நன்றி குங்குமம் தோழி
பெரியார் அறிவுலகத்தை செதுக்கிய பெண் சிற்பி!
கல்லூரி முதல்வரால் துரத்தப்பட்ட 17 வயது பெண் ஒருவரின் போராட்ட குணமும், தன்னம்பிக்கையும் இன்று ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தின் வடிவமைப்புக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?தடைகளைக் கடந்து, சர்வதேச அளவில் சாதித்து, தாயகம் திரும்பி, தன் தேசத்தை கட்டமைக்கும் பெண்ணின் வெற்றிப் பயணமே இது.
80களின் பிற்பகுதியில் சிவில் இன்ஜினியரிங் என்பது ஆண்களுக்கான துறை என்கிற எண்ணம் ஆழமாக வேறூன்றி இருக்க, பெண்கள் இத்துறைக்கு லாயக்கில்லையென 1987ல் திருச்சி என்.ஐ.டி பொறியியல் கல்லூரி வாசலில் தடுக்கப்பட்டவரே, கோயம்புத்தூரில் இன்று பிரமாண்டமாய் உயர்ந்து நிற்கும் ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தை வடிவமைத்த கட்டடக் கலைஞர் டாக்டர் பொன்னி எம்.கான்செசாவ்.
கல்லூரி முதல்வர் துரத்தியும் அவர் பின்வாங்கவில்லை. மீண்டும் அவரிடம் சென்று, ‘இது மத்திய அரசு கல்லூரி. உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தரமுடியாது. என்னை சேர்க்கவில்லை எனில் மெட்ராஸ் ஹைகோர்ட்டில், லீகல் நோட்டீஸ் போட்டு உங்களை கோர்ட்டில் சந்திக்கிறேன்’ எனச் சவால் விட்டிருக்கிறார். அந்த ஒற்றைப் போராட்டம் அவரின் ஒட்டுமொத்த ஆளுமையையும் செதுக்க, ஒரு கதவு மூடப்பட்டால் அதை உடைத்துக் கொண்டு எப்படி உள்ளே செல்வது என்பதை அங்கேயே கற்றுக்கொண்டார். இன்று பொன்னி மாபெரும் கட்டடக் கலைஞராய் தலைநிமிர்ந்து நிற்க அவரின் இந்த போராட்ட குணமே ஆணிவேர்.
என்ஐடியில் படித்த 90% மாணவர்கள் அமெரிக்கா சென்றதைப் போல இவரும் தன் திறமையால் அமெரிக்கா சென்று, புகழ் பெற்ற கார்னெல் பல்கலைக்கழகம், பின்னர் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் என உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படித்து, நியூயார்க் நகரின் புகழ் பெற்ற எட்வர்ட் லாரபி பார்ன்ஸ் (Edward Larrabee Barnes) நிறுவனத்திலும் பணியாற்றியிருக்கிறார். இந்த சர்வதேச அனுபவம் வானளாவிய கட்டடங்களை வடிவமைக்கிற தொழில்நுட்ப அறிவை அவருக்கு கொடுத்திருக்கிறது.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள திட்டங்களில் அமெரிக்காவில் வேலை செய்தவர், நேஷன் பில்டராக வேண்டும் என்ற விருப்பத்திலும், தன் தேசத்தில் பணியாற்றும் நோக்கத்திலும் 30 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவை விட்டு, கணவர் ஆஸ்காருடன் இந்தியா திரும்பி, OPR Architects என்கிற நிறுவனத்தை சென்னையில் நிறுவி கணவரோடு இணைந்து இயங்கி வருகிறார்.
போஸ்ட் டென்ஷன் ஸ்லாப் எனப்படும் பி.டி. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, இந்திய கட்டுமான துறையை அடுத்த கட்டத்திற்கு இவர் நகர்த்தியதன் விளைவு இன்று சென்னை
யில் பல ஐடி பார்க் கட்டடங்கள், வணிக வளாகங்கள் இந்த தொழில்நுட்ப முறையில்தான் கட்டப்படுகின்றன.
தமிழகத்தில் முதல்வர்களாக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், தெலுங்கானாவில் சந்திரசேகரராவ், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடு, தற்போதைய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி என 7 வெவ்வேறு முதலமைச்சர்களுடன் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.
இஸ்ரோவின் ககன்யான் விண்வெளி மையத்தை வடிவமைத்ததுடன், தெலுங்கானாவில் இரண்டே ஆண்டுகளில் கட்டப்பட்ட கோடி ரூபாய் மதிப்பிலான மாநில தலைமைச் செயலக பிரமாண்டக் கட்டிடம், ஆந்திராவில் அமைய உள்ள 3000 கோடி மதிப்பிலான 182 மீட்டர் உயர என்டிஆர் சிலை திட்டம், ரேவந்த் ரெட்டியின் 1000 கோடி மதிப்பிலான பள்ளி திட்டங்கள் என இவரின் பிரமாண்ட படைப்புகள் நீண்டு கொண்டே செல்கிறது. கட்டட வடிவமைப்பில் 200க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
“கட்டடக்கலை என்பது வெறும் செங்கல் கற்களையும், சிமென்டையும் அடுக்குவது கிடையாது. ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையும், அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழப் போகிறார்கள் என்பதையும் வடிவமைப்பது என்கிற பொன்னி ஆஸ்கார், தான் வடிவமைத்த, ‘பெரியார் அறிவுலகம்’ நூலகம் குறித்து விரிவாக உரையாட ஆரம்பித்தார்.‘‘ஒரு பெரிய புத்தகத்தை எடுத்து, அதை அப்படியே நேராக விரித்து வைத்து, பிரமாண்ட கட்டிடமாக மாற்றினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் ‘பெரியார் அறிவுலகம்’ நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் நடத்திய மாபெரும் வடிவமைப்பு போட்டியில் பல முன்னணி ஆர்க்கிடெக்ட்கள் பங்கேற்க, அதில் ஸ்டாலின் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டிசைன்தான் எனது திறந்த புத்தகம் மாடல்.
கோவை நகரின் அறிவாற்றலுக்கான பிரமாண்ட நுழைவாயிலாக அதாவது, கேட் வே மாதிரி சதுர வடிவில் இந்த நூலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஒரு புத்தகத்தை திறக்கும் போது, புதிய உலகில் நுழைவது போல, உள் நுழைந்ததுமே உங்களை வரவேற்பது பிரமாண்ட படிக்கட்டுகளே. அதிலேறி நுழைவது அறிவை நோக்கிய பயணமாய் இருப்பதுடன், முதல் தளத்தை அடைந்ததுமே திரும்பிப் பார்த்தால், கோவை நகரின் மேம்பாலமும், அந்தப் பகுதியின் முழுமையான இயற்கை எழிலும் ஒரே நேர்கோட்டில் கண்களுக்கு விருந்தளிக்கும்.
கட்டிடத்தின் அடிப்படை வரைபடம், ஒரு பட்டாம் பூச்சி வடிவிலும், அதன் இறக்கைகளின் முனை போன்றுள்ள முக்கோண கார்னர்களில், படிக்கட்டுகள்... கழிவறைகள்... சர்வீஸ் ஏரியாக்கள்... மின்சார அறைகளும், நடுவே இருக்கின்ற நீண்ட செவ்வக வடிவ பகுதியை வாசிப்பறைகளாகவும் மாற்றியுள்ளோம்.உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுத் திறனாளிகள், எவ்வித சிரமமின்றி பயன்படுத்த ஏதுவாக, தரைதளத்திலேயே சிறப்பான நுழைவுவாயில்கள், சாய்வு தளங்கள் மற்றும் அதன் இடது பக்கம் பிரத்யேக ஸ்பெஷல் ஸ்பேஸ் லிஃப்ட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல் தளத்தில் இருந்து எட்டாவது தளம் வரை, வெளியே உள்ள இயற்கை காட்சிகள், உள்ளே இருப்பவர் கண்களுக்கு விருந்து படைப்பதுடன், வெப்பம் உள்ளே தாக்காமல், வெளிச்சமும், காற்றும் உள் வருகிற மாதிரி இரட்டைக் கோபுரங்கள் வடிவமைக்கப்பட்டு, சுற்றிலும் கண்ணாடிகளால் பொருத்தப்பட்டுள்ளது. கட்டிடம் கிரே வண்ணத்தில், பார்க்க மாடர்ன் லுக்குடன் மிளிர்கிறது.
ஒரு மாபெரும் நூலகம், அத்துடன் இணைந்த அதிநவீன அறிவியல் மையம், கீழடி அகழாய்வு பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் என மூன்றும் ஒரே இடத்தில், மையப் பகுதியை சுற்றி பின்னப்பட்டு காட்சி தருகிற இக்கலவை, உலகில் வேறெங்கும் இல்லை’’ என்கிறார் வடிவமைப்பாளர் பொன்னி.பழந்தமிழர் வேர்களையும், எதிர்கால தொழில்நுட்பத்தையும், ஒரே கட்டிடத்துக்குள் ஒரு வாசகன் அனுபவிப்பது, அவனின் சிந்தனையை முற்றிலும் வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்வதுடன், மனித அறிவின் பரிணாம வளர்ச்சியை, வெறும் புத்தகங்களில் படிக்காமல், அந்த இடத்தின் மூலமாக உணர்கிற விசயமாகவே இருக்கும் என்கிறார் மிக அழுத்தமாக.
இரண்டாம் தளத்தில், சுதந்திர தினம், பொங்கல் மாதிரியான மக்கள் விழாக்களை கொண்டாடுகிற மாதிரி முற்ற வடிவில், மிகப்பெரிய கோட்டியாட் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய திட்டம் காகிதத்தில் இருந்து நிஜத்துக்கு வர எவ்வித சமரசமும் இல்லாத நிர்வாக முடிவுகள் அவசியம். இந்த ஒட்டு மொத்த திட்டமும், வெறும் கட்டுமான பணி என்பதைத் தாண்டி, மிகச்சிறந்த நிர்வாக முன்னுதாரணமாகவும் மாறியிருக்கிறது.
முந்தைய அரசின் பொதுப்பணித்துறை அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் அத்துறையானது, பெரியார் அறிவுலக கட்டட வடிவமைப்புக்கு பக்க பலமாக நின்றது. இந்த மாபெரும் ஸ்பேஸ் ஏஜ் கட்டடத்தின் ஒட்டுமொத்த எடையையும் தாங்குகிற, ஸ்ட்ரெக்சுரல் டிசைனை திட்டமிட்டு உருவாக்கியவர் புவனேஸ்வரி என்கிற பெண் பொறியாளர். இரவு, பகல் பாராமல் களத்தில் பணியாற்றிய பிற பெண் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் என பெரும்பாலானவர்கள் இதில் பெண்களே. நள்ளிரவிலும் கட்டுமான தளத்தில் நின்று, கான்கிரீட் போடுகிற பணிகளை தலைமையேற்று நடத்தியவர்களும் இவர்களே என்றவாறு விடைபெற்றார்.
பலமாடி கட்டடத்தின் வடிவமைப்பையும், ஆணிவேரான ஸ்ட்ரெக்சுரல் டிசைனையும் பெண்களே உருவாக்கியதும், பல டன்கள் எடையுள்ள கான்கிரீட் கலவைகளை நள்ளிரவில் ஊற்றும் பணிகளை பெண்களே ஈடுபாட்டோடு முன்னின்று நடத்தியதும், அந்தத் துறையின் கற்பிதங்களை சுக்கு நூறாக உடைத்தெரிந்துள்ளது.கட்டுமான துறையில் பெண்கள் நிகழ்த்திய மிகப்பெரிய அமைதி புரட்சியே இது. இந்த சிந்தனை மாற்றமே கட்டட கலையின் உண்மையான வெற்றி.
செய்தி: மகேஸ்வரி நாகராஜன்


