நன்றி குங்குமம் தோழி
செல்லுலாய்ட் பெண்கள்
தமிழ் சினிமாவில் ஒரே பெயரில் பல்வேறு நடிகைகள் இருந்தார்கள். அப்படி இருந்தாலும், அவர்கள் தங்கள் தனித்தன்மையால் புகழ் பெற்றவர்களாக எவ்வாறு தங்களை மாற்றிக்கொண்டார்கள் என்பதே இங்கு முதன்மையானது. தமிழ் சினிமாவில் 1940களில் நடிக்க வந்து புகழை அறுவடை செய்வதற்கு முன்னதாகவே, மண வாழ்க்கையை மேற்கொண்டு திரையுலகை விட்டு முற்றிலும் ஒதுங்கிக்கொண்டவர் நடிகை ஏ.சகுந்தலா. இவர் காதலித்து மணந்து கொண்டவர் ஆரம்ப கால சூப்பர் ஸ்டார்கள் இருவரில் ஒருவரான பி.யு.சின்னப்பா. அதன் பிறகும் திரையுலகில் சகுந்தலாக்களுக்குக் குறைவில்லை. மேலும், பல சகுந்தலாக்கள் திரையில் நடிக்க வந்தாலும், மீண்டும் இருவர் மட்டுமே பெரும் புகழை அறுவடை செய்தார்கள்.
அவர்களில் ஜி.சகுந்தலா குறித்து ‘செல்லுலாய்ட் பெண்கள்’ தொடரில் பதிவு செய்திருக்கிறோம். அடுத்தவர், ஏ.சகுந்தலா என்ற சி.ஐ.டி. சகுந்தலா. குழு நடனப் பெண்ணாகப் பல ஆண்டுகள் பல்வேறு திரைப்படங்களில் முத்திரை பதித்தவர். கலாசார நடனம், கவர்ச்சி நடனம் என இரு வகைமையிலும் முத்திரை பதித்தவர். நடனம் மட்டுமல்ல, நடிப்பும் தனக்கு நன்றாக வரும் என கதாநாயகி, வில்லி, வாம்ப் (Vamp) பாத்திரங்கள், குணச்சித்திரம் என தன்னைத் திறமையான நடிகையாக நிரூபித்தவர் சி.ஐ.டி. சகுந்தலா.
1950களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி பேசும் நடிகையரும் தமிழ்த்திரையுலகுக்கு அதிகமாக வந்து கொண்டிருந்த போது, தமிழ் நாட்டிலிருந்து தெலுங்கு பேசும் நெசவாளர் குடும்பத்திலிருந்து திரையுலகை நோக்கி வந்தவர் சகுந்தலா. சேலம் நகரில் உள்ள அரிசிப்பாளையம் இவர் பிறந்த ஊர். அருணாசலம்-ராஜம்மா தம்பதியரின் ஆறு குழந்தைகளை கொண்ட மிகப் பெரிய குடும்பத்தில் கடைக்குட்டிப் பெண் குழந்தையாக ஏழாவது குழந்தையாக, 1939, நவம்பர் முதல் தேதி அன்று பிறந்து, செல்லமாக வளர்ந்தவர் இவர்.
நடனக் கலைஞராவதே வாழ்நாள் லட்சியம்
சிறு வயதிலேயே நடனத்தின் மீது ஓர் அலாதி ஈர்ப்பும் இவருக்கு இருந்துள்ளது. திரைப்படங்களில் பார்த்த, பார்க்கும் திருவாங்கூர் சகோதரிகள் என அறியப்பட்ட லலிதா, பத்மினி, ராகினி, குமாரி கமலா, குசல குமாரி, வைஜெயந்தி மாலா போன்ற நாட்டிய நட்சத்திரங்களின் நடனங்கள் அவரை வெகுவாகக் கவர்ந்திழுத்ததும் அதற்கு முக்கியக் காரணமாய் அமைந்தது. அத்துடன் சகுந்தலாவின் மூத்த சகோதரர்களில் ஒருவரான ஏ.தனக்கோடி, திரையுலகில் ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அதிலும் குறிப்பாக, நாட்டியப் பேரொளி பத்மினிக்கு ஒப்பனைக் கலைஞர் அவர். அதனால், எப்படியாவது பத்மினியின் நடனக் குழுவில் இடம் பெற்றுவிட வேண்டும், திரைப்படங்களில் நடனமாட வேண்டும் என்ற அதீத ஆர்வம் மிகச் சிறு வயதிலேயே சகுந்தலாவுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், ஜோசப் மாஸ்டர் என்பவரிடம் ஐந்து வயதிலிருந்தே தீவிரமாக நடனப் பயிற்சியும் பெற்று வந்துள்ளார்.
தந்தையார் அருணாசலம் நெசவுத்தொழிலுக்கு மூலப்பொருளான நூல் வியாபாரம் செய்வதிலும் ஈடுபட்டு வந்ததால், தன் தொழிலை மேலும் மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காக, சேலத்திலிருந்து திருச்சிக்குக் குடும்பத்தை இடம் மாற்றிக்கொண்டார். 6 ஆம் வகுப்பு மாணவியாக சகுந்தலாவின் படிப்பும் நடனப் பயிற்சியும் திருச்சியில் கன ஜோராகத் தொடர்ந்தன. பாலகிருஷ்ணன் என்ற நட்டுவனார் தொடர்ந்து அவருக்கு நடனப்பயிற்சி அளித்து வந்தார்.
திரைப்படத்தில் நடனமாட வேண்டுமென்ற சகுந்தலாவின் இளம் வயது ஆசையும் விசுவரூபமெடுத்து வளர்ந்தது. அதற்காகக் குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கும் நல்ல பலன் கிடைத்தது. நாட்டியப் பேரொளி பத்மினியின் நடனக் குழுவில் இணைந்து, லலிதா, ராகினி சகோதரிகள் இவர்களோடு தன் நடனத்தை மெருகேற்றிக்கொண்டார். அது பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்பாகவும் அவருக்கு அமைந்தது. ஆனால், அதற்காக அவர் பல சிரமங்களையும் வாழ்க்கையில் சந்திக்க வேண்டியிருந்தது.
ஆம்! கஷ்டங்கள் தானே அடுத்தக்கட்ட வளர்ச்சியைக் கொண்டு வந்து சேர்க்கும். இவருடன் வேறு பல நடனப் பெண்களும் குழுவாக இணைந்து கோல்டன் கேர்ள்ஸ்’ (Golden Girls) என்ற பெயரில் நடனக்குழு அமைத்து தொடர்ந்து பல்வேறு நடன நிகழ்ச்சிகளையும் வெற்றிகரமாக நடத்தி வந்திருக்கிறார்கள். திருச்சியில், நடன வகுப்பில் அவருக்குக் கிடைத்த தோழி சாந்தா, திரைத்துறையிலும் தோழியாகவும் அவருடன் பல ஆண்டு காலம் தொடர்ந்தவர்.(அவளுக்கென்ன…? அழகிய முகம்.. பாடலின் பிரபலம்) இருவருமே சம காலத்தில் திரைத்துறைக்குள் நுழைந்து புகழ் பெற்றவர்கள்.
திரையில் கிடைத்த முதல் வாய்ப்பு
இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான மிக பிரமாண்ட படைப்பான ‘காத்தவராயன்’ திரைப்படத்தில் குழு நடனப் பெண்ணாக ஆடக்கூடிய வாய்ப்பு சகுந்தலாவுக்குக் கிடைத்தது. இப்படத்தில் நடனக் கலைஞர்கள் கோபி கிருஷ்ணா, குமாரி கமலா இருவரும் தனித்து ஒரு நடனத்தையும் ஆடியிருப்பார்கள்.
பின்னாளில் நடனக் கலைஞராகவும் கவர்ச்சிகரமான நாயகியாகவும் தமிழ், தெலுங்குத் திரையுலகை அதிர வைத்த ஜோதிலட்சுமி, பேபி ஜோதியாக, கதாநாயகி சாவித்திரிக்கு ஜூனியராக சில நிமிடங்கள் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார். இப்படி பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இப்படத்தின் கதை ஒரு கர்ண பரம்பரைக் கதை. ஏற்கனவே, ‘ஆரிய மாலா’ என்ற பெயரில் 1941 ஆம் ஆண்டில் பி.யு.சின்னப்பா- எம்.எஸ்.சரோஜினியின் நடிப்பிலும் இக்கதை படமாகி, பெரும் வெற்றி பெற்றது.
கதாநாயகி ஆரிய மாலா (சாவித்திரி), தன் காதலன் காத்தவராயனின் (சிவாஜி கணேசன்) நினைவில் மயங்கி உறக்கமின்றித் தவிக்கும் நிலையில் அவனை நினைத்து துயரத்துடன் பாடும், ‘நித்திரை இல்லையடி சகியே… நிம்மதி இல்லையடி….’ என்ற பாடலில் கதாநாயகியின் பின்னணியில் நின்று ஆடும் ஆறு பெண்களில் ஒருவராக முதன்மையானவராக நின்று ஆடினார். அழகான மெலிந்த தோற்றம், சிரித்த முகம், சுறுசுறுப்பான, நளினமான நடன அசைவுகள் போன்ற சிறப்புகள் அவருக்குத் தொடர்ச்சியாக ஏராளமான திரைப்படங்களில் நடனமாடும் வாய்ப்பினை தொடர்ந்து அவருக்கு அளித்தன.
நகைச்சுவை நடிகரின் இணையாக…
நடன வாய்ப்புகளோடு, சிறு சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தன. 1960ல் வெளியான ‘படிக்காத மேதை’ படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனோடு இணைந்து, அன்றைய மகாபலிபுரம் சாலையில் கடலை ஒட்டினாற் போல் செல்லும் சாலையில் ஸ்கூட்டரின் சைட் காரில் அமர்ந்தவாறே செல்லும் உல்லாச சவாரியின் போதும், பின்னர் கடற்கரையிலும் இருவரும் பாடும் ‘பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு கண் பார்வை போடுதே சுருக்கு… டூயட் பாடலும் வெகு பிரசித்தமானவை.
பாடல் காட்சியோடு மட்டுமல்லாமல், தாரிணி(சகுந்தலா)யின் அக்காளும், அவர் கணவர் (டி.பி.முத்துலட்சுமி, டி.எஸ்.துரைராஜ்) இருவரும் இணைந்து ரிடையர்ட் ஆர்மி ஆபீசர் வீட்டு வேலைக்காரியான அவரை, மகள் என பொய் சொல்லி அவரை ராவ் பகதூர் மகனான டி.ஆர்.ராமச்சந்திரனுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக செய்யும் காட்சிகள் சிரிக்க வைக்கும் ரகம். தரமான ஒரு நகைச்சுவைக் காட்சி. இதன் பின்னரும் சூரியகாந்தி, வண்டிச்சக்கரம், முருகனடிமை உட்பட இன்னும் பல படங்களில் நகைச்சுவை நடிகையாகவும் களம் இறங்கியிருக்கிறார்.
1962ல் ஸ்ரீ தர் இயக்கத்தில் வெளியான ‘போலீஸ்காரன் மகள்’ திரைப்படத்திலும் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்திருப்பார்.
பல பெண்களைச் சுற்றி வரும் பிளேபாய் பிரபு வேடத்தில் பாலாஜி. அவர் காரில் செல்லும்போது, ஓர் அழகான இளம் பெண் சைக்கிள் டயர் பங்க்சர் ஆனதால், சாலை ஓரம் சைக்கிளுடன் தவித்துப் போய் நிற்பார். அதைப் பார்த்ததும் காரை நிறுத்தி அப்பெண்ணை வீட்டில் ட்ராப் செய்வதாகச் சொல்லி காரில் அழைத்துச் செல்வார். வீட்டில் யாருமில்லை என அப்பெண் சொல்ல, உடனே அவளை பீச்சுக்குப் போகலாம் என அழைப்பார். அப்பெண் வெகுண்டெழுந்து கோபத்தை வெளிப்படுத்த, உடனே உன்னை எப்படியும் பழி வாங்குவேன் என கோபத்துடன் வெளியேறுவார் பாலாஜி. கோபம் கொள்ளும் இளம்பெண் மாலதியாக நடித்திருந்தவர் சகுந்தலா.
தலைப்பெழுத்தையே மாற்றிய சிஐடி சங்கர்
சிறு சிறு வேடங்களில் வந்து போய்க் கொண்டிருந்தவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை 1970ல் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம்அளித்தார். தமிழில் மூன்று படங்களில் கதாநாயகியாக வாய்ப்பு; தெலுங்கில் இரு படங்களில் நடனம் ஆடும் வாய்ப்பு. அதன் பிறகே மாடர்ன் தியேட்டர்ஸுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார். ஜெய்சங்கருடன் ‘சி.ஐ.டி. சங்கர்’ பட நாயகியான பின் அவரது தலைப்பெழுத்தே சி.ஐ.டி. என மாறியது. மேலும் பிரபலமான நடிகையாக மாறினார். இரண்டாவது படம் ‘ஜஸ்டிஸ் விஸ்வநாதன்’ ரவிச்சந்திரனுடன் நாயகியாக. இரு படங்களிலுமே பாடல்கள் பெரும் ஹிட் ஆயின. மற்றொரு படமான ‘புதிய வாழ்க்கை’ வந்த சுவடே இல்லாமல் போனது.
அதன் பின் நாயகி வாய்ப்புகள் அதிகம் இல்லை. தொடர்ச்சியாக வில்லி, குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்தார். சிவாஜி கணேசன் மாலைக்கண் நோயாளியாக நடித்த முக்தாவின் ‘தவப்புதல்வன்’ படத்தின் வில்லி வாய்ப்பு மிகப்பெரிய வாய்ப்பு. தனக்கு நோய் இருப்பது தன் தாயாருக்குத் (பண்டரிபாய்) தெரியாமல் மறைக்க முயலுவார் கதாநாயகன். அதை வைத்தே பிளாக்மெயில் செய்து பணம் பறிக்க முயற்சி செய்யும் கொடூர மனநிலை கொண்ட வில்லியாக நடித்த சகுந்தலாவை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்திச் சென்றது.
‘பாரத விலாஸ்’ படத்திலும் இதே பாணியிலான பிளாக் மெயில்தான். தொடர்ச்சியாக சிவாஜி படங்களான ‘வசந்த மாளிகை’, ‘நீதி’, ‘பொன்னூஞ்சல்’ போன்ற மிகப்பெரிய படங்களில் கிடைத்த கவர்ச்சி நடன வாய்ப்புகள், எம்.ஜி.ஆர். நடித்த ‘இதய வீணை’ போன்ற பட வாய்ப்புகளும் தொடர்ச்சியாக அவரை திரையுலகில் இயங்க வைத்தன. விஜயலலிதா, ஜோதி லட்சுமி போன்ற கவர்ச்சி நடன மங்கைகள் தெலுங்கில் கோலோச்ச, தமிழில் சகுந்தலா முதல் நிலையில் இருந்தார்.
குணச்சித்திரத்திலும் குறையற நடித்தவர்
‘சினிமா பைத்தியம்’ படத்தில் கவர்ச்சி நடிகையாகவே ‘I Will Tell my beauty’ என்ற பாடலுக்கு நடனமாடுவார். அந்தப் படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பதற்காக ஜெயசித்ராவும், வி.கே.ராமசாமியும் அனுமதி பெற்று வந்திருப்பார்கள். பாடல் காட்சியின் படப்பிடிப்பு இடைவேளையில் ஜெயசித்ராவின் பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்து, தான் அணிந்திருக்கும் குறைந்த அளவிலான உடையின் காரணமாக வெளியில் தெரியும் உடலை ஒரு துண்டினால் மறைத்தவாறு அமருவார். அதைப் பார்த்துச் சிரிக்கும் ஜெயசித்ராவிடம், ‘ஏன் சிரிக்கறீங்க?’ என கேள்வி எழுப்ப, அவரோ கோடிக்கணக்கான ரசிகர்கள் படத்தில் பார்ப்பார்களே என ஏளனமாகப் பேசுவார். ‘இப்படி ஆடுபவர்கள் யாரும் விரும்பி இதைச் செய்வதில்லை. இது என் தொழில், அவ்வளவுதான்’ என்று அவருக்கு பதிலளிப்பார். உண்மையாகவே, அசல் வாழ்க்கையில் சகுந்தலாவின் நிலைமையும் அதுதான். சகுந்தலாவின் ஆரம்ப காலப் படங்களில் அவரது உடை அணியும் பாங்கு மிக நேர்த்தியாகவும் கண்ணியமாகவும் தானே இருந்தது.
தயாரிப்பாளர்கள், ரசிகர்கள், திரைத்துறையின் சூழல் என அனைத்துக்கும் ஏற்ப நடிகைகள் அணியும் உடையின் அளவும் குறைய ஆரம்பித்தது. 70களில் வெளியான ‘வரப்பிரசாதம்’ படத்திலும் சகுந்தலா அருமையானதொரு குணச்சித்திர நடிப்பை வழங்கியிருப்பார். படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு நீதிமன்றக் காட்சி. சாட்சிக்கூண்டில் சேலைத் தலைப்பை இழுத்து உடலை போர்த்தியவாறு சகுந்தலா நின்றிருப்பார். ஒப்பந்தப்படி அவர் நடந்து கொள்ளவில்லை என ஹோட்டல் நிர்வாகம் அவர் மீது வழக்குத் தொடுத்திருக்கும்.
நீதிபதியும் அது பற்றி விசாரிப்பார். சகுந்தலா ஏற்றிருந்தது அந்த ஹோட்டலின் காபரே டான்ஸர் கதாபாத்திரம், தான் ஒப்பந்தத்தை மீறவில்லை. முதலாளிதான் மீறிவிட்டார். நான் ஹோட்டலில் பலர் முன்னிலையில் ஆடுவதற்கு மட்டுமே ஒப்புக்கொண்டிருக்கிறேன். ஆனால், முதலாளியோ தன் முன்பாகவும் நண்பர்கள் சிலர் முன்னிலையில் தனி அறையில் ஆடும்படி வற்புறுத்தினார். அதை நான் ஏற்கவில்லை என பதிலளிப்பார். வழக்கு தள்ளுபடி செய்யப்படும்.
காபரே டான்ஸர் தொழிலில் கிடைக்கும் பணம் போதாமையால், தன் தம்பியின் (விஜயகுமார்) மருத்துவப் படிப்புக்காகக் கூடுதல் பணத் தேவையின் பொருட்டு ஒரு ஓவியருக்கு (ஜெயச்சந்திரன்) மாடலாக இருக்கவும் ஒப்புக்கொள்வார். ஆனால், அந்த ஓவியனோ தன் பாலியல் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பான். அதை மறுத்து எதிர்த்து ஓவியனோடு சச்சரவு எழும் நிலையில், அப்பெண்ணின் தம்பி அங்கு வர பிரச்னை பெரிதாகி அது ஓவியனின் கொலையில் முடியும். இப்படத்திலும் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியிருப்பார் சகுந்தலா. 1970களில் நடித்துக்கொண்டிருந்த அத்தனை கதாநாயகர்களின் படங்களிலும் சகுந்தலா தவறாமல் இடம் பிடித்தார்.
ஏபி.நாகராஜனின் ‘திருமலை தென்குமரி’, ‘கண்காட்சி’ போன்றவை நடனத்துக்கும் பெரும் வாய்ப்பளித்த படங்கள். சகுந்தலாவுக்கு முதலில் வாய்ப்பளித்த ராமண்ணாவின் பெரும்பாலான படங்களில் இடம் பிடித்தார். கே.பாலசந்தர், திருலோகசந்தர், ஸ்ரீ தர், சி.வி.ராஜேந்திரன், நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜி என பலரது படங்களிலும் நடித்தார்.
குழு நடனத்தில் புகழ் பெற்ற பாடல்கள்
குழு நடனப் பெண்ணாகப் பல படங்களில் நடனமாடியிருக்கிறார். அதிலும் முதல் வரிசைக் கலைஞராக பல பாடல்களில் இடம் பிடித்தவர். அதில் பல பாடல்கள் மிகவும் பிரபலமானவை. ‘கல்யாணப்பரிசு’ படத்தின் கதாநாயகி வசந்தியின் (சரோஜா தேவி) கல்லூரித் தோழியாகவும் வந்து போவார். ‘அக்காளுக்கு வளையல்காப்பு’ பாடலிலும் குழுவில் ஆடுவார்.
டி.ஆர்.ராமண்ணாவின் சொந்தப்படமான ‘மணப்பந்தல்’ 1954ல் வெளியானது. இப்படத்தில் பொங்கல் பண்டிகையின் போது ‘காடு வெட்டி பாடுபட்டு நாடு கண்ட தங்க மக்கள் கள்ளமின்றிச் சபதங்கள் பெற வேண்டும்’ என்று எல்லோரும் சபதம் மேற்கொள்ளும் குழுப்பாடல் இடம் பெறும். அதில் ஒவ்வொரு நடனக் கலைஞரும் வட்டி வாங்க மாட்டேன், குடிக்க மாட்டேன் எனப் பாடி ஆடி உறுதியளிப்பார்கள். சகுந்தலா ஆண் வேடத்தில் தோன்றி, ‘சீட்டாட்டம் போட இனி போக மாட்டேன்; திருட்டுத் தொழில் புரிந்து வாழ மாட்டேன்’ எனப் பாடி ஆடுவார்.
‘மாலையிட்ட மங்கை’ படத்தில் டி.ஆர். மகாலிங்கத்தின் கானாமிர்தமான ‘செந்தமிழ் தேன்மொழியாள்’ எப்போதும் மறக்க முடியாத எவர்க்ரீன் பாடல். ‘இரவும் பகலும்’ படத்திலோ ‘கூத்தாடும் கொண்டையிலே கொஞ்சுதடி மல்லிகைப்பூ’ என மென்மையான அசைவுகளுடன் ஆண்களும் பெண்களும் இணையாக ஆடும் குழு நடனம் என பல பாடல்கள் மனதையும் கண்களையும் ஒருசேர மயக்கக்கூடியவை. எம்.ஜி.ஆரின் நூறாவது படமாக உருவான ‘ஒளி விளக்கு’ திரைப்படத்தில் பல பாடல்கள் இனிமையும் இசை நயமும் ஒருங்கே அமைந்தவை.
அதில் சீர்காழி கோவிந்தராஜன்- எல்.ஆர். ஈஸ்வரி குரலில் அமைந்த முரசு நடனம். ஜெமினியின் பிரம்மாண்ட தயாரிப்பாக அமைந்த,‘சந்திரலேகா’ வின் முரசு நடனம் அளவுக்கு இல்லாவிட்டாலும், இரண்டு முரசுகளின் மீது ஆணும் பெண்ணுமாக இரு நடனக் கலைஞர்கள் ஆடும் அற்புதமான நடனம். இதுவும் ஒரு குழு நடனம்தான். அக்காலத்தில் எந்த நேரமும் வானொலியில் ஒலிபரப்பான, ‘மாம்பழத் தோட்டம் மல்லிகைக் கூட்டம், மணக்க வரும் மாலைப் பொழுதோடு…’ செவிகளை மட்டுமல்லாமல் மனங்களையும் கிறங்க வைக்கும் ஒயிலான நடனத்தைச் சற்றும் ஆபாசமின்றி அசத்தலாக ஆடியிருப்பார் சகுந்தலா.
60 ஆண்டுகள் தொடர்ந்த திரைப்பயணம்..!
தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்திலுமாக 600 படங்களுக்கும் மேல் நடித்தவர். தெலுங்குத் திரையுலகிலும் ஒரு சிலரைத் தவிர அனைத்து கதாநாயகர்களுடனும் நடித்தவர். தன் நடனத்தையும் நடிப்பையும் இரு கண் போல் பாவித்தவர். தன் தொழிலை வெறும் பொழுதுபோக்காக மட்டும் நினைக்காமல் உயர்வாக மதித்தவர். அதனாலேயே மிக நீண்ட காலம் அவரால் திரைத்துறையில் நீடித்து நிற்க முடிந்தது. ஏறக்குறைய 60 ஆண்டு காலத் திரைப்பணி. திரைப்படங்கள் மட்டுமல்லாமல் நாடகங்களிலும் நடித்தவர். வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் நடத்தி வந்த நாடகக் குழுவிலும் இணைந்து நடித்து வந்தார்.
தொலைக்காட்சியில் சீரியல்கள் முதலிடம் பிடிக்க ஆரம்பித்த பின் பல முன்னாள் கதாநாயகிகளும் அம்மா, வில்லி வேடங்களை ஏற்க ஆரம்பித்தனர். சகுந்தலாவும் தன் பங்குக்கு சீரியல்
அம்மாவாக மாறிப் போனார். திருமணத்தின் மீது விருப்பமின்றி நீண்ட காலம் தனித்தே இருந்தவர், திரைப்பட விநியோகஸ்தரான விஸ்வம், சகுந்தலாவை விரும்பியதால் அவருடன் மண வாழ்க்கையை ஏற்படுத்திக்கொண்டார். குழந்தைகள் இல்லாத நிலையில் தன் மூத்த சகோதரியின் மகளையே வளர்ப்பு மகளாகவும் ஏற்றுக்கொண்டார். எந்தவிதமான சச்சரவுகளிலும் சிக்கிக் கொள்ள விரும்பாதவர். நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து செயல்பட்டவர்.
மகள் பெங்களூரு வாசி என்பதால் சென்னை, பெங்களூரு என அங்கும் இங்குமாகப் பயணம் மேற்கொண்டு வந்தவர், கணவர் விஸ்வத்தின் மறைவுக்குப் பின் சென்னையில் தனித்திருக்க விரும்பாமல், மகள், மருமகன் விருப்பத்துக்கு ஏற்பவும் நீண்ட கால சென்னை வாழ்க்கைக்கு விடை கொடுத்து பெங்களூருவிலேயே மகளுடன் வசிக்க ஆரம்பித்தார். அதுவும் நீண்ட காலத்துக்குத் தொடரவில்லை. 17, செப்டம்பர் 2024ல் 84 வயதில் பெங்களூருவில் சகுந்தலா என்ற நடன மணியின் வாழ்க்கை முடிவெய்தியது. இத்தனை ஆண்டு கால திரை வாழ்வில் அவருக்குக் கிடைத்த விருது ஈரோடு, கவிதாலயம் இசைப் பயிற்சிப் பள்ளி வழங்கிய ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மட்டும் தான். அது அவரது நாட்டியத் திறனுக்குக் கிடைத்த பரிசு. எந்த வகை நடனத்தை ஆடினாலும் அவர் மிகச் சிறந்த நடன மணிதான் என்பதில் யாருக்கும் எந்த ஐயமுமில்லை.
தொகுப்பு: பா.ஜீவசுந்தரி



