Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பார்வையற்ற செஸ் வீரர்களை ஆதரிக்க வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

பிரக்யானந்தா, வைஷாலி, குகன், அர்ஜுன், திவ்யா தேஷ்முக் உட்பட பல்வேறு இந்திய செஸ் விளையாட்டு வீரர்கள் தொடர் வெற்றிகளை குவித்து நம் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். சமீப காலங்களாக செஸ் என்றாலே நம் நினைவிற்கு வரும் பிரபலமான முகங்களும் இவர்கள்தான். செஸ் உலகில் மற்றொரு பக்கம் பார்வையற்றோருக்கான செஸ் விளையாட்டில் சத்தமின்றி சாதனை செய்து வருகின்றனர் இந்தியாவின் பார்வையற்ற செஸ் விளையாட்டு வீரர்கள்.

பார்வையற்றோருக்கான செஸ் விளையாட்டும் வழக்கமான செஸ் போன்றுதான். செஸ் பலகையின் ஒவ்வொரு சதுரத்திலும் அடிப்பகுதியில் துளைகள் இருக்கும். இது செஸ் காய்களை நகர்த்தி அந்த துளையுடன் பொருத்துவதாக அமைக்கப்பட்டிருக்கும். இதனால் காய்களை தொட்டாலும் அவை கீழே விழாமல் இருக்கும். கருப்பு, வெள்ளை சதுரங்களை கண்டறிவதும் இதில் எளிது. கருப்பு சதுரம் சற்று தடித்து உயரமாக இருக்கும். வெள்ளை சதுரம் தாழ்வாக இருக்கும். இதுபோல செஸ் காய்களை அடையாளம் காண கருப்பு காய்களில் கைகளால் தொட்டு உணரக்கூடிய விதமாக ஒரு புள்ளி இருக்கும்.

வெள்ளை காய்களில் அது கிடையாது. பார்வையற்றோர் செஸ் விளையாட்டின் போது இது போன்ற அடையாளங்களை வைத்து வீரர்கள் காய்களை நகர்த்தி விளையாடுகின்றனர். 2023ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஹிமான்ச்சி ரதி, சன்ஸ்கிரிதி மோரே, வ்ருதி ஜெயின் ஆகிய மூவரும் ஒரு அணியாக வெற்றி பெற்றனர். பார்வையற்றோருக்கான மகளிர் செஸ் விளையாட்டில் சாதனை படைத்த இரண்டாவது மகளிர் அணியினர் என்ற பெருமை பெற்றுள்ளனர்.

“செஸ் விளையாட்டில் பதக்கம் வென்றது மகிழ்ச்சியான தருணம் என்றாலும், அந்தப் பதக்கம் பெறுவதற்கான பயணம் அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. எனக்கு சிறுவயதில் பார்வையிருந்தது. ஆனால், ரெட்டினைடிஸ் போன்ற பார்வை சார்ந்த பிரச்னைகளால் கொஞ்சம் கொஞ்சமாக நான் முற்றிலும் பார்வையிழந்தேன். இந்த பார்வையற்ற நிலையை சமாளிக்க என் பெற்றோர் சிறுவயது முதலே என்னை பழக்கப்படுத்தியுள்ளனர். நான்காம் வகுப்பு வரை வழக்கமான பள்ளியில் படித்த நான் ஐந்தாம் வகுப்பு முதல் பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்ந்தேன். என் வீட்டிலும் அனைவரும் செஸ் விளையாடிக் கொண்டிருப்பார்கள். என் பள்ளியில்தான் முதலில் பார்வையற்றோருக்கான செஸ் பலகையினை அறிமுகம் செய்து வைத்தார்கள்” என்று குறிப்பிடுகிறார் குஜராத்தின் அகமதாபாத்தில் வசிக்கும் பார்வையற்ற செஸ் வீராங்கனை ஹிமான்ச்சி.

மஹாராஷ்டிரா மாநிலம் சதராவில் வசிக்கும் சன்ஸ்கிரிதி தன் தாயாரின் ஊக்கத்துடன் செஸ் உலகில் பயணிக்கிறார். “தொடக்கத்தில் நான் செஸ் விளையாட தயாராக இல்லையென்றாலும், நான் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்று என் தாயார் நினைத்தார். பார்வையற்ற நிலையில் இந்த உலகை எதிர்கொள்ள வேண்டும் என்பதை என் தாயார் எப்போதும் சொல்வார்” என்று குறிப்பிடும் சன்ஸ்கிரிதிக்கு செஸ் விளையாட்டில் கிடைத்த வெற்றியின் மூலம் அவரின் 19 வயதில் மாவட்ட விளையாட்டு அதிகாரியாக அரசு பணி கிடைத்தது.

செஸ் விளையாட்டின் தொடர் வெற்றிகளின் காரணமாக இந்தியா பிரபலமாக இருந்தாலும், பார்வையற்றோருக்கான செஸ் விளையாட்டை(பிரெய்லி செஸ்) பற்றி பலருக்கும் தெரிவதில்லை. ரஷ்யா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளே அதில் பிரபலமாக உள்ளன. ஆனால், நம் இந்திய வீராங்கனைகளான ஹிமான்ச்சி மற்றும் சன்ஸ்கிரிதி போன்றோர் இந்நிலையை மாற்ற விரும்புகின்றனர்.

சமத்துவத்திற்காக போராட விளையாட்டும் ஒரு வாய்ப்பாக இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். தொழில்நுட்பங்களின் உதவியுடன் சிலவற்றை எளிதாக அணுகக்கூடியதாக மாறிவரும் இக்காலகட்டத்தில் எந்த விளையாட்டையும் தேர்ந்தெடுப்பது கடினமாக இருக்காது என்பதையும் குறிப்பிடுகின்றனர். பார்வையற்றோருக்கான செஸ் விளையாட்டு உலகில் பிரபலமாக வெளிப்படவும் நம் இந்தியா அதில் ஆதிக்கம் செலுத்தவும் ஹிமான்ச்சி, சான்ஸ்கிரிதி போன்ற பார்வையற்ற செஸ் வீரர்களை நாம் ஆதரிக்க வேண்டும்.

தொகுப்பு: ஆர்.ஆர்