Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சுவாச மண்டலத்தை பாதுகாக்கும் பயோ-என்சைம்கள்!

நன்றி குங்குமம் தோழி

‘‘இல்லத்தரசிகளின் அன்றாட வேலைகளில் முக்கியமானது பாத்திரம் கழுவுதல். அதிலும் அசைவ உணவுகளை சமைக்கும் நாட்களில் அந்த பளு சற்று அதிகம். அவற்றை சமைக்கும் போது உள்ள விருப்பம் பாத்திரம் கழுவும் போது வெறுப்பாக மாறுகிறது. காரணம், பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பு, கடினமான கறைகளை பார்த்தாலே தேய்ப்பவர்களுக்கு சலிப்பும் எரிச்சலும் ஏற்படுகிறது. அதனாலேயே பாத்திரங்களை சீக்கிரமாகவும் எளிமையான முறையில் சுத்தப்படுத்தவே இல்லத்தரசிகள் விரும்புகிறார்கள். மார்க்கெட்டில் விற்கப்படும் பல லிக்விட்கள், சோப்புகளை பயன்படுத்துகிறார்கள். இதிலுள்ள செயற்கை ரசாயனங்கள் சுவாச மண்டலத்தைத் தாக்கி தீவிர சுவாசப் பிரச்னைகளை உண்டாக்க காரணமாகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த திரவங்கள் சருமத்தை வறண்டு போகச் செய்யும். இதனால் தீவிர சருமப் பிரச்னைகள் உண்டாக்கும். சில சமயம் காய்ந்த பாத்திரங்கள் மேல் வெள்ளையான படிவம் இருக்கும். இது வயிற்று உபாதைகளை உண்டாக்கும். வாசனைக்காக சேர்க்கப்படும் ரசாயனங்களை தாய்மார்கள் சுவாசிப்பதால் நுரையீரல் மண்டலத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும். இதை உணர்ந்த தாய்லாந்தின் விவசாயி டாக்டர் ரோசுகோன் பூம்பன்வோங் ‘பயோ என்சைம்’ (Bio- enzyme) அல்லது ‘ஈ-கோ என்சைம்’ என்ற இயற்கை கழிவு நொதிக்கும் முறையில் உருவான திரவத்தை உருவாக்கினார். இதுவே இன்று உலகளவில் பிரபலமாகி வருகிறது. மண்ணுக்கும் நண்பன்’’ என்கிறார் ‘நல் நிலையம்’ நிறுவனர் கீர்த்தனா அம்மையப்பன். இவர் இயற்கையான முறையில் பயோ என்சைம் திரவங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

‘‘நான் கோயம்புத்தூர் பொண்ணு. எம்.பி.ஏவில் தொழிற்முனைவோர் நிர்வாகம் சார்ந்த படிப்பை முடித்தேன். கணவர் ஐ.டி வேலை. திருமணமான புதிதில் வீட்டில் இருந்தபடியே தையல் மற்றும் ஆரி வேலைப்பாடு செய்து வந்தேன். குழந்தை பிறந்த பிறகு கொரோனா பாதித்தது. அதைத் தொடர்ந்து சருமத்தில் அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்னைகள். வீசிங், சளித்தொல்லை, சைனஸ், வாசனை அலர்ஜி போன்ற நுரையீரல் சார்ந்த தொந்தரவுகளும் ஏற்பட்டன.

டாக்டரிடம் சென்ற போதுதான் பாத்திரம் கழுவும் சோப், லிக்விட் மற்றும் வீடு துடைக்கும் திரவங்கள்தான் இதற்கு காரணம் என்று தெரியவந்தது. அந்த ஒவ்வாமைகளால் பல நாட்கள் வேதனை, வலி மற்றும் தூக்கமில்லாமல் அவதிப்பட்டிருக்கிறேன். இதற்கு மாற்று என்ன என்று தேடிய போது கிடைத்த விடைதான் பயோ என்சைம்’’ என்றவர், பயோ என்சைம் தயாரிப்பு பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் விளக்குகிறார்.

‘‘எனக்கு டிடர்ஜென்ட் பவுடர், டிஷ் வாஷ் லிக்விட் போன்றவை அலர்ஜியை ஏற்படுத்தியதால் சாம்பல், கடலை மாவு, அரிசி மாவு என்று பயன்படுத்தினேன். அப்போது இது குறித்து இணையத்தில் ஆராய்ந்த போது, பயோ என்சைம் பற்றி தெரியவந்தது. அது குறித்து மேலும் தெரிந்துகொள்ள முயற்சித்த போது ஸ்ரீகாந்த்தின் அறிமுகம் ஏற்பட்டது. அவர்தான் தென்னிந்தியாவிற்கே பயோ என்சைமினை அறிமுகப்படுத்தினார். தாய்லாந்து நாட்டு விவசாயியும் பயோ என்சைமை கண்டுபிடித்த ரோசஸ் கோன்னிடம் நேரடியாக சென்று பயோ என்சைம் தயாரிப்பு பயிற்சி பெற்றிருந்தார். அவர் பயோ என்சைம் தயாரிப்பு பற்றி ஒருநாள் பயிற்சி தருகிறார் என்று கேள்விப்பட்டு அதில் சேர்ந்தேன்.

அவர் சொல்லிக் கொடுத்ததை போல் பூந்திக்கொட்டையில்இருந்து பாத்திரம் கழுவ, வீடு துடைக்க, கைக் கழுவ, துணிகளை துவைக்க என ஒவ்வொன்றுக்குமான திரவங்களை தயாரித்தேன். பாத்திரங்கள் முன்பை விட பளபளப்பாகவும் சுத்தமாகவும் இருந்தன. குறிப்பாக எண்ணெய் பிசுக்கு இல்லவே இல்லை. தேய்க்கவும் எளிதாக இருந்தது. அசைவ உணவுகள் சமைத்த பாத்திரத்தில் அதன் வாடையே தெரியவில்லை. என்னுடைய அலர்ஜி பிரச்னையும் நீங்கியது’’ என்றவர் அதன் தயாரிப்பு பற்றி விவரித்தார்.

‘‘பயோ என்சைம் தயாரிப்புக்கு முக்கியமாக தேவைப்படுபவை சிட்ரஸ் உள்ள பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, நார்த்தங்காய் போன்றவை ஆகும். நுரைப்புத் தன்மைக்கு பூந்திக் கொட்டைகள். ஒரு பங்கு நாட்டுச் சர்க்கரை, 3 பங்கு சிட்ரஸ் பழங்கள், 10 பங்கு தண்ணீர். இதனை 1: 3: 10 ரேஷியோவில் கலந்தால் பயோ என்சைம் தயார். இந்தக் கலவையை கலந்த பிறகு பிளாஸ்டிக் கன்டெய்னரில் ஒரு மாத காலம் ஊற வைக்க வேண்டும். தினமும் திறந்து திறந்து மூட வேண்டும். இதன் மூலம் அதில் உருவாகும் அழுத்தம் வெளியேறும்.

முப்பது நாட்களுக்குப் பிறகு காற்றுப்புகாத படி அதன் மேல் பாலிதீன் பை சுற்றி மூன்று மாசம் வைக்க வேண்டும். நடுவில் திறக்கக்கூடாது. 90 நாட்கள் கழித்து திறக்கும் போது அதன் மேற்புறத்தில் வெள்ளை நிற படலம் படிந்திருந்தால், பயோ என்சைம் ரெடியாகிவிட்டது என்று அர்த்தம். அப்படியில்லாமல் வேறு நிறத்திலோ துர்நாற்றம் வீசினாலோ அது பயன்படாது. மற்றொரு முறையில் 45 நாட்களிலும் பயோ என்சைம் தயாரிக்கலாம்.

வீட்டில் தயிருக்கு உறை ஊற்றுவது போல் ஏற்கனவே தயாரித்த பயோ என்சைம் லிக்விட்டை கொஞ்சம் எடுத்து தயாரிக்க போகும் கன்டெய்னரில் ஊற்ற வேண்டும். அதில் நல்ல தரமான பழங்களை சேர்க்க வேண்டும். அழுகிய பழங்களை சேர்க்கக் கூடாது. 45-90 நாட்கள் காத்திருந்தால் சிறந்த எஃபெக்டிவான பயோ என்சைம் கிடைக்கும். அந்த மேஜிக் லிக்விட்டை பூந்திக்கொட்டையில் இன்ஃப்யூஸ் செய்தால் ஒரு வாரத்தில் நமக்கான திரவம் ரெடி’’ என்ற கீர்த்தனா அதன் நன்மைகளை பகிர்ந்தார்.

‘‘எங்களுக்கு திருப்பூரில் சொந்தமாக தோட்டம் உள்ளது. அங்கிருந்து நான் எல்லாவற்றையும் வரவழைத்து பயன்படுத்தி பயோ என்சைம் செய்கிறேன். மூன்று வருடங்கள் வீட்டிற்கு மட்டுமே பயன்படுத்தி வந்தேன். என் கணவர் இதனை நாம் பிசினஸாக செய்யலாம் என்ற யோசனையை சொன்னார். என்னைப் போன்ற இல்லத்தரசிகள் எல்லோரும் கடந்து வரும் முக்கிய பிரச்னை என்பதால் எல்லா பெண்களுக்கும் பயன்படும் என்பதால் நானும் செய்யலாம் என்று முடிவு செய்தேன்.

2021ல் பிசினஸாக ஆரம்பித்தோம். ஆர்கானிக் கடைகளில் எங்களின் பொருட்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். அவர்கள் பங்குபெறும் கண்காட்சியில் எங்களின் பொருளும் விற்பனைக்காக வைக்கப்படும். கண்காட்சிக்கு வந்தவர்கள் இதனை வாங்கி சென்றார்கள். இன்று வரை என்னுடைய வாடிக்கையாளர்கள் இதை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்.

பயோ என்சைம் பயன்படுத்தும் போது என் குடும்பத்திலேயே வேறுபாட்டை உணர ஆரம்பித்தேன். மனிதர்களுக்கு மட்டுமல்ல... மண்ணுக்கும் இவை தீங்கினை விளைவிப்பதில்லை. இதனை 100% இயற்கையான பொருட்கள் கொண்டு தயாரிப்பதால் எந்த பக்க விளைவுகளும் இருக்காது. கழிவு நீர் அடைப்பும் ஏற்படுவதில்லை. நாங்கள் தயாரித்த பயோ என்சைம்களை வடிகட்டும் போது மீதம் இருக்கும் சக்கையை பண்ணையில் உள்ள ஆடு, மாடுகள் மீது தடவி குளிப்பாட்டி விடுவோம். அதனால் அவற்றுக்கு தோல் சார்ந்த பிரச்னைகள், பூச்சித் தொல்லைகள் இல்லை.

அவற்றை செடிகளுக்கும் இயற்கை உரமாக மாற்றினோம். விரைவில் பெரிய அளவில் இதனை மேம்படுத்த விரும்புகிறோம். வள்ளுவம் ஆர்கானிக் உடன் இணைந்து ஒருநாள் பயிற்சிகளும் நடத்தி வருகின்றேன். இயற்கை சார்ந்த வாழ்வியலை முன்னெடுக்கும் போது சவால்களும் நிறையவே இருக்கின்றன. என் நாள்பட்ட தோல் பிரச்னைக்கு நான் கண்ட தீர்வு என் தொழிலாகவே மாறிவிட்டது’’ என்கிறார் கீர்த்தனா அம்மையப்பன்.

தொகுப்பு: கலைச்செல்வி