Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

63 வயதில் எனக்கான அடையாளத்தை மீட்டெடுத்திருக்கிறேன்!

நன்றி குங்குமம் தோழி

உச்சம் தொட்ட தொழில்நுட்ப வளர்ச்சியால் இயந்திரங்களால் உருவாக்கப்பட்ட பொம்மைகளுக்கும், அழகு பொருட்களுக்குமே தற்போது வரவேற்பு பெருகியுள்ளது. இந்த தாக்கத்தினாலயே சந்தையிலும் ஆன்லைனிலும் கண்ணைக் கவரும் கொரியன் பொம்மைகள் வலம் வருவதை காண முடிகிறது. கைகளால் செய்யப்படும் பொருட்களும் கலைகளும் மறைந்து வருகின்றன. கைவினைக் கலைகள் நம் கலைத்திறனை காட்டுவதற்காக மட்டுமல்ல, மன அழுத்தம் குறைத்து மனநலத்தையும் பாதுகாக்க செய்கின்றன என்கிறார் ருக்மணி ஸ்ரீ தரன். சிறு சிறு மணிகளைக் கோர்த்து ஏராளமான வடிவங்களை உருவாக்கி ஆச்சரியப்படுத்துகிறார். அவருடனான உரையாடலிலிருந்து…

கணவருடன் தஞ்சாவூரில் இருந்தேன். எம்.ஏ படித்துள்ளேன். தஞ்சாவூரில் சின்னதாக ஸ்டேஷனரி கடை வைத்து நடத்தி வந்தேன். இப்போது என்னுடைய வயது 63. அதனால் கடை நிர்வாகம் செய்ய முடியவில்லை. எங்களுக்கு ஒரே மகள் திருமணமாகி சென்னையில் இருந்தாள். என் கணவர் ஓய்வு பெற்ற பிறகு நானும் கணவரும் மகளுக்காக சென்னை வந்தோம். நாங்க வந்ததும் கொரோனா ஊரடங்கு வந்தது. அப்போது டிவியில் கொரோனா பற்றிய தகவல்கள், இறப்புகளை பற்றி தொடர்ந்து கேட்டுட்டே இருந்ததால மிகவும் மன அழுத்தம் ஏற்பட்டது. தெரிந்தவர்கள், கொரோனாவால் இறந்தவர்களின் தகவல் வரும் போதெல்லாம் மனசும், உடம்பும் சொல்ல முடியாத வேதனையால் வெறுமையானது’’ என்றவர் இதிலிருந்து மீண்டு வந்ததைப் பற்றிக் கூறினார்.

‘கொரோனா காலத்தில் நான் மட்டுமல்ல என்னை சுற்றியும் எல்லோரும் எப்போ இதெல்லாம் முடியும் என்று காத்திருந்தார்கள். நான் இதிலிருந்து வெளியே வரணும்... எதையும் நினைக்கக்கூடாதுணு கை வேலை ஏதேனும் செய்யணும். அப்பதான் மனசு ரிலாக்ஸ் ஆகும்னு நினைச்சேன். அப்போது சின்னச் சின்ன பாசி மணிகளை கோர்த்து செய்யப்பட்ட பொருட்களை என் உறவினர்கள் வீட்டில் பார்த்த நியாபகம் வந்தது. கடைக்கு சென்று மணிகளை வாங்கி நானே முயற்சி செய்து பார்த்தேன். ஆரம்பத்தில் வடிவங்கள் சரியான தோரணையில் வராமல் இருந்தது. அதை மறுபடியும் பிரித்து மீண்டும் கோர்த்தேன்’’ என்றவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட வடிவங்களை உருவாக்கியுள்ளார்.

‘‘மணிகளை மொத்தமாக வாங்கி வந்துவிடுவேன். அரை கிலோ மணி 150 ரூபாய்க்கு கிடைக்கும். எல்லா நிறங்களிலும் மணிகளை வாங்கி வைத்து டிசைன் செய்வேன். ஒரு டிசைனை பார்த்தால் அப்படியே செய்துவிடுவேன். சின்னச் சின்ன பறவைகள், விலங்குகள் உருவங்கள் முதல் பெரிய அளவில் கடவுள் உருவங்கள் வரை வடிவமைத்து இருக்கிறேன். அந்த சமயத்தில்தான் எனக்கு யுடியூப் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

அதில் மணிகளால் செய்யப்படும் கிராஃப்ட் குறித்த வீடியோக்கள் இருந்தன. அதைப் பார்த்து செய்ய ஆரம்பித்தேன். ஒரு டிசைனை போட்டால் அதை மறுபடியும் போடமாட்டேன். புதுப்புது டிசைன்களைதான் தேடி தேடிச் செய்வேன்’’ என்றவர், எல்லாம் முடிந்து முழு உருவமாக வரும் போது ஒரு பெரிய மனத்திருப்தி வரும்’’ என்கிறார் ருக்மணி ஸ்ரீ தரன்.

‘‘நான் ஒவ்வொரு வருஷமும் நவராத்திரி கொலு வைப்பேன். அதில் நான் செய்த பொம்மைகளை எல்லாம் கொலுவில் வைத்தோம். பார்க்க அழகாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. கொலுவிற்கு வந்தவர்களுக்கும் நான் கைகளால் பின்னிய கூடையினைதான் பரிசாக கொடுத்தேன். மேலும், காகித ஒரிகாமியில் செய்த பெட்டியில் மஞ்சள் குங்குமம் வைத்து கிரியேட்டிவாக கொடுத்தேன். கொலுப்படிகளில் வைக்கப்படும் பொம்மைகள், கடவுள் உருவங்கள் எல்லாமே நான் செய்தவைதான்.

நிறைய பேர் நிறைய வகையான பாசி மணிகளை வைத்து உருவாக்குகிறார்கள். கைகளாலே கோர்க்கிறார்கள். எனக்கு வயதாகி விட்டதால் சில மணிகளை கோர்க்க முடியவில்லை. ஊசியை பயன்படுத்தி தான் கோர்க்கிறேன். இப்போது ஒரு வாட்ஸப் குழு உருவாக்கி இருக்கிறேன். அதில் கைவினைப் பொருட்கள் செய்ய தெரிந்தவர்கள் எல்லோரும் இணைந்திருக்கிறார்கள். எங்களுக்குள் நாங்க கைவினை சார்ந்த செய்திகளை பகிர்ந்து கொள்கிறோம். நான் செய்த சில பொருட்களைத் தெரிந்தவர்கள், விருந்தினர்களுக்கு பரிசாக கொடுப்பேன். ஆனால், விற்பனை செய்வதில்லை. எனக்கு பலவிதமான கலைகளை கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர விற்பனை செய்து வியாபாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

பெண்கள் ஏதாவது ஒரு கைவினைக் கலையினை கற்றுக்கொள்ள வேண்டும். வருமானம் பார்க்கலாம் என்றாலும் மன அழுத்தம் குறைக்கவும் உதவுகிறது. இந்தக் கலை எனக்கான ஒரு அடையாளத்தினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது’’ என்று பூரிப்போடு கூறுகிறார் ருக்மணி. ‘‘இந்தப் பொருட்களை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும். அதிக வெளிச்சத்தில் வைத்திருந்தால் அதன் நிறம் மங்கும். அதேபோல் சிறு சிறு மணிகள் என்பதால் அதிகளவில் தூசி படியும் வாய்ப்புள்ளது. அதனால் பொம்மைகள் மேல் மெல்லிய டிரான்ஸ்பரன்ட் கவர்களை சுற்றி வைக்கலாம். ஈரத்துணியால் துடைக்கலாம். தண்ணீரில் அலசக் கூடாது.

கண்ணாடி அலமாரியில் வைத்து அலங்கரிக்கலாம். மணிகளில் 12 விதமான அளவுகள் இருக்கின்றன. நான் 6ம் நம்பர் மணியை மட்டுமே பயன்படுத்துகிறேன். அதுதான் பார்க்க அழகாக இருக்கும். எனக்கு கிரிக்கெட் தீமில் ஒரு ஃபீல்டு செட்டப் போட வேண்டும் என்பது நெடுநாள் கனவு. அதை சீக்கிரம் ஆரம்பிக்க வேண்டும்’’ என்கிறார் கைவினைக் கலையரசி ருக்மணி ஸ்ரீ தரன்.

தொகுப்பு: கலைச்செல்வி