Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடவுள் தேசத்தின் அழகிய தீவுப் பயணம்!

நன்றி குங்குமம் தோழி

கோடை காலம் ஆரம்பித்து வெயில் சுட்டெரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி விடுமுறையில் சுற்றுலா செல்ல வழக்கமான இடத்திலிருந்து சற்று விலகி புதிய இடங்களுக்கு செல்ல வேண்டும் என்கிற ஆர்வம் பலருக்கும் இருக்கும். அத்தகைய புதுமை விரும்பிகள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா ப்ரியர்கள் நிறைவான அனுபவங்களை பெற மன்றோதுருத்து தீவினை தேர்வு செய்யலாம். பரபரப்பான நகர வாழ்க்கையினை தவிர்த்து, இயற்கையோடு இணைந்த நீர் வழிப் பயண அனுபவம் நமது வாழ்வினில் அடுத்தக் கட்டத்தினை நோக்கி சிறப்பாக நகர்த்த உதவும் என்றால் அது மிகையில்லை.

மன்றோதுருத்து கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட் டத்திற்கு அருகேயுள்ள ஒரு பழமையான தீவு. அரபிக்கடலின் உப்பங்கழி பகுதியும், அஷ்டமுகி ஏரியின் ஒரு பகுதியும் கல்லடா நதியின் மற்றொரு பகுதியும் இந்தத் தீவில் இணைகிறது. மன்றோதுருத்து ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் சிறிய பேருந்தில் ஏறினால் ஐந்து நிமிடத்தில் அரசு படகு துறையில் இறக்கி விடுவார்கள்.

அரசு படகு துறையில் ஓடம் போன்ற சிறிய ரக படகுகள் மட்டுமே இருக்கிறது. அதே சமயம் அந்தப் பகுதியை சுற்றி ஏராளமான தனியார் படகு சவாரிகள் உள்ளன. சிறிய ஓடம் போன்ற படகில் இரண்டு மணி நேரத்திற்கு 500 ரூபாய் வசூலிக்கிறார்கள். பெரிய படகில் பத்து முதல் பதினைந்து பேர் பயணம் செய்யலாம். ஒரு மணி நேரத்திற்கு எண்ணூறு ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை வசூலிப்பார்கள்.

கொல்லத்திலிருந்து அரசு படகில் 500 ரூபாய் கொடுத்தால் அதிகாலையில் நான்கு மணி நேரப் பயணத்தில் அஷ்டமுகி ஏரி வழியாக மன்றோ தீவிற்கு வந்து விடலாம். அதுவே தனியார் படகு என்றால் ஒருவருக்கு 1800 ரூபாய் கொடுக்க வேண்டும். தனியாக வருபவர்களுக்கு இந்தப் படகு சவாரி கொஞ்சம் காஸ்ட்லி தான். கும்பலாக நண்பர்கள் அல்லது உறவினர்களோடு வந்தால், செலவு குறையும்.

கால்வாய் படகு சவாரி (Canoe/Kayaking Tours), இங்குள்ள குறுகிய கால்வாய்கள் வழியாக படகில் பயணிப்பது மிகவும் பிரபலம். தென்னந்தோப்புகள், மாங்குரோவ் காடுகள் மற்றும் உள்ளூர் கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையை காணலாம். இருபுறமும் மாங்குரோவ் காடுகளுக்கு நடுவே நீரை கிழித்துக் கொண்டு ஓடும் படகுகளில் அமர்ந்த படி இருபுறம் அழகை ரசித்துக் கொண்டு பயணிக்கலாம்.

ஒரு அரைமணி பயணத்தில் அஷ்டமுகி மற்றும் கல்லடா நதிகள் சங்கமிக்கும் இடத்திற்கு அழைத்து செல்வார்கள். அங்கு பத்துக்கு பத்தடியில் இருக்கும் மணற்திட்டுதான் ‘முன்றோ தீவு’. ஒரு பெரிய மரத்திற்கு கீழ் டீக்கடை மற்றும் இளநீர் கடை. சிற்றுண்டியாக இலை கொழுக்கட்டையும், இலை அப்பமும் இங்கு ஃபேமஸ். அந்த மணல் திட்டினை தவிர்த்து, ஒரு அடி எடுத்து வைத்தால் நீரின் ஆழம் அதிகரித்துக் கொண்டே செல்லும். இது போல இரண்டு குட்டி தீவில் படகு நின்று செல்லும். அதன் பிறகு இருபுறமும் சதுப்பு நில காடுகள் மரங்கள், பறவைகளோடு இறால் பண்ணைகள், மீன் பிடித்தல், கரை ஓர மக்களின் வாழ்க்கை என பலவற்றையும் ரசித்துக் கொண்டு பயணிக்கலாம். பயணம் முடிந்து கரைக்கு வந்தாலும், மனது நடுக்கடலையே சுற்றி வரும்.

படகிலிருந்து இறங்கியதும் சுடச்சுட நூறு ரூபாய்க்கு மீன் குழம்புடன் உணவு சமைத்து தருகிறார்கள். இளைப்பாற தங்கும் விடுதிகள் ஆயிரம் ரூபாய் முதல் கிடைக்கிறது. அங்கேயே தங்கி அதிகாலையில் படகில் அமர்ந்தபடி சூரியோதயத்தையும் அந்தி மாலை அஸ்தமனத்தையும் காண்பது சிறப்பு. இந்தத் தீவு மக்களின் அன்றாட வாழ்க்கை சுற்றுலாப் பயணிகளை நம்பிதான் உள்ளது. சொந்த உபயோகம் மற்றும் படகு சவாரிக்கு என தனித்தனி படகினை வைத்திருக்கிறார்கள்.

மன்றோ தீவின் வரலாறு...

மன்றோ தீவு அல்லது மன்றோதுருத்து இது கேரளாவின் அழகிய தீவு பகுதி.19ம் நூற்றாண்டில் கர்னல் ஜான் முன்ரோ, இப்பகுதியில் கால்வாய்களைத் தோண்டி நிலங்களை மீட்டெடுத்தார். அவரது நினைவாகவே இப்பெயர் தீவிற்கு சூட்டப்பட்டுள்ளது. முனிரோ இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா அனுபவத்தை விரும்புவோருக்கு இந்தத் தீவு ஒரு சிறந்த அனுபவத்தை தரும்.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில், அஷ்டமுகி ஏரி மற்றும் கல்லடா நதி சந்திப்பில் அமைந்துள்ள எட்டு சிறிய தீவுகளின் தொகுப்பே இந்தப் பகுதி. அடர்ந்த மாங்குரோவ் காடுகள், மீன்கொத்திகள், நீர்க்காகங்கள், கொக்குகள் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளின் இருப்பிடம் இந்த அழகிய தீவு. பறவை ஆர்வலர்களுக்கு இது சொர்க்க பூமி. சூரிய உதயம், குறிப்பாக ‘S’ வடிவ வியூ பாயிண்டில் இருந்து சூரிய அஸ்தமனத்தைக் கண்டு ரசிப்பது சிறப்பான அனுபவம்.

சீதோஷ்ண நிலை...

அக்டோபர் முதல் பிப்ரவரி வரை மென்மையாகவும் குளிராகவும் இருக்கும். ஜனவரி முதல் மே வரை மிதமான சூழலும், ஜூன் முதல் செப்டம்பர் வரை மழை பொழிவுமாக இருக்கும். தொடர் மழை பருவம் புகைப்படக் கலைஞர்களுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் ஏற்றது. எல்லா சீதோஷ்ண நிலையிலும் வெவ்வேறு அழகினை தரக்கூடியது மன்றோ தீவு. ஆங்காங்கே நீர்நிலைகளுக்கு அருகே வீடுகளும் விடுதிகளும் அமைக்கப்பட்டிருக்கிறது.

எப்படிச் செல்வது...

கொல்லம் ரயில் நிலையத்தில், இருபது நிமிட ரயில் பயணத்தில் மன்றோதுருத்து ரயில் நிலையத்தை அடையலாம். கொல்லத்திலிருந்து சாலை வழியாக பயணித்தால் ஒரு மணி நேரமாகும். தனியார் பேருந்து வசதிகளும் உள்ளது. கொல்லம் பேருந்து நிலையத்திலேயே முனிரோ தீவிற்கு செல்ல படகு சவாரி பதிவு செய்து கொள்ளலாம். கொல்லத்திலிருந்து படகு மூலம் நான்கு மணி நேர பயணம் செய்தும் இந்தத் தீவினை அடையலாம். இந்தப் படகு பயணத்தை கேரள சுற்றுலா துறை ஏற்பாடு செய்யதுள்ளது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டாக்ஸி அல்லது தனி வாகனங்கள் மூலமாகவும் தீவை அடையலாம்.

தனிச் சிறப்புகள்...

ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையின் போது நடைபெறும் கல்லடா படகுப் போட்டி புகழ்பெற்ற ஒன்று. பாரம்பரிய கேரள உணவுகளை சுவைக்க பல உணவு விடுதிகள் இங்குள்ளன. கிராமத்தைச் சுற்றிப் பார்க்க சைக்கிள் மற்றும் பைக்குகள் வாடகைக்கு கிடைக்கிறது.

மன்றோ ஸ்பெஷல் உணவுகள்...

கரிமீன் பொல்லிச்சாத்து, வாழை இலையில் சுற்றப்பட்ட வறுக்கப்பட்ட முத்துப்புள்ளி மீன். மீன் கறி, மரவள்ளிக் கிழங்குடன் காரமான சிவப்பு மீன் கறி. இறால் வறுவல் உள்ளூர் சுவையான உணவு. அப்பம் மற்றும் வாத்துக்கறி அசைவப் பிரியர்களின் சிறப்பு உணவு. சைவப் பிரியர்களுக்கு புட்டு, கடலைக்கறி, இலைக்கொழுக்கட்டை. இந்தத் தீவை தவிர வர்கலா கடற்கரை, கொச்சி துறைமுகம், வெலிங்டன் தீவு, சீன மீன் பிடி வலை, கொச்சி துறைமுக கடற்கரைப் பகுதி, இஸ்ரேல் பழமை மாறா கொச்சி துறைமுக தெருக்கள் என கடவுளின் தேசம் குறித்து எழுதிக்கொண்டே செல்லலாம்.!!

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்