நன்றி குங்குமம் தோழி
செல்லுலாய்ட் பெண்கள்
யோகாம்பாள்-மங்களம் என்ற சகோதரிகள் இசைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். ஆரம்ப காலத்தில் இருவரும் இணைந்தே நடனமாடி வந்தாலும், பின்னர் திரைப்படங்களில் நடிகையாக மாறி அடுத்தக்கட்ட முன்னேற்றத்தைக் கண்டவர் மங்களம் மட்டுமே. இவர்கள் இருவருக்கும் அடுத்துக் கடைக்குட்டியாகப் பிறந்து வளர்ந்தவர் தங்கம் என்ற அழகுத் தங்கை. உண்மையில் மூத்த சகோதரிகள் இருவருக்கும் முன்பாகவே முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாகத் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் அவருக்குத்தான் கிடைத்தது. அவருக்குப் பின்னரே யோகமும் மங்களமும் திரையில் தோன்றும் வாய்ப்பினைப் பெற்றார்கள். ஆனால், அதற்காக அவர்கள் அடைந்த வலியும் வேதனையும் பெற்ற துயரங்களும் அவ்வளவு எளிதாகக் கடந்துவிடக் கூடியதல்ல…. அதன் பின்னரே அவரின் வெற்றி வாய்ப்புகள் குறித்து இந்த உலகம் பேசியது.
திருவையாற்று மண் தந்த இசை நடன வாரிசுகள்...
யோகம் - மங்களம் சகோதரிகள் இருவரும் அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இசையால் செழித்து வளம் பெற்ற ஐயாறு பாய்ந்தோடும் திருவையாறுக்கு அருகேயுள்ள காருகுடி
என்ற சிறு கிராமத்தில் ஓரளவு வசதி வாய்ப்புகளும் நிலபுலன்களும் உள்ள இசைக் குடும்பத்தின் வாரிசுகள் ஆவர். இவர்கள் இருவரையும் அடுத்துப் பிறந்தவர் இளைய சகோதரி தங்கம்.
யோகம், மங்களம், தங்கம் மூவரும் சிறுமிகளாக இருந்தபோதே அவர்களின் தந்தையார் மறைந்துவிட்டார்.
தாயார் மீனாட்சி அம்மாளுக்கு சிறு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல், பிறந்தகத்துக்குச் சென்று தன் குழந்தைகளோடும் தகப்பனாரோடும் தங்கியிருந்தார். கிராமத்திலேயே தொடர்ந்து இருந்தால் தன் குழந்தைகள் படிக்காமல் போய் விட நேரும் என்ற ஆதங்கத்துடன் பிறந்தகத்தை விட்டு வெளியேறி விட வேண்டுமென மீனாட்சி அம்மாள் முடிவெடுத்தார். அங்கிருந்து இடம் பெயர்ந்து கும்பகோணத்திலுள்ள தன் மூத்த சகோதரியின் வீட்டிலேயே தன் குழந்தைகளுடன் தங்கியிருந்து, அங்குள்ள ‘மார்னிங் ஸ்டார் பெண்கள் பள்ளி’யில் தன் மகள்கள் மூவரையும் சேர்த்துப் படிக்க வைக்கத் தொடங்கினார்.
அன்று முதல் இன்று வரை பள்ளியில் நடிகையைத் தேடிய வரலாறு
பள்ளிக்கூட மாணவியாக இருந்த அழகும் முக லட்சணமும் கொண்ட ஆறு வயதேயான, கடைசிப் பெண் குழந்தை தங்கத்தைப் பார்த்த இயக்குநர் துவாரக நாத் என்பவர், தன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக எப்படியாவது தங்கத்தை நடிக்க வைத்துவிட வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அவருடைய எண்ணம் அவ்வளவு எளிதாக ஈடேற வில்லை. அதற்காக மனம் சோர்ந்து விடாமல், தொடர்ந்து தன் முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார். 1930களின் காலகட்டத்திலேயே திரைப்பட இயக்குநர்கள் பள்ளி மாணவிகளைப் பின் தொடர ஆரம்பித்து விட்டார்கள். அதன் நீட்சியாக பிற்காலத்திலும் நடிகையர் பலர் பள்ளி, கல்லூரி, பேருந்து நிறுத்தங்கள் என இயக்குநர்களின் பார்வையில் தென்பட்டு திரையுலக நாயகிகளான வரலாறுகள் ஏராளம் உண்டு.
இயக்குநர் துவாரகநாத், குழந்தை தங்கத்தின் தாயார் மீனாட்சி அம்மாளை நேரில் சந்தித்துப் பேசியபோதும், அவ்வளவு எளிதாக அவர் சம்மதிக்கவில்லை. சுற்றம் மற்றும் உறவுகளின் எதிர்வினைகளை நினைத்து அவர் மிகவும் அஞ்சினார். உறவுகளும் தங்கள் குடும்பத்துப் பெண் குழந்தை சினிமாவில் நடிப்பதை விரும்பவில்லை. கரைப்பார் கரைத்தால் மனம் இளகத்தானே செய்யும். கடைசியில் அதுதான் நடந்தது. இயக்குநர் துவாரகநாத் எடுத்த தொடர் முயற்சிக்குக் கைமேல் பலன் கிடைத்தது.
1938 ஆம் ஆண்டில் அவர் தயாரித்து இயக்கிய ‘பாக்ய தாரா அல்லது லக்கி ஸ்டார்’ என்ற படத்தில் சிறுமி தங்கம், பேபி ஜெயலட்சுமி என்ற பெயரில் குட்டி நட்சத்திரமாகத் திரையில் அறிமுகமானார். இப்படத்தின் வாயிலாக நல்ல பேரும் புகழும் பொருளும் குழந்தைக்கும் மீனாட்சி அம்மாளின் குடும்பத்துக்கும் கிடைத்தன. ஆனால், அதற்கான விலையையும் வெகுமதியையும் சேர்த்தே அந்தக் குடும்பம் ஊரார் மற்றும் உறவுகள் மத்தியில் பெற வேண்டியிருந்தது. ஆம்..! அவ்வளவு இகழ்ச்சியை ஒட்டுமொத்தக் குடும்பமும் சம்பாதித்தது. ஊரும் உறவுகளும் அந்த அளவுக்கு வசை பாடித் தீர்த்தார்கள். குறிப்பாக தங்கத்தின் தாயார் மீனாட்சி அம்மாள் மிக மிக மோசமான இழிப் பேச்சுகளை உறவுகள் மத்தியில் எதிர்கொள்ள வேண்டிய நிலைமைக்கு ஆளானார்.
சினிமா மகிழ்வைத் தரும்..! யாருக்கு என்பதே கேள்வி?
அடுத்த ஆண்டிலேயே மேலும் ஒரு படத்தில் நடிப்பதற்காக குழந்தை நட்சத்திரம் தங்கம் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படம் ஓரளவு வளர்ந்துவந்த நிலையில் திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்டது. படம் பாதியில் நிறுத்தப்பட்டதை விடவும் பெரும் துயரமும் சோகமும் என்னவென்றால், திரைவானில் புகழேணியின் உச்சியில் குழந்தை நட்சத்திரமாகத் தொடர்ந்து ஜொலிக்க வேண்டிய தங்கம் அகால மரணமடைந்ததுதான்.
தாயார் மீனாட்சி அம்மாளும், உடன் பிறந்த மூத்த சகோதரிகளான யோகம், மங்களம் அனைவரும் துடிதுடித்துப் போனார்கள். எதிர்பாராமல் நிகழ்ந்த குழந்தையின் மரணத்துக்கு உறவுகள் அனைவரும் கூடி அவரது தாயார் மீனாட்சி அம்மாளைத் தொடர்ந்து நிந்தனை செய்து கொண்டிருந்தார்கள். ஏற்கனவே துக்கத்தின் பிடியிலிருந்து மீள முடியாமலிருந்த மீனாட்சி அம்மாள் இனி இந்த ஊரில், உறவினர்கள் இடையே வாழக்கூடாது என்ற உறுதியான முடிவை எடுப்பதற்கு செல்லப் பெண்ணான தங்கத்தின் அகால மரணம் மட்டுமல்லாமல், தொடர்ந்து நிந்தனை செய்த உறவுகளும் காரணமாக இருந்தனர்.
மீனாட்சி அம்மாள் தன் மற்ற இரு மூத்த மகள்களையும் இசை மற்றும் நடனத்திலும் திரைத்துறையில் ஈடுபடுத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற உறுதியுடனும் விடா முயற்சியுடனும் வீராப்புடனும் தன் மகள்கள் யோகம் - மங்களம் இருவரையும் அழைத்துக்கொண்டு ஊரும் வேண்டாம்; உறவுகளும் வேண்டாம் என்ற விரக்தியான மனநிலையுடன் கும்பகோணத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறி மதராஸுக்குப் பயணமானார்.
திரையுலகம் அளித்த நடன வாய்ப்புகள்
அன்றைய பிரபல நடிகையான எம்.ஆர்.சந்தானலட்சுமி நாயகியாக நடித்த படம் 1942 ஆம் ஆண்டில் வெளியான ‘தமிழறியும் பெருமாள்.’ செண்பக வடிவு என்ற பாத்திரத்தில் அவர் நடித்தாலும், தமிழ் கற்று, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால் ‘தமிழறியும் பெருமாள்’ என்று அந்த நாட்டு மன்னரால் பட்டமளித்துப் பாராட்டுப் பெறுகிறார். தமிழறியும் பெருமாள் என்ற அந்தக் கதாபாத்திரத்தில் சந்தான லட்சுமியே நடித்தார். அவருக்கு ஜூனியர் வேடத்தில் சிறுமி செண்பக வடிவாக நடனமாடி நடித்தவர் சகோதரிகளில் இளையவரான மங்களம். மூத்தவரான யோகம், ஆடும் பெருமாள் என்ற பாத்திரமேற்று நடனமாடினார். சகோதரிகள் இருவருக்கும் இதுதான் முதல் திரைப்படம்.
உண்மையில் இருவருக்கும் பிரமாதமாக நடனமாடத் தெரியாவிட்டாலும், கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற முனைப்பு அவர்களிடம் தீவிரமாக இருந்தது. அது அடுத்த டுத்து நான்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பினையும் பட முதலாளிகளிடம் பெற உதவியது. ‘நவீன விக்கிரமாதித்யன்’ என்ற படத்திலும் சகோதரிகள் இருவரும் நடித்தனர்.
அடுத்து அப்போதைய முன்னணி நாயகர்களில் ஒருவரான பி.யு.சின்னப்பா, கண்ணாம்பா இணையாக நடிக்க, இளங்கோவன் வசனத்தில் வெளியாகி பெரும் வெற்றியை ஈட்டிய ‘கண்ணகி’ படத்தில் மங்களத்துக்கு மட்டும் இடையர் குலப் பெண்ணாக ஒரு சிறு பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. அடுத்து ‘பத்தினி’ என்ற தெலுங்குப் படத்திலும் சகோதரிகள் நடனமாடியுள்ளனர். அதன் பின்னர், நடிகை கண்ணாம்பா தன்னுடைய ராஜ ராஜேஸ்வரி நிறுவனத்துக்காகத் தயாரித்த ‘ஹரிச்சந்திரா’, ‘ஜெகதலப் பிரதாபன்’ போன்ற படங்களிலும் சகோதரிகள் நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்கள்.
கதக், மணிப்புரி நடனங்களை ஆடுவதற்கு மட்டுமே பயிற்சி பெற்றிருந்த இருவரும் மிகப் புகழ் வாய்ந்த நட்டுவனார் வைத்தீஸ்வரன் கோயில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் அதன் பின்னர் முறையாக நடனத்தைக் கற்றுத் தேர்ந்துள்ளனர். நாட்டியப் பயிற்சியின் பொருட்டு இடையில் படங்களில் நடிப்பதற்கும் நடனமாடுவதற்கும் சற்று இடைவெளி தேவை என்பதால் அதையும் செய்திருக்கிறார்கள். நடனக் கலையின் மீது இவர்கள் கொண்ட பற்றும் ஆர்வமுமே இதற்கு மிக முக்கிய காரணியாகும்.
திரையை விட நடன நிகழ்ச்சிகளில் அதிக ஈடுபாடு
1944 ஆம் ஆண்டில் மயிலாப்பூரில் பிரபல சமூக சேவகரான அம்மு சுவாமிநாதன் தலைமையில் அமோகமாக நடன அரங்கேற்றத்தை சிறப்பாக நடத்தி முடித்த பின்னரே சகோதரிகள் மீண்டும் திரையில் தோன்றி நடனமாடி இருக்கிறார்கள். அப்போது புகழ் பெற்ற நாட்டியக் கலைஞர்கள் உதயசங்கர் மற்றும் அவரது இணையர் அமலா சங்கர் இருவரும் சென்னையில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்து தங்கள் கனவுத் திரைப்படமான ‘கல்பனா’ இந்தித் திரைப்படத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஜெமினி நிறுவனமும் இணைத் தயாரிப்பாளராக அவர்களுடன் இணைந்து செயல்பட்டது. உதயசங்கரே எழுதி, இயக்கி ஜெமினி ஸ்டுடியோவில் தயாராகிக் கொண்டிருந்த படம் இது. ஏறக்குறைய ஐந்தாண்டு காலம் இப்படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுள்ளன. நாட்டியக் கலா மண்டலி ஒன்றினை உருவாக்க வேண்டுமென்ற நடனத்தையே உயிர் மூச்சாக நினைக்கும் நாட்டியக் கலைஞர் ஒருவரின் அபாரமான கனவும் கற்பனையும் ஒருங்கே இணைவதுதான் படத்தின் கதை. அபாரமான கிளாசிக் வகையில் அமைந்த படம் இது.
1948 ஆம் ஆண்டு வெளியான நடனத் தாரகைகளின் கூட்டுத் திருவிழாவான ‘கல்பனா’வில் இந்தியாவின் அனைத்து வகை கிளாசிக் நடனங்களும் இடம் பெற்றிருந்தன. படம் வெளியான காலகட்டத்தில் பெரிதாக கவனம் பெறாமல் போனபோதும், இந்தியத் திரைத்துறையிலும், நடனக் கலைஞர்கள் இடையேயும் பரவலான பேச்சினை உருவாக்கத் தவறவில்லை. பிற்காலத்தில் திரை விமர்சகர்களால் போற்றிக் கொண்டாடப்படும் படமாகவும் ‘கல்பனா’ மாறியது.
நாட்டிய மேதை உதயசங்கர் அளித்த கௌரவம்
இப்படம் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் யோகம்-மங்களம் சகோதரிகளின் நாட்டிய அரங்கேற்றமும் மதராஸில் நிகழ்ந்துள்ளது. உதயசங்கர் சென்னையில் தங்கியிருந்ததால், யோகம் - மங்களம் நாட்டிய நிகழ்ச்சி ஒன்றிற்கும் அவர் தலைமையேற்றுச் சிறப்பித்திருக்கிறார். இதில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க விதத்தில் அமைந்தவை என இரண்டு விஷயங்களைச் சொல்லலாம். ஒன்று, உதயசங்கர் நீண்ட காலம் சென்னையில் தங்கியிருந்தபோதும், யோகம் - மங்களம் சகோதரிகள் நடனமாடிய இந்த ஒரு நடன நிகழ்ச்சியைத் தவிர, வேறு எந்த நடனக் கலைஞரின் நிகழ்விலும் அவர் பங்கேற்கவில்லை. மற்றொன்று, சகோதரிகள் இருவரையும் ‘கல்பனா’ திரைப்படத்தில் பங்கேற்கும்படி உலகப்புகழ் பெற்ற நடன மேதை உதயசங்கர் கேட்டுக்கொண்டது. ஆனால், மதிப்பு மிக்க கலைஞர் ஒருவரின் இந்த அழைப்பினை சகோதரிகள் ஏற்றுக்கொண்டாலும், சில தவிர்க்க இயலாத காரணங்களால் யோகம் - மங்களம் சகோதரிகள் ‘கல்பனா’ திரைப்படத்தில் பங்கேற்கவில்லை.
1940களில் சகோதரிகள் யோகம் - மங்களம் இருவருமே மிகப் பிரபலமான நாடறிந்த நடனக் கலைஞர்களாகவும் விளங்கியிருக்கிறார்கள். கல்கத்தாவில் நடைபெற்ற வங்காள சங்கீத மாநாட்டில் தங்கள் நடனக் குழுவினருடன் பங்கு பெற்று நடனமாட இவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பு மிகப்பெரும் கௌரவமாகும். அந்த மாநாட்டுடன் மட்டுமல்லாமல், ஏறக்குறைய கல்கத்தாவில் ஒரு மாத காலம் தங்கியிருந்து பதினைந்து நடன நிகழ்ச்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்த நிகழ்ச்சிகளாக மிகச் சிறப்பாகவும் நடத்தியிருக்கிறார்கள். தொடர்ந்து நடன நிகழ்ச்சிகள் என ஓய்வின்றி செயல்பட்டதாலும் உதயசங்கரின் ஒப்பற்ற திரைப்படத்தில் நடிக்கும் எண்ணத்தைத் தவிர்த்திருக்கலாம்.
அதன் பின்னர் மங்க ளம், ‘மகாரதி கர்ணா’ என்ற இந்திப் படத்திலும், 1945ல் வெளியான தெலுங்குப் படமான ‘மாயா மச்சீந்திரா’வில் ‘காளிங்கா’ என்னும் பாத்திரத்தையும் ஏற்று நடனம் ஆடியதன் வாயிலாகப் பிற மொழிப் படங்கள் சிலவற்றிலும் பங்காற்றி இருக்கிறார். சகோதரிகள் இருவரில், சினிமாவுக்கு ஏற்றாற் போன்ற தோற்றப் பொலிவும் முக அமைப்பும் மங்களத்துக்கு அதிகம் இருந்ததால், திரைப்பட நடிகையாகத் தொடர்வதற்கான வாய்ப்புகளும் அவரைத் தேடியே வர ஆரம்பித்தன.
நாயகியாக நடிக்கக் கிடைத்த பட வாய்ப்பு
சிறு சிறு வேடங்கள், தொடர்ச்சியான நடன வாய்ப்புகள் எனப் பங்காற்றி வந்த நேரத்தில்தான் அடுத்து 1947 ஆம் ஆண்டில் இசைக் கலைஞர் ஜி.என்.பாலசுப்பிரமணியன் கதாநாயகனாக நடித்த ‘ருக்மாங்கதன்’ படத்தின் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானார் மங்களம். இவற்றில் ஏ.வி.எம் தயாரித்த ‘வேதாள உலகம்’ மிகப்பெரும் வெற்றியை எட்டியது. வேதாள உலகத்தைக் கொண்ட நாட்டின் இளமை கொஞ்சும் இளவரசி ராஜீவியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கொண்ட ஒரு பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் அமைந்தது. கூப்பிட்ட குரலுக்கு வேதாளங்கள் ஓடிவந்து சேவை செய்தாலும், ரசிகர்களை அச்சுறுத்தாத நகைச்சுவைப் பாத்திரங்களாகவே வேதாளங்கள் படைக்கப்பட்டிருந்தன.
கதாநாயகன் டி.ஆர்.மகாலிங்கம். படத்தில் அவர் இருந்தால் பாடல்களுக்குப் பஞ்சம் இருக்குமா என்ன? அபாரமான பல பாடல்கள் இன்றைக்கும் சொக்க வைக்கக்கூடியவை. நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாத படம் இது. கே.சாரங்கபாணியும், கே.ஆர்.செல்லமும் இணைந்து வேதாளங்களுடன் நகைச்சுவை விருந்து படைத்தார்கள். ‘மட வேதாளங்களே..!’ என்று சாரங்கபாணி வேதாளங்களை அழைக்கும் பாங்கே விலா நோகச் சிரிக்க வைக்கும்.
பக்தனின் வாழ்க்கையில் விளையாடும் பாண்டுரங்கன்..!
வேதாள உலகம் படத்தை அடுத்து மங்களம் நடித்த படம் ‘சுதர்சன்’. 1948 ஆம் ஆண்டில் துவங்கிய இப்படம் ஏறக்குறைய மூன்றாண்டுகளுக்குப் பின்னர், 1951ல் தாமதமாக வெளியானது. பி.யு. சின்னப்பா கதாநாயகன் கோரகும்பராக அற்புதமாக நடித்திருப்பார். அவரின் மனைவி துளசி பாயாக கண்ணாம்பாவும் நடிப்பில் அவருக்கு ஈடு கொடுத்திருப்பார். கோரகும்பர் வெகு தீவிரமான பாண்டுரங்க பக்தர். குயவரான அவர் தன்னை மறந்து மண் பாண்டத் தயாரிப்புக்காக மண்ணை மிதித்தவாறே பக்தியில் இசையில் மூழ்கியிருக்கும் வேளையில், தன்னை நோக்கித் தவழ்ந்து வரும் தன் குழந்தையையும் கவனிக்காமல் மண்ணோடு மண்ணாக மிதித்துக் கொன்றுவிடுவார்.
பாண்டுரங்க பக்தியில் தன்னை மறந்து மூழ்கியதன் விளைவு அது. ஆனால், தன் கணவரைக் காப்பாற்ற மனைவி துளசிபாய், வீட்டின் ஓட்டுக்கூரை சரிந்து விழுந்து குழந்தை மாண்டுவிட்டதாகப் பொய் சாட்சி சொல்வார். அதன் பின் குழந்தைகள் மீண்டும் பிறக்காத நிலையில் தன் தங்கை ஊர்மிளாவை (யோக மங்களம்) தன் கணவருக்கு மணம் முடித்து வைக்கிறாள் துளசி பாய். மனைவியைத் தவிர வேறு பெண்ணைத் தீண்டுவதில்லை என சபதம் செய்யும் தன் பக்தனான கோர கும்பரின் வாழ்க்கையில் பாண்டுரங்கன் நிகழ்த்தும் லீலைகளைச் சொல்லி படம் சுபமாய் முடியும்.
ஏ.எஸ்.ஏ.சாமி, சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கத்தில் வெளியான இப்படம் சரியாகப் போகவில்லை. இதற்கு முன்னதாக 1948ல் ஜெமினியின் தயாரிப்பில் இதே கதை ‘சக்ரதாரி’ என சித்தூர் வி.நாகையா, புஷ்பவல்லி நடிப்பில் வெளியாகி அற்புதமாக ஓடியது. அதனாலே ‘சுதர்சன்’ பல்வேறு சிறப்புகள், பங்கேற்ற கலைஞர்களின் அபாரமான நடிப்பு என எல்லாம் இருந்தும் காலம் கடந்து தாமதமாக வெளியானதால் தோல்விப் படமாயிற்று. பி.யு.சின்னப்பாவின் இளைய தாரமாக யோக மங்களம் மிகச் சிறப்பாகவே நடித்திருந்தும் படம் ஓடாமல் போனது.
விலகியிருந்து துணை நின்ற யோகம்
மூத்த சகோதரியான யோகம் படிப்படியாகத் திரைப்படங்களில் நடனம் ஆடுவதையும் குறைத்துக்கொண்ட பின்னர், இளையவரான மங்களம் அக்காளின் பெயரையும் தன் பெயரோடு இணைத்துக்கொண்டு யோக மங்களமாக நடிக்க ஆரம்பித்தார். திரைப்பட வாய்ப்புகள் குறைந்தாலும் தன் நடனத்தை மட்டும் விட்டுவிடாமல் தொடர்ந்து நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தவர்.
இயக்குநர் பி.ஆர். பந்துலுவின் இணை இயக்குநராக நீண்ட காலம் பணியாற்றியவரும் எம்.ஜி,ஆரின் நெருக்கமான நண்பர்களில் ஒருவருமான சித்ரா கிருஷ்ணசாமி அவர்களை மணந்து கொண்டு நடிப்பு, நடனம் இரண்டையும் கைவிட்டு இல்லத்தரசியாக மட்டும் வாழ்ந்தவர். சென்னை சி.ஐ.டி.காலனியில் 80 வயதுக்கு மேல் வாழ்ந்து மறைந்தார். இன்று அவர் இல்லாவிட்டாலும், யோக மங்களம் என்ற பெயர் திரையுலக வரலாற்றில் நன்கு அறியக்கூடிய பெயராகவே நிலைத்திருக்கிறது. அவர் நடித்த, நடனமாடிய படங்கள் இன்றைக்கும் காணக் கிடைக்கின்றன. அகன்ற முகமும்அழகும் இளமையும் குறும்புத்தனம்
மிளிரும் புன்னகையும் இப்போதும் வசீகரிப்பவையாகவே இருக்கின்றன.
யோக மங்களம் நடித்த திரைப்படங்கள்
தமிழறியும் பெருமாள், நவீன விக்கிரமாதித்யன், கண்ணகி, ஹரிச்சந்திரா, ஜகதலப் பிரதாபன், ருக்மாங்கதன், ஸ்ரீமுருகன், வேதாள உலகம், சுதர்சன்.
தொகுப்பு : பா.ஜீவசுந்தரி


