நன்றி குங்குமம் தோழி
வழிகாட்டும் Apps...
கோவிட் காலத்திற்குப் பிறகு அனைத்தும் இணைவழி என்றாகிவிட்டது. கல்வி முதற் கொண்டு ஷாப்பிங் வரை எல்லோரும் இணைய வழியினையே நாடுகிறார்கள். ஒரு இடத்தில் இருந்து கொண்டே விரும்பிய பொருளை சுலபமாக வாங்குவதால், இணையவழி ஷாப்பிங்கினைதான் பலரும் விரும்புகிறார்கள். ஆனால், இதில் ஒரு சிக்கல் உள்ளது. இணையத்தில் வாங்கும் போது நாம் எவ்வளவு பணம் செலவு செய்திருக்கிறோம் என்று கணக்கு வைத்துக் கொள்ள தவறுகிறோம்.
இதனால் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் நாம் செலவு செய்கிறோம். அப்படிப்பட்ட இணையவழி ஷாப்பிங்கில் செலவினை மிச்சப்படுத்த உதவுகிறது கேஷ்கரோ ஆப். ஒரு பொருளை வாங்கும் ேபாது, வழக்கமான தள்ளுபடிகள் மற்றும் வங்கிச் சலுகைகள் அளிப்பது வழக்கம். அதனுடன் கூடுதலாக கேஷ்பேக் மற்றும் கூப்பன்களை வழங்குவதே இச்செயலியின் தனித்துவம்.
2013-ம் ஆண்டு சுவாதி பார்கவா மற்றும் ரோஹன் பார்கவா தம்பதியினரால் தொடங்கப்பட்டது. இங்கிலாந்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘Pouring Pounds’ என்ற தளத்தின் அனுபவத்தைக் கொண்டு இவர்கள் இந்தியாவில் இச்சேவையை தொடங்கினர். இந்தியாவின் முன்னணி தொழில்முனைவோரான மறைந்த ரத்தன் டாடா மற்றும் கலாறி கேப்பிடல் போன்ற பிரபல நிறுவனங்கள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.
இந்தத் தளம் அஃபிலியேட் மார்க்கெட்டிங் முறையில் இயங்குகிறது. அதாவது, 1,500-க்கும் மேற்பட்ட பிரபல ஆன்லைன் வணிக நிறுவனங்களுடன் CashKaro ஒப்பந்தம் செய்துள்ளது. வாடிக்கையாளர் இதன் வழி பொருட்களை வாங்கும் போது அந்த நிறுவனம் இந்த ஆப்பிற்கு ஒரு குறிப்பிட்ட கமிஷன் தொகையினை அளிக்கும். தனக்கு கிடைக்கும் கமிஷன் தொகையில் ஒரு பகுதியினை இவர்கள் கேஷ்பேக் அல்லது பரிசுக் கூப்பன் மூலம் திரும்பி வாடிக்கையாளர்களுக்கு தருகிறார்கள்.
இதனால் வாடிக்கையாளர்கள் மட்டுமில்லாமல் விற்பனையாளர்கள் மற்றும் விற்பனை தளம் என மூவருமே பலன் பெறுகிறார்கள். இதன் முக்கிய அம்சம் கேஷ்பேக்காக கிடைக்கும் பணத்தினை வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மாற்றிக் கொள்ளலாம். விழாக்கால விற்பனைகள், கிரெடிட் கார்டு தள்ளுபடிகள் மற்றும் தளங்களின் கூப்பன்களோடு சேர்த்து கேஷ்பேக்கும் கூடுதலாகக் கிடைக்கிறது. மேலும், நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்கு செயலியை பரிந்துரைப்பதன் மூலமாகவும் ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக கிடைக்கிறது.
இந்தச் செயலியினை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.
அதன் பிறகு நீங்கள் ஷாப்பிங் செய்ய விரும்பும் தளத்திற்கு சென்று பொருட்களை பெறலாம். பொருட்களை ஆர்டர் செய்த சில மணி நேரங்களில் கேஷ்பேக் உங்கள் CashKaro கணக்கில் முதலில் நிலுவையில் வைக்கப்படும். பொருட்கள் வாடிக்கையாளர் கைக்கு வந்தடைந்த பிறகு அத்தொகை உறுதி செய்யப்படும். குறைந்தபட்ச தொகை சேர்ந்தவுடன், அதை வங்கிக் கணக்கிற்கு மாற்றவோ அல்லது வர்த்தக வணிக தளத்தில் கிஃப்ட் கார்டுகளாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
பொருளை ரத்து செய்தாலோ அல்லது திருப்பி அனுப்பினாலோ கேஷ்பேக் ரத்தாகிவிடும். வழக்கமாக இணையத்தில் உடைகள், மின்னணுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்குபவர்களுக்கு, சேமிப்பை அதிகரிக்க இது ஒரு சிறந்த பயன்பாட்டுக் கருவியாக விளங்கும். திட்டமிட்டுச் சரியாகப் பயன்படுத்தினால் ஆண்டுதோறும் கணிசமான பணத்தை இதில் மிச்சப்படுத்த முடியும்.
தொகுப்பு: மகி


