சுண்டி இழுத்துக்கொண்டே இருந்தது. இவ்வளவு லட்சணமான தோற்றமும் குரல் வளமும் கொண்ட அந்தப் பெண்ணை தன் நாடகத்தில் பங்கேற்க வைக்க வேண்டுமென ஜானகி விரும்பினார். அது பற்றி அந்தப் பெண்ணுடனும் கலந்து பேசினார். அவருக்கும் நாடகத்தில் நடிப்பதில் விருப்பம் இருந்தாலும், ‘தன் தாயார் தயவில் இருக்கிறோம்; அவர் என்ன சொல்வாரோ?’ எனத் தயங்கினார். தாயார் மருதாயி அம்மாளிடம் அனுமதி பெறும் பணியையும் ஜானகியே மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டதோடு, தன் குழுவிலும் அப்பெண்ணை இணைத்துக் கொண்டார்.
‘தூக்குத் தூக்கி’ என்ற நாடகத்தில் நடிப்பதற்கான பயிற்சியளித்து அப்பெண்ணைத் தன்னுடைய தோழியாகவே நடிக்க வைத்ததன் மூலம் அவரை நாடக மேடைக்கு அழைத்து வந்த பெருமைக்குரியவரானார் ஜானகி. அந்தப் பெண்தான் பின்னாளில் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகையாக, வில்லியாக நடித்துப் பெரும் புகழ் பெற்ற நடிகையாக மாறிய சி.டி.ராஜகாந்தம்.
சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த ராஜகாந்தம், கைக்குழந்தை இருந்ததால் தொடர்ச்சியாக நாடகங்களில் நடிக்க இயலாத நிலை. நாடகக் குழுவுக்குள் சேர்ந்து இயங்காமல், அவர்கள் அழைக்கும் நேரங்களில் மட்டும் சென்று சில கதாபாத்திரங்களில் நடித்துக் கொடுத்தார்.
1930களில் இவ்வாறு அமெச்சூராகச் சென்று நடித்துக் கொடுத்தால், அதற்கு ஒரு ரூபாய் ஊதியம் அளிப்பார்கள். இவ்வாறு வாரத்தில் மூன்று நாட்கள் சென்று நடிப்பதன் மூலம் கிடைத்த மூன்று ரூபாய் வருமானம் அவருக்கும் அவருடைய சின்னஞ்சிறு மகளுக்கும் மிகப்பெரிய வாழ்வாதாரமாக இருந்தது. இவ்வாறு ஒரு ரூபாய் ஊதியம் பெற்றவர் பின்னாளில் பத்தாயிரம் ரூபாய் ஊதியம் பெறும் அளவுக்கு முன்னேறினார். கணவரால் கைவிடப்பட்டு தனித்து நின்ற ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் எஸ்.ஆர்.ஜானகி. இவர் மட்டுமல்லாமல், பலருக்கும் இதுபோல் பல உதவிகளைச் செய்து நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பலரும் நடிப்பதற்கு உதவிய பண்பாளர்.
நாட்டுப் பற்றும் நாடகப் பற்றும்!
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நாடகங்கள் நடத்துவதற்கும் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. நாட்டுப்பற்று, விடுதலை வேட்கையைத் தூண்டும் பாடல்களை பாடக்கூடாது; மீறிப் பாடினால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற சட்ட ரீதியான அச்சுறுத்தலும் இருந்தது. அதையெல்லாம் மீறி நாடக மேடைகளில் சுதந்திர வேட்கையைத் தூண்டும் பாடல்களை பாடிக் கைதானவர்கள் பலர். அவர்களில் முக்கியமான பெண்கள் கே.பி.ஜானகி, கே.பி.சுந்தராம்பாள், டி.எஸ். வேலம்மாள், ஹார்மோனியக் கலைஞர்களான எம்.ஆர். கமலவேணி, எஸ்.ஆர். ரமாமணி இவர்களுடன் எஸ்.ஆர். ஜானகியும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாட்டுப் பற்றிலும் நாங்கள் கொஞ்சமும் குறைந்தவர்கள் அல்ல என்பதையும் இவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
கும்பகோணம் பாலாமணி என்ற நாடக நடிகை பெண் கலைஞர்களை மட்டுமே கொண்ட குழுவை அமைத்து, நாடகங்களை நடத்திப் பெரும் புகழ் பெற்றவர். பாலாமணியின் நாடகங்கள் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டன. கும்பகோணத்தில் நடைபெறும் இவருடைய நாடகங்களை பார்ப்பதற்காக தஞ்சாவூர், மயிலாடுதுறையிலிருந்து ‘பாலாமணி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் சிறப்பு ரயில்கள் விடப்பட்டன என்றால், மக்கள் எந்த அளவுக்கு நாடகக் கலைஞர்களுக்கும் அவர்களின் நாடகங்களுக்கும் மதிப்பளித்திருக்கிறார்கள் என்பதை உணர முடியும்.
அவருடன் இணைந்து எஸ்.ஆர்.ஜானகி ராஜபார்ட் வேடத்தில் நடித்துள்ளார். குறிப்பாக இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘தாரா சசாங்கம்’ என்ற நாடகம் மிகவும் புகழ் பெற்றது. அதே நேரம் சர்ச்சைக்குரியதும் கூட. சசாங்கன் (சந்திரன்) பிரகஸ்பதியின் சீடன்; தாரையோ குருவான பிரகஸ்பதியின் மனைவி. குரு பத்தினி! அந்த தாரை சசாங்கனுக்கு நிர்வாணக் கோலத்தில் நின்றுகொண்டு எண்ணெய் தேய்த்து விடும் காட்சி அக்காலத்தில் ஒரு சாராரால் கண்டனத்துக்கு ஆளானது. பாலாமணி மெல்லிய ஸ்கின் கிளாத் அணிந்து கொண்டு நடித்திருந்தார்.
சசாங்கனாக நடித்தவர் எஸ்.ஆர். ஜானகி. அக்காலத்தில் இந்நாடகம் மிகப் பிரபலமான புராணக் கதையாகக் கொண்டாடப்பட்டது. பின்னர் இது தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. எஸ்.ஆர். ஜானகி நாடகத் துறையில் சிறப்பான பங்களித்தமைக்காக தமிழ்நாடு அரசு 1974 ஆம் ஆண்டில் கலைமாமணி விருதினை வழங்கி அவரைக் கௌரவித்துள்ளது.
தாயாகவும் பாட்டியாகவும் பரிமளித்தவர்…
திரைப்படங்களில் ஜானகியின் பங்களிப்பு என்பது தாயார் மற்றும் பாட்டி வேடங்கள் மட்டுமே. பல படங்களிலும் அவ்வாறே அதிகமாக நடித்தவர். ‘நல்ல தம்பி’ திரைப்படத்தில் கம்பீரமான தோற்றத்தில் மருத்துவராகத் தோன்றுவார். அவருடன் டி.ஏ.மதுரம் செவிலியராக, சொப்பனபுரி ஜமீன்தாரிடம் இருந்து மருத்துவமனைக்கு நன்கொடை பெற்று வருவதாகவும் மருத்துவரான ஜானகியிடம் சொல்லிவிட்டுச் செல்வார். சிறு காட்சிதான் என்றாலும் அதையும் ஜானகி சிறப்பாகவே செய்திருப்பார்.
‘மாமன் மகள்’ திரைப்படத்தில் எதைக் கண்டாலும் பயப்படும் தன் பேரனுக்கு (ஜெமினி கணேசன்) பயம் போக்கும் தாயத்தைக் கட்டி விடுவதாகப் பொய் சொல்லி, ஏதோ ஒரு கயிற்றைக் கையில் கட்டிவிடுவார். பேரனும் அது மந்திரித்த கயிறு என்ற நம்பிக்கையில் மன பலம் கொள்வார். இக்காட்சி மூட நம்பிக்கைகளை எதிர்ப்பதாகவும் அமைந்திருக்கும். இன்றைக்கு பலரது கைகளிலும் கட்டப்பட்டிருக்கும் வண்ண வண்ணக் கயிறுகளை பார்க்கும் போதெல்லாம் அந்தக் காட்சி நினைவில் எழும். மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் இவர்களின் மனநிலை குறித்தும் வருத்தம் மிகும்.
அசல் வாழ்க்கையில் எவ்வாறு பிறருக்கு உதவும் குணத்துடன் வாழ்ந்தாரோ, அதேபோன்று சில படங்களிலும் அவர் நடித்துள்ளார். ‘பார் மகளே பார்’ படத்தில் வீட்டை விட்டு வெளியேறும் சந்திரா (விஜயகுமாரி) சென்று சேரும் இடம் ஒரு ஆதரவற்றோருக்கான இல்லம். அதன் காப்பாளராக, சந்திராவை அன்புடன் பாதுகாக்கும் அன்னையாகவும் அவர் நடித்திருப்பார்.
‘பாகப்பிரிவினை’ படத்திலோ மருத்துவ சிகிச்சைக்காக கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் கன்னையன் (சிவாஜி கணேசன்), பொன்னி (சரோஜா தேவி) இருவருக்கும் குழந்தையுடன் தங்குவதற்கு இடமும் உணவும் அளித்துக் காப்பாற்றும் பரோபகார உள்ளம் கொண்ட மருத்துவமனை ஆயாவாக நடித்திருப்பார்.
‘ரத்தக் கண்ணீர்’ படத்தின் நாயகன் மோகன் (எம்.ஆர்.ராதா) அயல்நாடு சென்று வந்த நாகரிகப் பித்து கொண்டவன். தன் தாயாரைப் பார்த்து நாகரிகம் இல்லாமல் இருப்பதாகக் கடிந்து கொள்வதுடன், அவரை கவுன் போட்டுக் கொள்ளச் சொல்லி வலியுறுத்துவார். மகனை நினைத்து நொந்து கொள்ளும் தாயாக ஜானகி நடித்திருப்பார். இந்தப் படத்தின் இக் காட்சி வெகுவாகப் புகழ்ந்து பேசப்பட்டது.
‘வந்தாளே மகராசி’ படத்தில் எஸ்.வி.ராகவனுக்குத் தாயார் வேடம். வாய்த்த மருமகளோ (எம்.என்.ராஜம்) வாயாடி, யாருக்கும் அடங்காத திமிர் பிடித்த பெண். மாமியாரை (எஸ்.ஆர். ஜானகி) சற்றும் மதிக்காமல் இருக்கும் மருமகள். மாமியார் தெரியாமல் காலை மிதித்ததைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல், மாமியாரை தரையில் உட்கார வைத்து அவர் காலை ஓங்கி மிதித்துப் பழி தீர்த்துக் கொள்ளும் காட்சி உண்மையிலேயே பார்வையாளர்களுக்கு கோபம் வரவழைக்கும். அப்படி ஒரு அப்பாவி மாமியாராக நடித்திருப்பார் ஜானகி.
இல்லற வாழ்க்கையில் பற்றறுத்துப் போன சன்னியாசிக்கும் தாய்ப்பாசம் உண்டு; தன் தாய்க்கு இறுதிக்கடன் செய்யும் உரிமை உண்டு என்பது ‘பட்டினத்தார்’ படத்தின் மூலம் வெளிப்பட்டது. பட்டினத்தாரின் (டி.எம்.சௌந்தரராஜன்) தாயாக நடித்தவர் எஸ்.ஆர்.ஜானகி. மேலும் சில படங்களில் ஆதரவற்று வறுமையில் உழல்பவராக, மனநலம் பாதிக்கப்பட்டவராக என அவர் ஏற்காத வேடம் ஏதுமில்லை.
அவரது இறுதிப்படம் என அறியப்படும் ‘ஊமை விழிகள்’ படத்தின் பாட்டி, தன் விழிகளாலேயே ரசிகர்களை மிரள வைத்து விடுவார். தன் இறுதிப் படத்தை யாரும் மறந்துவிடாமல் எப்போதும் நினைவில் கொள்ளும் வகையில் தன் தோற்றம், நடிப்பு என பேசு பொருளாக்கியிருப்பார். அப்படி ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி உயிர்ப்புடன் உலவ விட்ட இயக்குநர் அரவிந்த ராஜும் பாராட்டுக்குரியவரே.
வறுமை நிலையில் வாழும் கலைஞர்கள்...
உண்மையில் வருத்தத்துக்குரியது என்னவென்றால், வயதான காலத்திலும் உழைத்துச் சம்பாதிக்க வேண்டிய நிலைமையிலேயே அவர் இருந்தார். நாடக உலகிலும் திரையுலகிலும் கம்பீரமாக உலவிய அவர், பெரிதாக எதையும் சேமித்து வைத்துக் கொள்ளவில்லை. தன் இறுதிக் காலத்தில் ராயப்பேட்டை காவல் நிலையம் அருகேயுள்ள ஒரு சிறு வாடகை வீட்டில் வறுமை நிலையில்தான் இருந்தார்.
தன் காலம் முழுவதும் ஒரு கலைஞராக மக்களை தன் நடிப்பால் மகிழ்வித்தவரின் வாழ்க்கை நிலை பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. அவர் மட்டுமல்லாமல் பல்வேறு நாடக, திரைக்கலைஞர்களின் நிலைமையும் இவ்வாறுதான் இருந்தது; இப்போதும் இருக்கிறது என்பது எவ்வளவு கசப்பான உண்மை. வயது முதுமையின் காரணமாக 1988 ஆம் ஆண்டில் எஸ்.ஆர். ஜானகி காலமானார். ஆனாலும், இன்றைய தலைமுறையினரும் ’ஊமை விழிகள் பாட்டி’ என நினைவு கூரப்படுவது அவரது நடிப்புத் திறமைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் விருது என்றால் மிகையல்ல…
தொகுப்பு: பா.ஜீவசுந்தரி


