நன்றி குங்குமம் தோழி
26 வயதான வர்ஷா
சிவகுமார், தான் சிறுவயது முதலே பார்த்து வளர்ந்த ‘ஜமக்காளம்’ நெசவுத் தொழிலால் ஈர்க்கப்பட்டு ‘ஹவுஸ் ஆஃப் ஜமக்காளம்’ என்ற பெயரில் நிறுவனத்தைத் தொடங்கி 30 முதல் 35 நெசவாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
கம்பள நகரங்களான பவானி - குமாரபாளையம் நகரில் புதிய கம்பள வடிவமைப்புக்கான ஆர்டர்களை ஒருங்கிணைப்பது, வண்ணக் கலவைகள் குறித்து நெசவாளர்களுக்கு வழிகாட்டுவதில் முனைப்புடன் இருக்கிறார். பாரம்பரிய கம்பள நெசவு முறையை பள்ளி மாணவர்களிடையே பரப்பி வருவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் வர்ஷா, கம்பளம்
நெய்தலில் புதுமையை இணைக்கும் பயணம் குறித்து சொல்கிறார்.
‘‘திருமணம், பூஜைகள் போன்ற வீட்டு விசேஷங்களில் முக்கிய அம்சமாக இருந்தது கம்பளம். விரித்த கம்பளத்தில் பூக்கள், பலகாரங்கள், பழங்கள், புதிய உடைகளை தாம்பாளங்களில் வைப்பதே பாரம்பரிய வழக்கம். சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் நிறங்களின் கலவை மிகச் சரியாக அமைவதே கம்பள நெய்தலில் முக்கிய அம்சம். கம்பள நிறங்கள் வெளிறிப் படர்வதே கம்பள விற்பனை சரிந்ததற்கு காரணம்.
நிறங்கள் படர்ந்து கம்பளத்தின் தோற்றத்தையே கெடுத்துவிடும். அதனால் தரமான மங்காத வெளிராத சாயத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம். எங்கள் நெசவு மையத்தில் சுமார் 30 தறிகள் உள்ளன. தரையில் பள்ளம் தோண்டி தறிகளை பொருத்துவோம். இவை ‘குழித்தறி’ எனப்படும். ஒரு வரிசைக்கு ஏழு தறிகள் வீதம் நான்கு வரிசைகளில் தறிகள் ஒரே சீரான தாளகதியில் இயங்கும்.
பவானி, குமாரபாளையம் நெசவு நகரங்களில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக ஜமக்காளம் எனப்படும் தடிமனான, கோடுகளையுடைய பருத்தி விரிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. அன்றைய பிரிட்டிஷ் ஆலைத் துணிகளுடன் போட்டியிட, உள்ளூர் நெசவாளர்கள் தங்களின் தனித்துவத்தை வெளிக்காட்டும் விதமாக கம்பள கைவினைக் கலையை கையில் எடுத்தார்கள். பல நிற கம்பளங்கள் திருமணங்கள் முதல் கோயில் திருவிழாக்களில் முக்கிய இடம் பிடித்தது.
இந்தப் பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் நெசவுத் தொழில் பரவி ஒரு தலைமுறை தலைமுறையாக செய்யப்பட்டு வந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில், விற்பனை குறைந்து தறிகள் செயலற்றுப் போயின. நெசவாளர்கள் வருமானத்திற்காக வேறு தொழில்களை தேடிச் சென்றுவிட்டனர். நான் ஃபேஷன் டெக்னாலஜி படித்துக் கொண்டிருந்தபோது, அறிமுக வகுப்புகளின் பகுதியாக, சிறப்பு விரிவுரையாளர் ஜமக்காளம் கைத்தறி நெசவு குறித்த ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
நான் வளர்ந்த சூழலில் வாழும் கைவினைக் கலையை, வேறு ஊரைச் சேர்ந்த ஒருவர் ஆய்வு நோக்கில் ஆர்வத்துடன் அணுகியது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. புதியவர் ஒருவரால் ஜமக்காளம் குறித்த இவ்வளவு நுணுக்கங்களை சேகரிக்க முடிந்த போது, கம்பள நகரத்தில் வளர்ந்த நான் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்தது எனக்கு வருத்தம் தந்தது. பட்டம் பெற்ற பிறகு கம்பள கைவினைக்கலைக்கும் அதை உருவாக்கும் நெசவாளர்களுக்கும் உண்மையில் எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். நலிந்து வரும் கம்பள கைவினைக் கலைக்கு ஏதாவது பங்களிப்பு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.
கம்பளங்களுக்கு ஆர்டர்கள் கிடைப்பது குறைந்து விட்ட நிலையில் நெசவாளர்கள் பல மாதங்களுக்குத் தொடர்ந்து வேலையின்றி இருக்கும் சூழலும் நிலவியது. ஒட்டுமொத்த நெசவுத் தொழிலுக்கும் ஊக்கம் தரும் வகையில், இன்றைய வணிக சூழலுக்கு ஏற்றபடி ‘ஹவுஸ் ஆஃப் ஜமக்காளம்’ என்ற அமைப்பை உருவாக்கினேன். கம்பளக் கலையை வெளியிலிருந்து காப்பாற்றப்பட வேண்டிய ஒன்றாகப் பார்க்காமல், உள்ளிருந்தே தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல ஆரம்பித்தேன்.
பழைய கம்பள நெசவு பாணியில் உள்ள அம்சங்களுடன், நிறங்கள், அவற்றின் விகிதாச்சாரங்கள் போன்ற மிகச்சிறிய மாற்றங்கள் மூலம் நவீனத்தை இணைத்து ஜமக்காள தயாரிப்பைத் தொடங்கினோம். ஆனால், சாதாரண நூலின் விலை ஒரு கிலோவுக்கு 60 முதல் 70 ரூபாய் வரை இருக்கிறது. தரமான நூலை பயன்படுத்துவதால், அதிக விலை கொடுத்து வாங்குகிறோம். இப்பகுதியிலுள்ள நெசவாளர்கள், ஒரு நாளைக்கு ரூ.200 முதல் ரூ.350 வரை மட்டுமே வருமானம் ஈட்டுகின்றனர்.
செலவுகள் பல மடங்கு உயர்ந்த போதிலும், இந்த கூலி விகிதத்தில் மாற்றம் ஏற்படவில்லை. எங்கள் அமைப்பு சம்பளத்தை முன்கூட்டியே வழங்குகிறது. சிக்கலான வடிவமைப்புகள் கொண்ட ஆர்டர்களுக்கு 35% வரை கூடுதல் ஊதியமும் அளிக்கிறோம். வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப பிரத்யேக வடிவமைக்கப்பட்ட ஜமக்காளங்களை தயாரிக்கிறோம்.
அனுபவமிக்க வயதான நெசவாளர்கள் ஜமக்காளங்களில் புதிய மாற்றங்களை எளிதாகப் புரிந்து கொண்டு அதனை சாத்தியமாக்குகின்றனர். 300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் உருவான ஜமக்காளம் 2005-06ல் புவிசார் குறியீட்டைப் பெற்றது. ‘நிம்ஹான்ஸ்’ (Nimhans) எனப்படும் 27 அடி நீளமுள்ள ஜமக்காளத்தை வடிவமைத்து நெய்வதில் கை தேர்ந்த கலைஞர்கள் என்னிடம் உள்ளனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் நான் விளம்பரம் செய்வதால் வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர் செய்கிறார்கள். நெய்யும் தொழிலும் தொய்வில்லாமல் நடந்து வருகிறது.
செஸ் சாம்பியன் ஆனந்த் சாரின் மனைவி அருணா ஜமக்காளத்தில் சதுரங்கம் டிசைனை நெய்து தரச் சொன்னார். 8 அடி அகலம், 10 அடி நீளம் சில்க் நூலில் மாம்பழ மஞ்சள் நிறத்தில் சதுரங்க கட்டங்களை வரைந்து, நெய்து கொடுத்தேன். இப்படி பயனாளர்கள் விரும்பும் வடிவமைப்பில் புதுமையான நிறங்களில் பலவித பூக்கள், பறவைகள் வடிவங்களை ஜமக்காளத்தில் நெய்து வழங்கி வருகிறோம்” என்றார் வர்ஷா.
தொகுப்பு: கண்ணம்மா பாரதி


