Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பரதம் மற்றும் சமூக நல சேவைகளை மேம்படுத்த வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

தமிழக அரசின் மிக உயர்ந்த ‘கலைமாமணி’ பட்டம், பரதத்தில் ‘உலக சாதனை’, கின்னஸ் சாதனை, இரண்டாயிரம் மாணவர்களை கொண்டு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு, திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரைக்கு பரத நாட்டிய காட்சி வடிவமைப்பது மட்டுமில்லாமல் நடித்தும் வருகிறார் விஜயலட்சுமி. இவர் ‘மயூரி அகாடமி’ என்ற பெயரில் பரத பள்ளி ஒன்றை நிர்வகித்து வருகிறார். மேலும், ‘மயூரி அகாடமி ஆஃப் பெர்பார்மிங் ஆர்ட்ஸ் ஃபவுண்டேஷன்’, ‘லயன்ஸ் கிளப் ஆப் மயூரி’ என்ற அமைப்புகள் மூலமாக பல உதவிகளை செய்து வருகிறார்.

‘‘நான் சென்னையில்தான் பிறந்து வளர்ந்தேன். மூன்று அண்ணன்களுக்கு பிறகு தவமாய் தவமிருந்து பெண் பிள்ளை வேண்டும் என்று அம்மா வேண்டி நான் பிறந்ததாக கூறுவார்கள். வீட்டில் ஒரே பெண் குழந்தை என்பதால் என் பெற்றோரும், அண்ணன்களும் என் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தார்கள். வீட்டில் நான் செல்லமாகத்தான் வளர்ந்தேன். எனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்த பிறகும் அந்தப் பாசம் குறையவில்லை. சொல்லப்போனால் என் அண்ணிமார்களும் என் மீது அளவு கடந்த பாசம் கொண்டுள்ளார்கள்.

அம்மாவிற்கு எனக்கு நடனம் சொல்லித்தர வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அவர் தந்த ஊக்கத்தில் நான்கு வயதில் ராஜேஷ் கண்ணா அவர்களிடம் நாட்டியம் கற்றேன். மேலும், பரதத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறேன். இது தவிர படிப்பில் M.B.A, M.Phil முடித்திருக்கிறேன். தற்போது பரதத்தில் Ph.D பயில்கிறேன்’’ என்றவர், தன் 18வது வயதில் மயூரி அகாடமியை துவங்கி கடந்த

23 வருடங்களாக ஏராளமான பரதக் கலைஞர்களை உருவாக்கியுள்ளார். ‘‘என்னிடம் பரதம் கற்ற மாணவிகளை விட நட்டுவாங்கம் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்தான் அதிகம். என் மாணவிகள் பலர் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தாலும், நாட்டிய பள்ளியும் துவங்கி வருகிறார்கள். பரத நாட்டிய அமைப்பு மூலம் பல ஏழை எளிய மாணவிகளுக்கு இலவசமாக பரதநாட்டிய பயிற்சியும் அளித்து வருகிறேன்.

பரத பயிற்சியாளராக மட்டுமில்லாமல் சேவைகளுக்காகவும் பல பரிசுகள் மற்றும் விருதுகளை பெற்றிருக்கிறேன். திருக்குறள் தொடர்புடைய கின்னஸ் சாதனை இரண்டு முறை மற்றும் உலக சாதனை ஒருமுறை நிகழ்த்தியுள்ளேன். தமிழக அரசு நிறுவனமான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நாட்டிய இசைக்கலை வளர் இருக்கை ஏற்படுத்த பெற்று அதன் பொறுப்பாளராக இருந்துள்ளேன். மத்திய அரசின் சென்சார் போர்டிலும் உறுப்பினராக சேவை ஆற்றியுள்ளேன்.

தமிழக அரசு, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், விஜிபி தமிழ்ச்சங்கம் மற்றும் மயூரி பள்ளியும் இணைந்து மார்க்கம் என சொல்லக்கூடிய பரதநாட்டிய பாடல்களுக்கு திருக்குறளில் குறுந்தகடு வெளியிட்டிருக்கிறேன். தமிழக அரசின் இளந்தமிழர் இலக்கியப் பட்டறையின் துவக்க விழாவிலும், ஆண்டுதோறும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் நாங்கள் பங்கேற்று பரதநாட் டியம் வழங்கி வருகிறோம். எங்கள் அகாடமி மூலம் 1330 திருக்குறளை நாட்டிய வடிவில் 30 மணி நேரம் இடைவெளி இல்லாமல் நிகழ்த்தினோம். இது ஆசியாவிலேயே மிகப்பெரிய உலக சாதனை என பதிவானது. அதைத் தொடர்ந்து மேதகு அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு திருக்குறளில் வான்சிறப்பு அதிகாரத்தின் குறட்பாக்களுக்கு மரங்களை வெட்டக்கூடாது என்ற தலைப்பில் 790க்கும் மேற்பட்ட பல்வேறு பள்ளி மாணவர்கள் ஒன்றுகூடி புதிய கின்னஸ் சாதனை படைத்தோம்.

இரண்டாயிரம் மாணவர்களை ஆட வைத்து மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது’’ என்றவர், தன் தோழிகளுடன் இணைந்து அமைப்பினை துவங்கி ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவச பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து வருகிறார். ெதாடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, இலவச மருத்துவ முகாம்களும் நடத்தி வருகிறார்.

‘‘எனக்கு தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது கிடைக்க இருப்பதாக தெரிய வந்தது. ஆனால், கடைசியில் பட்டியலில் என் பெயர் இல்லை என்று தெரிந்த போது மிகுந்த வருத்தம், மனத்தளர்ச்சி அடைந்தேன். என் அம்மாதான் என்னை தேற்றினார். ‘அடுத்த வருடம் கண்டிப்பாக உனக்கு விருது கிடைக்கும்’ என்று சொன்னார். அவர் சொன்னது ேபால் அடுத்த வருடம் ‘கலைமாமணி’ விருது அறிவிக்கப்படும் சமயம் என் அம்மா இறந்து போனார்.

அவரின் இழப்பு என்னை பெரிய அளவில் பாதித்தது. மனதால் பாதிக்கப்பட்டேன். அதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அங்கிருந்த போதுதான் ‘கலைமாமணி விருது’ எனக்கு வழங்க இருப்பதாக செய்தி வந்தது. அம்மாவை இழந்த சோகத்தில் என்னால் அந்த செய்தியை கேட்டவுடன் கொண்டாட முடியவில்லை. விழா மேடையில் கண்கலங்கதான் அந்த விருதினை பெற்றேன்’’ என்று கூறும் இவரின் மகன் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக வலம் வருகிறார். எதிர்கால திட்டமாக பரதக்கலை மற்றும் அவர் செய்து வரும் சமூக நல சேவைகளை மேம்படுத்த திட்டமிட்டு வரும் விஜயலட்சுமி நாட்டிய இளவரசி, ஆடல் கலைமணி, திருக்குறள் பெண்மணி போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

தொகுப்பு: விஜயா கண்ணன்