Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பெண்களுக்கு அதிக முதலீடு இல்லாத தொழில்களே சிறந்தது!

நன்றி குங்குமம் தோழி

கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் நிதி சார்ந்த அமைப்புகள்தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள். ஒரே பகுதியைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய 10 முதல் 12 பெண்கள் சேர்ந்து குழு அமைப்பர். 18 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் யார் வேண்டுமானாலும் இக்குழுக்களில் சேரலாம். இக்குழுக்களில் உள்ள மகளிர் குறிப்பிட்ட சிறு தொகையை மாதந்தோறும் வங்கியில் அவர்களின் குழுவின் பெயரில் சேமிப்பர். இந்த சேமிப்பு தொகை மற்றும் அரசு வழங்கும் சுழல்நிதி மூலம் உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் உள்கடனாக வழங்கப்படுகிறது.

சரியான முறையில் செயல்படும் குழுக்களுக்கு கடனாக பெருந்தொகையும் குறைந்த வட்டி விகிதத்தில் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. இந்த கடன் தொகையை பெற்ற பெண்கள் சுயதொழில் தொடங்கி வருமானம் ஈட்டி கடனை திருப்பி செலுத்துவர். கடனை பாக்கி இல்லாமல் திருப்பி செலுத்தும் குழுக்களுக்கு மானியமும் அரசு சார்பில் நேரடியாக வங்கியில் வரவு வைக்கப்படுகிறது.

இவ்வகையில் சுய உதவிக் குழுக்களே பெரும்பாலும் மகளிரின் நிதி சார்ந்த சுமைகளைக் குறைக்க உதவுகின்றன என்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் சரஸ்வதி ஈஸ்வரன். அவர் தங்களின் இராமசாமி சின்னம்மாள் டிரஸ்ட் மூலம் அரசு மற்றும் அரசு சாரா மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கியும் வழிநடத்தியும் வருகிறார். அது மட்டுமல்லாமல் சுய தொழில் பயிற்சி மையத்தையும் அமைத்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி தந்து வீட்டிலும் சமூகத்திலும் மகளிர் சாதிக்க பெரும்பங்கு வகிக்கிறார் சரஸ்வதி ஈஸ்வரன்.

‘‘என் சொந்த ஊர் கோயம்புத்தூர். நான் உணவியல் துறையில் முனைவர் பட்டம் வாங்கினேன். கணவரும் பட்டதாரி. நான் மைசூரில் உள்ள மத்திய உணவு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தேன். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையில் 24 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்து வந்தேன். பணி நிலையில் இருக்கும் போது பெண்கள் முன்னேற்றத்திற்கு ஏதாவது ஒரு வகையில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது என் பேரெண்ணமாக இருந்தது. 2006ல் ஓய்வு பெற்ற பிறகே என்னால் முழுமையாக செயல்பட முடிந்தது’’ என்றவர் தங்களின் அறக்கட்டளை குறித்து கூறத் தொடங்கினார்.

‘‘நானும் என் கணவரும் 1997ல் இராமசாமி சின்னம்மாள் அறக்கட்டளை என்று எங்க மாமனார், மாமியார் பெயரில் வடவள்ளியில் துவக்கினோம். ஆரம்ப கட்டத்தில் பதிவு மட்டும் செய்து எங்க அறக்கட்டளை மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல், பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகளுக்கு உதவி செய்தல், முதியோர் இல்லங்களுக்கு சென்று உதவிகள் வழங்குதல் என சிறு சிறு அளவிலேயே செய்தோம். நானும் பணிகளை விடுமுறை நாட்களில் மட்டுமே கவனித்து வந்தேன். ஓய்வுக்குப் பிறகு அறக்கட்டளை சார்ந்த வேலைகளை முழு ஈடுபாட்டுடன் செய்ய தொடங்கினேன்’’ என்றவர் மகளிர் சுய உதவிக் குழுக்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்த விவரங்களையும் பகிர்ந்தார்.

‘‘குடும்பத்தில் உள்ள பெண்கள் தங்களின் சின்னச் சின்ன செலவுகளுக்கு கூட கணவரையோ தங்கள் பிள்ளைகளையோ சார்ந்தே இருக்கின்றனர். சில சமயங்களில் தங்கள் குடும்பத்தாரிடமே தங்கள் செலவுகளுக்காக பணம் கேட்கும் போது சங்கடமாக இருப்பதாக பெண்கள் சொல்லி வருத்தப்பட்டார்கள். அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு என்ன வழி என்று ஆராய்ந்ததில் சுய உதவிக் குழுக்கள் பற்றி கேள்வி பட்டேன். உடனே பக்கத்தில் உள்ள வங்கிக்கு சென்று சுய உதவிக் குழுவின் இயக்கம் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டேன். இரண்டு வருடங்கள் அதன் தொடர்பான பணிகளை செய்து வந்தேன்’’ என்றவர் கோயம்புத்தூரில் ஏராளமான மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக காரணமாக இருந்துள்ளார்.

‘‘நான் சுய உதவிக் குழு தொடர்பான தகவல்களை அறிந்த பின்பு அறக்கட்டளை மூலமாகவே சுய உதவிக் குழுக்களை தொடங்கினேன். நிறைய பெண்கள் இணைந்தனர். எந்தக் குழுவாக இருந்தாலும் அரசு சார்ந்த வங்கியிலோ அல்லது அமைப்பிலேயோ இணைத்தால் மட்டுமே அனைத்து திட்டப் பயன்களும் அங்கீகாரமும் மற்றும் கடன் தொகைகள் தள்ளுபடி மற்றும் மானியம் போன்ற சலுகைகள் கிடைக்கும் என்பதால் தற்போது அறக்கட்டளை சார்பில் குழுக்கள் தொடங்குவதில்லை. தனி அறக்கட்டளை மூலம் அத்தகைய உதவிகளை தர முடியாது என்பதால் நாங்கள் உருவாக்கிய குழுக்களை அரசுடன் இணைய சொல்லி வழிகாட்டி விட்டோம். யார் வந்தாலும் மகளிர் குழுக்கள் தொடங்க அனைத்து உதவிகளையும் செய்வோம். கூட்டுப் பொறுப்பு குழுக்களையும் அமைத்து அவ்வப்போது உதவி வருகிறோம்.

‘‘நான் உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்பில் வல்லுநர் என்பதால் என்னிடம் வரும் பெண்களுக்கு சிறுதானியங்களில் காலை உணவு தயாரிப்புக்கே அதிகம் முக்கியத்துவம் தருகிறேன். காரணம், சிறுதானிய உணவுகளை சுடச்சுட சாப்பிடும் போது சுவை அதிகம் இருக்கும். சத்தும் அதிகம் கிடைக்கும். அதனால் தோசை மாவு, பணியாரக் கலவை, அடை மிக்ஸ், பொங்கல் மிக்ஸ் என தென்னிந்திய உணவுகளை இன்ஸ்டன்ட் கலவைகளாக கொடுக்க பயிற்சி அளித்தோம்.

அதை உடனே விற்கவும் முடியும். சிறுதானியங்களை பொறுத்தவரை அதன் ஆயுட்காலத்தை உயர்த்த பிரிசர்வேட்டிவ்ஸ் பயன்படுத்த தேவையில்லை. நன்றாக காய வைத்து வறுத்து அரைத்தாலே குறைந்தது ஆறு மாதங்கள் வரை நன்றாகவே இருக்கும். இதை தவிர மசாலாக்கள், சத்து மாவு மிக்ஸ், மால்ட் வகைகள், சிரப்ஸ் என பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் சார்ந்த பயிற்சிகளையும் வழங்குகிறோம்.

பயிற்சி பெற்ற பெண்கள் ஐந்து பேர் குழுவாக சேர்ந்து தொழில் தொடங்குவர். அதுதான் கூட்டுப் பொறுப்புக் குழு. இந்தக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு அரசாங்க மானியங்கள் கிடைக்காது. வங்கிகளில் ஒரு நபருக்கு ஐம்பதாயிரம் வீதம் கடன் தொகைகளை பெற்றுத் தர நான் உதவி செய்கிறேன். கொரோனாவிற்கு பிறகு சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகம் வந்துள்ளது. அரசும் 2023ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது’’ என்றவர் சிறுதானிய தயாரிப்புகளுக்கு மட்டுமே அதிகம் முக்கியத்துவம் தந்து பயிற்சி தருவதாக கூறுகிறார்.

‘‘பாரம்பரிய அரிசியில் கஞ்சி வகைகள், உடல் எடை குறைக்க மற்றும் ஏற்ற மால்ட் வகைகள் செய்யவும் மாம்பழம் போன்ற பருவக் கால பழங்களின் ஜாம், ஊறுகாய், பழச்சாறு தயாரிக்கவும் கற்றுத் தருகிறோம். வல்லாரை, தூதுவளை, முடக்கத்தான் போன்ற மூலிகைகளின் தொக்கு மற்றும் பொடிகள் செய்கிறோம். நல்ல வரவேற்பு உள்ள மதிப்பு கூட்டுப் பொருட்களாக அவை உள்ளன. சிறுதானிய வகைகளில் கேக்குகள், பிரௌனிஸ், பிஸ்கெட்டுகள் செய்யவும் கற்றுத் தருகிறோம். நான் உணவியலில் பட்டம் பெற்ற சில பெண்களையும் பணியமர்த்தியிருக்கிறேன். அவர்களும் பயிற்சிகளை வழங்குவார்கள்.

உணவியல் கல்லூரி மாணவர்களுக்கும் இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்குகிறோம். எங்கள் அறக்கட்டளை மூலம் 2006 முதல் பெண்களுக்கு சுயதொழில் பயிற்சிகளை தந்து கொண்டிருக்கிறோம். அதற்கான நிதி உதவிகளை நபார்டு வங்கி, சிட்பி, தொழிற்முனைவோர் மேம்பாட்டுக் கழகம் குஜராத் ஆகியவை வழங்கி வருகின்றன. தனி அறக்கட்டளை சார்ந்த பயிற்சிகளுக்கு EDI குஜராத்தான் நிதி உதவி செய்கிறது.

ஒவ்வொரு வருடமும் குஜராத்திற்கு மட்டும் ஐந்து முதல் ஆறு புரோகிராம்கள் செய்வோம். ஒவ்வொரு பயிற்சிக்கும் குறைந்தது 50 பெண்கள் இருக்க வேண்டும் என்பது குஜராத் EDIயின் விதிமுறை. அதற்கேற்ப பயிற்சிகள் வழங்குவோம். அவ்வாறு வருடத்திற்கு 250 பெண்கள் என இதுவரை 3200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளோம். பெண்கள் வீட்டிலுள்ள சமையல் பாத்திரங்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை உபயோகித்தே சம்பாதிக்க முடியும். என்னைப் பொறுத்தவரை பெண்கள் அதிக முதலீடு தேவைப்படாத தொழில்களை தேர்ந்தெடுப்பதே சிறந்தது’’ என்கிறார் எண்பது வயதிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கு சத்தமில்லாமல் வழிகாட்டும் சரஸ்வதி ஈஸ்வரன்.

செய்தி:கலைச்செல்வி