நன்றி குங்குமம் டாக்டர்
மென்மையான, அழகான, மருத்துவ குணம் நிறைந்த மலர்களின் மணம் மட்டுமல்ல... அவற்றில் உள்ள இயற்கையான சத்துகளும் சருமப் பராமரிப்பில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சருமத்தின் இயற்கையான பொலிவை பாதுகாக்கவும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் உதவும் சில பூக்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.
பன்னீர் ரோஜா
பன்னீர் ரோஜா இதழ்கள் சருமத்திற்கு இயற்கையான ஈரப்பதத்தை (Hydration) வழங்குகின்றன. இதிலிருந்து தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டர் (பன்னீர்) சருமத்தின் பிஹெச் (pH) அளவை சீராக வைக்கிறது. இந்த ரோஜா இதழ்களை அரைத்து பாலுடன் கலந்து முகத்தில் தடவி வர, சருமத்தின் வறட்சி நீங்கி முகம் பொலிவுறும்.
ஆவாரம்பூ
தங்கம் போல் மினுமினுக்க, இயற்கையாக முகம் ஜொலிக்க, வெயிலில் கறுத்துப்போகும் முகத்தை பொலிவடைய செய்ய ஆவாரம் பூ துணைபுரியும்.ஆவாரம்பூ பொடியுடன் ஒரு ஸ்பூன் கசகசா சேர்த்து காய்ச்சாத பசும்பால் கலந்து நைசாக அரைத்து சற்று அதிகமாக பற்று போல முகத்திலும், கழுத்தை சுற்றிலும், தடவி வந்தால் தேமல், கருமை நிறம் போன்றவை மாறி பளிச்சென இருக்கும்.
செம்பருத்தி
இது ‘இயற்கை போடோக்ஸ்’ (Natural Botox) என்று அழைக்கப்படுகிறது. சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து, இளமையைத் தக்கவைக்க உதவுகிறது. காய்ந்த செம்பருத்தி பூ பொடியை தயிருடன் கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் (Face pack) ஆகப் பயன்படுத்தலாம்.
மல்லிகை
மல்லிகைப் பூ சருமத் துளைகளைச் சுத்தப்படுத்தி, முகத்தை மென்மையாக மாற்றுகிறது. இது வயதான தோற்றத்தைத் தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளைக் கொண்டுள்ளது.
மல்லிகை எண்ணெயை கற்றாழை ஜெல்லுடன் கலந்து இரவு தூங்கும் முன் முகத்தில் தடவலாம்.
லாவெண்டர்
லாவெண்டர் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் சுரப்பை (Sebum) கட்டுப்படுத்துகிறது. மேலும், இது பாக்டீரியா தொற்றுகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
சாமந்தி பூ
சாமந்தி பூவில் அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) மற்றும் கிருமி நாசினி பண்புகள் அதிகம் உள்ளன. இது முகப்பரு, வடுக்கள் மற்றும் சருமம் சிவப்பாவதை (Redness) குணப்படுத்த உதவும்.
இதன் இதழ்களைக் கொதிக்க வைத்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவி வர, முகப்பருக்கள் குறையும்.
மகிழம் பூ
கோடைகாலத்தில் சருமத்தை பாதுகாப்பதில் மிகவும் முக்கியம் வாய்ந்தது மகிழம்பூ. வேனல் கட்டியை நீக்க ஒரு கைப்பிடி மகிழம் பூவை நீர் விட்டு அரைத்து அப்படியே முகத்திலும், உடலில் கட்டிகள் இருக்கும் இடத்திலும் தடவி காய்ந்ததும் குளித்து வர கட்டிகள் காணாமல் போகும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம்.
குங்குமப்பூ
முகத்திற்கு அதிக பலனைத் தரும். மாசு, மருக்கள் நீங்க குங்குமப் பூவை பயன்படுத்தலாம்.சிறிது குங்குமப்பூவை எடுத்து பாலில் ஊறவைத்து அரைத்து முகத்தில் தடவி வருவதால் முகம் பளபளக்கும். கண்களை சுற்றி, உதட்டை சுற்றி, மேலும் முகத்தில் கருமை அதிகமாக இருக்கும் இடங்களில் கூடுதலாக தடவி அரை மணி நேரம் ஊறவைத்து முகத்தை கழுவும்போது முகத்தில் இருக்கும் கருமை நீங்கி பளிச்சென இருப்பதை உணரலாம்.
தொகுப்பு:- ரிஷி


