Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஒலி வழிப் பயணம்

நன்றி குங்குமம் தோழி

சவுண்ட் ஹீலர் ஹரிதா

சவுண்ட் ஹீலிங் துறையிலும் தடம் பதித்த ஹரிதாவுக்கு அறிமுகம் தேவையில்லை. ‘பைசன்’ படத்தில், துருவ் நடித்த ‘கிட்டான்’ கேரக்டருக்கு சிறப்பு செய்த, திருப்புமுனை பாத்திரத்தில் நடித்தவர்.ஒலி அதிர்வுகளை வைத்து ஒருவரின் உடல் வலியையும், மன வலியையும் குணப்படுத்த முடியுமா? எப்படி இது சாத்தியம்? இதன் பின்னால் உள்ள அறிவியல்தான் என்ன என்கிற கேள்விகளோடு சவுண்ட் ஹீலர் ஹரிதாவிடம் பேச ஆரம்பித்ததில்...

சவுண்ட் ஹீலிங் என்றால் என்ன?

சோகமான பாட்டை நாம் கேட்கும்போது அழுகை வருவதும், துள்ளலான பாட்டைக் கேட்கும்போது சந்தோஷம் வருவதும் மாதிரியான விஷயமே இது.நம்மைச் சுற்றிலும் கேட்கிற இரைச்சல்களுக்கு மத்தியில், நம் மனசையும் உடம்பையும் குணப்படுத்துற சரியான ஒலிகளை கேட்க நாம் தவறுகிறோம். உதாரணத்துக்கு, கோயிலுக்குள் நுழையும் போது, நம் மனசு எங்கெங்கோ அலைபாயும். ஆனால், கோயில் மணியின் அதிர்வு ‘டங்’கென கேட்டதுமே, நொடியில் நமது கவனம் குவிந்து மனதுக்குள் அமைதி வரும். நம் மூளையின் இயல்பே தெளிவான அலைவரிசையை நோக்கி ஈர்க்கப்படுவதுதான்.

இந்த மாதிரியான விஷயமே சவுண்ட் ஹீலிங். அடிப்படையில் இதன் நோக்கம், ஒலி அதிர்வுகளை பயன்படுத்தி, உடலையும் மனசையும் சமநிலைக்கு கொண்டு வருவது. சுருக்கமாய், வெளியில் இருந்து வருகிற சத்தம், உள்ளிருக்கும் சிஸ்டத்தை ரீசெட் செய்வது. அதாவது, ஹோலிஸ்டிக் சிகிச்சை முறை. இதில் குறிப்பிட்ட அதிர்வுகளில், அதாவது, ஃப்ரீக்வன்சியில் வரும் ஒலிகள் நம் நரம்பு மண்டலத்தோடு நேரடியாகப் பேசி, நமது உடலையும் மனதையும் ஆழமான தளர்வு நிலைக்கு கொண்டு போகும்.

டென்ஷனாக நாம் இருக்கும்போது, மூளையின் அலைகள் பீட்டா நிலையில் வேகமாக இயங்கும். ஒலி சிகிச்சையில், மெல்ல மெல்ல ஆல்பா என்கிற அமைதியான தியான நிலைக்கு மாறும். இன்னும் ஆழமாய் செல்லும்போது, மூளை தீட்டா நிலைக்கு போகும். தீட்டா என்பது தூக்கத்துக்கும் விழிப்புக்கும் நடுவில் இருக்கும் நிலை. இதில் ஆழ்மனம் சுறுசுறுப்பாக இயங்கும். நாள்பட்ட மன அழுத்தம் அல்லது மன அதிர்ச்சிகளில் இருந்து மீண்டுவர இது உதவும்.

சவுண்ட் ஹீலிங் துறைக்குள் நீங்கள் எப்படி?

எனக்குள் ஒரு தேடல் எப்போதும் இருக்கும். ஒலி சிகிச்சையிலும் தீவிரமான தேடல் இருந்தது. இதற்காகவே காடுகளுக்குள் பயணித்து இயற்கை ஒலிகளை கூர்ந்து கவனித்தேன். இசைக் கலைஞர்களையும் சந்தித்து, இசைக் கருவிகள் குறித்தும், அது எழுப்பும் ஒலிகள் எப்படியான தாக்கத்தை உருவாக்கும் என்பதையும் விவாதித்திருக்கிறேன். அதன் பிறகே, மல்டி இன்ஸ்ட்ரூமெண்டல் சவுன்ட் ஹீலர் என்கிற சான்றிதழ் படிப்பை முடித்தேன். இன்னும் கூடுதலான ஆய்வுகளையும் இதில் மேற்கொண்டு வருகிறேன்.

சவுண்ட் ஹீலிங் செய்ய இசை ஞானம் தேவையா?

ஆர்வமும் பயிற்சியுமே முக்கியம். சங்கீதம் தெரியணும் என்ற அவசியம் இல்லை. தெரிந்தால் கூடுதல் பலம். இதில் ஸ்வர ஞானத்தை விட ஒலியின் அதிர்வு பற்றிய புரிதலே முக்கியம். கர்நாடக சங்கீதத்தில் ஒவ்வொரு ராகத்துக்கும் ஒரு குணம், ஒரு பாவம் இருக்கு. உதாரணத்துக்கு ஹம்சத்வனி ராகத்தை காலையில கேட்கும்போது மெல்ல உதிக்கும் சூரியன், பறவைகள் சத்தம் மாதிரியானவை, புத்துணர்வைத் தரும். சிந்துபைரவி ராகத்தைக் கேட்டால், மனசுக்குள் ஆழமான அமைதி அல்லது சோகத்தை உணர வைக்கும். இப்படியாக ஒவ்வொரு ராகமும் ஒரு உணர்ச்சியோடு பிணைக்கப்பட்ட எமோஷனல் டூல்கிட் மாதிரி. இதில் ஒருவரின் மனநிலைக்கு ஏற்ற சரியான ராகத்தை அல்லது அதன் சாயல் இருக்கிற ஒளியை ஹீலிங் செய்ய பயன்படுத்தலாம்.

உங்களிடம் இருக்கும் இசைக் கருவிகள் குறித்து?

இவை கடை யில் வாங்குகிற வயலின், கிட்டார் மாதிரிக் கிடையாது. அதேபோல், சும்மா கருவிகளை தட்டிப் பார்க்கும் விஷயமும் இது இல்லை. எந்தப் பிரச்னைக்கு எந்த மாதிரியான அதிர்வு தேவையெனத் தெரிந்து, அதற்கான கருவியை பயன்படுத்தணும். பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், இந்த சிகிச்சையின் ஆன்மாவே கருவிகளும், அதன் அதிர்வுகளும்தான்.

25 விதமான இசைக் கருவிகள் என்னிடம் உள்ளது. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு நாடுகளிலிருந்து குறிப்பிட்ட அதிர்வலையில், குறிப்பிட்ட ஸ்கேலில் வேண்டுமென ஆர்டர் கொடுத்து வரவழைக்கப்பட்டவை. இவற்றை மாதக் கணக்கில், சில சமயம் ஆண்டுக் கணக்கிலும் காத்திருந்து வாங்கினேன். என்னிடத்தில் உலோகத்திலான ஹிமால யன் மற்றும் திபெத்தியன் சிங்கிங் பவுல்ஸ்கள் உள்ளது. சிறு மரக்குச்சியால் தட்டும் போது, அல்லது மெதுவாய் தேய்க்க, ஆழமான அதேசமயம் நீளமான அதிர்வு களை அவை எழும்பும். இந்த அதிர்வு காற்றில் பரவுவதுடன், உடம்புக்குள் ஊடுருவி, செல்களுக்கு மசாஜ் செய்கிற உணர்வைத் தரும்.

வெவ்வேறு அளவுகளில் உள்ளபறக்கும் தட்டு மாதிரியான தோற்றத்தில் இருக்கும் ஹேண்ட் பேன்களை கைகளால் தட்ட, மென்மையான கனவு உலகத்துக்குள் அவை நம்மை அழைத்துச் செல்லும்.

சவுண்ட் ஹீலிங் செய்வது குறித்து விளக்கவும்?

இதற்கான அமர்வு சத்தமின்றி அமைதியாகவே ஆரம்பிக்கும். ஹீலிங் பெறுபவர் வசதியாக அமரலாம். அல்லது படுத்துக் கொள்ளலாம். அவர்களைச் சுற்றி அமைதியான சூழலை உருவாக்குவோம். பிறகு ஒவ்வொரு கருவியாக மெதுவாக வாசிக்க ஆரம்பிப்போம். வெங்கல கிண்ணங்களில் வெளிப்படும் ஆழமான அதிர்வலைகள் மற்றும் சைம்ஸின் மெல்லிய ஒலி, ஹேண்ட் பேனின் இதமான இசை என கலந்து, ஒலிப் பயணத்துக்குள் அழைத்துச் செல்வோம். துவக்கத்தில் சந்தேகத்தோடு வருபவர்கள், ஒலி அதிர்வு உடம்பில் பரவத் தொடங்கியதுமே தளர்வு நிலைக்கு செல்வர்.

இதில் மன அழுத்தம் குறைந்து, நோய்களுக்கு காரணமான மனநோய் விடைபெறும். இந்த சிகிச்சை மனதை அமைதிப்படுத்துவதால், உடம்பும் மனதும் முழுமையான ஓய்வு நிலைக்கு செல்லும். மேலும், இந்த அதிர்வுகள் உடம்பில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக்குவதாக மருத்துவ ஆய்வுகளும் தெரிவிக்கிறது.வெதுவெதுப்பான நீரில் குளிக்கும்போது, தண்ணீர் நம் உடம்பில் படுவதை மட்டும் நாம் உணர்வதில்லை. கூடவே நமது சோர்வை நீக்குகிற உணர்வும் வரும். ஒலி அலைகளும் இது மாதிரியே. உடல் முழுக்க பரவி, பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை கழுவி சுத்தம் செய்கிற உணர்வை தருகிறது.

யாருக்கெல்லாம் சவுண்ட் ஹீலிங் தேவை?

தாயின் கருவில் இருக்கும் குழந்தையில் தொடங்கி, வயதானவர்கள் வரை தேவைப்படுவதால், தாய்சேய் நல மருத்துவ மனைகளில், கர்ப்பிணிகளுக்கு கொடுக்க மருத்துவர்களே அறிவுறுத்துகிறார்கள். இதில் குழந்தையின் வளர்ச்சி மற்றுமின்றி தாயின் ஆரோக்கியமும் காக்கப்படுகிறது.இன்றைய அவசர உலகில், நாம் எதுக்கு ஓடுகிறோம் என்று தெரியாமலே பலரும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

அதிலும் குறிப்பாக அடுத்த தலைமுறையினரான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மொபைல் போன் அடிக் ஷனில் சிக்கி, தனிமை மற்றும் பல்வேறு உடல்நல பிரச்னைகளில் மாட்டுகிறார்கள். இந்தச் சூழலில் ஒலி சிகிச்சை தீர்வாக இதற்கு இருக்கிறது. ஐடி ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள் என, மன அழுத்தம் தரும் பணிகளில் உள்ளவர்களுக்கும் சவுண்ட் ஹீலிங் மாற்றத்தை தருகிறது.

சவுண்ட் ஹீலிங் செய்ய கிடைத்த லண்டன் பயணம் குறித்து?

நண்பர் ஒருவர் மூலம் கிடைத்த இந்த வாய்ப்பில், ஒரு மாதம் அங்கேயே தங்கி, 33 அமர்வுகளை செய்த, நீண்ட மாரத்தான் ஒலி சிகிச்சை பயணம் இது. அங்கேயே என்னை தங்கிவிடச் சொல்லி பலரும் கேட்டார்கள். இப்போது சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்தும் அழைப்பு வந்திருக்கிறது.

உலக அளவில் இந்த சிகிச்சைக்கான தேவை தற்போது இருக்கிறது. காரணம், இன்றைய டிஜிட்டல் உலகில் ஒருவித சோர்வு மனநிலையில் பலரும் பயணிக்கிறார்கள். நமது காதுகளில் எப்போதும் நோட்டிபிகேஷன் சத்தங்களும், ஸ்கிரீன் இரைச்சல்களுமே கேட்கிறது. இந்தச் சூழலில் இருந்து விடுபடவே, சவுண்ட் ஹீலிங் சிகிச்சை தேடி மக்கள் வருகிறார்கள். அதனால்தான் நாடு, மொழி,

இனம் கடந்தும் எனது இந்த சிகிச்சை பேசப்படுகிறது.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்