நன்றி குங்குமம் தோழி
நாம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் ஏசி, ஃபிரிட்ஜ், பெயின்ட், தோல் பொருட்கள் அனைத்தும் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய மாசுக்காற்றினை வெளியிடுகின்றன. அதில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வீட்டிற்குள் செடியினை வளர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். வீட்டில் செடிகளை வளர்ப்பதால், அது நமக்கு பலவித நன்மைகளை தருகிறது. இந்த தாவரச் செடிகளுக்காகவே கோவை, கணபதி உதயா நகர் பகுதியில் ‘இன்புளும்ஸ்’ என்ற பெயரில் ஒரு பிரத்யேக மையம் ஒன்றை நிர்வகித்து வருகிறார் இயற்கை சமூக நல ஆர்வலரான அனிதா. இங்கு வீட்டை அலங்கரிக்கத் தேவையான ஆயிரக்கணக்கான செடிகள், கலை நயம் மிக்க பீங்கான் தொட்டிகளை விற்பனை செய்து வருகிறார்.
‘‘என்னுடைய பூர்வீகம் நாமக்கல். அப்பா கல்லூரி முதல்வராக பணியாற்றினார். அம்மா இல்லத்தரசி. பள்ளி மற்றும் கல்லூரியினை ஈரோட்டில்தான் படித்தேன். பொறியியல் முடித்தவுடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா போன்ற பல்வேறு நாடுகளில் மென்பொருள் சார்ந்த பணியில் ஈடுபட்டேன். தொடக்கம் முதலே இயற்கை வேளாண் சார்ந்து பயணிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது. அதனால் வேலையை விட்டுவிட்டு இயற்கையுடன் இணைந்து வாழ ஆரம்பித்தேன்.
இன்றைய வாழ்க்கையில் நாம் இயற்கையிடம் இருந்து வெகுதூரம் விலகிவிட்டோம். கான்கிரீட் கட்டிடங்களில் வாழ்ந்தாலும் அங்கு சிறிய அளவில் அமைக்கப்படும் பசுமைக்கூடு மனதுக்கு மருந்தாக மாறுகிறது. வீட்டுக்குள் தாவரங்களை வளர்ப்பது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மைத் தரக்கூடியது. ஒரு செடியை வளர்ப்பது, உயிரோடு உறவை வளர்ப்பது போன்றது. தினமும் அதைப் பார்ப்பது, அதன் இலைகளில் ஏற்படும் மாற்றத்தை கவனிப்பது, புதிய தளிர் வரும்போது மகிழ்வது என மனித மனதுக்கும் தாவரத்திற்கும் இடையே ஒரு நுட்பமான உறவு
உருவாகிறது. விதை முளைக்கவும், செடி வளரவும், காலம் தேவைப்படுவது போல, வாழ்க்கையிலும் சில வெற்றிகளுக்கு பொறுமை அவசியம் என்பதை ஒரு தாவரம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.மண்ணில் முளைக்கும் ஒரு சிறு விதைக்குள் ஒரு பசுஞ்சோலை ஒளிந்திருக்கிறது. அந்த பசுஞ்சோலையை நம் வீட்டு வாசலிலும், அறையின் மூலையிலும், அலுவலகத்தின் மேசையிலும் கொண்டு வந்து நிறுத்தும் பணியே எங்களுடைய முயற்சி. ஆயிரக்கணக்கான தாவரங்கள் இங்குள்ளன.
ஒவ்வொரு தாவரத்திற்கும் தனித்தனி இயல்பும், அழகும் உண்டு. சில தாவரங்கள் நிழலில் வளரும். சிலது வெயிலில் வைக்க வேண்டும். அதேபோல் சில செடிகளுக்கு அதிக வெயில் தேவையிருக்காது. சூரிய வெளிச்சம் வரும் இடத்தில் வைத்தாலே போதுமானது. இந்தப் பசுமை உலகின் மற்றொரு சிறப்பம்சம் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள பீங்கான் தொட்டிகள். ஒரு தாவரத்தின் அழகு அதன் இலைகளில் மட்டுமில்லை, அவை வளர்க்கப்படும் தொட்டியிலும், பிரதிபலிக்க வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம்.
அதனால் அழகிய தொட்டிகளில் செடியினை வளர்ப்பதை ஓர் அழகியல் அனுபவமாகப் பார்க்கிறோம். வீட்டு அலங்காரத்துடன், இயற்கையின் அழகை இணைக்கும் வகையில் ஒவ்வொரு தாவரமும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.ஒரு நிகழ்ச்சிக்கு பரிசு அளிக்க பூங்கொத்துகளை கொடுக்கின்றனர். இந்த கையில் வாங்கி, அந்த கைக்குள் போகும் முன் மறந்து விடுவார்கள். ஆனால், பீங்கான் தொட்டியில் தாவரங்களை வைத்து கொடுக்கும் போது அவர்கள் மனதில் நினைவாக என்றும் இருக்கும். சில கார்ப்பரேட் நிறுவனங்கள் தாவரங்களை பரிசாக கொடுக்க விரும்புவார்கள். அந்த நிறுவனத்தின் பெயரை முத்திரையாக பதித்துக் கொடுப்போம்’’ என்றவர் தாவரங்களை பாதுகாக்கும் முறையினையும் பகிர்ந்தார்.
‘‘தாவரங்களை பாதுகாப்பது சற்று கடினமான பணி. எந்த சீதோஷ்ணநிலையில் எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று பார்த்து செய்ய வேண்டும். மேலும், செடிகளுக்கு தேவையான உரங்களையும் அவ்வப்போது போட வேண்டும். இதன் மூலம் செடிகள் ஆரோக்கியமாக வளரும். எங்களின் நீண்ட நாள் ஆசை ஒவ்வொரு வீட்டிலும், குறைந்தபட்சம் இரண்டு செடிகளாவது வளர்க்க வேண்டும் என்பதுதான். இதனால் நம்முடைய இருப்பிடத்தின் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றத்தை அவர்கள் உணர்வார்கள்.
நாங்க பீங்கான் தொட்டிகள், தாவரங்கள் அனைத்தும் தமிழகம், கேரளா, கர்நாடகம் போன்ற பிற மாநிலங்களில் இருந்தும், வட இந்தியா பகுதிகளில் இருந்து வாங்குகிறோம். மேலும், நம்முடைய தட்பவெப்பத்திற்கு ஏற்ற செடிகளை பார்த்து பார்த்து வாங்கி வந்து மக்களிடம் விற்பனை செய்கிறோம். அதில் ஒரு சிலர் குறுகிய காலம் வரை மட்டுமே வாழும் தாவரங்களை விருப்பத்தின் பேரில் வாங்கிச் செல்வார்கள்.
பீங்கான் தொட்டிகளை உத்தரப்பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் தயாரிக்கிறார்கள். முதலில் வெளிநாட்டில் இருந்து தான் பீங்கான் தொட்டிகளை வாங்க திட்டமிட்டிருந்தோம். பிறகு இவர்களை பற்றி கேள்விப்பட்டதும், இங்கிருந்துதான் வாங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். மேலும், இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை மட்டுமே வாங்குவது என்று உறுதி எடுத்து இருக்கிறோம். ஒரு சிறிய வீட்டின் ஜன்னல் ஓரத்திலும், ஒரு செடி வளர வேண்டும். பெரிய மாளிகையின் தோட்டத்திலும், வளர வேண்டும்.
பொருளாதார வேறுபாடுகள் மனிதர்களிடையே இருந்தாலும், இயற்கையை நேசிப்பதில் வேறுபாடு இருக்கக்கூடாது. லாபம் மட்டுமே பார்க்காமல், சமூகப் பொறுப்புடன்தான் இந்த பிசினஸை நடத்தி வருகிறோம். அதனால் தான் எல்லோரும் வாங்கக்கூடிய விலையில் நாங்க செடி மற்றும் தொட்டிகளை விற்பனை செய்து வருகிறோம்’’ என்றவர் மிகவும் பாதுகாப்பாக செடிகளை
வாடிக்கையாளர்களிடம் சேர்க்கிறார்.‘‘தாவரங்கள் வாடிக்கையாளரிடம் பாதுகாப்பாகச் சென்று சேர வேண்டும்.
வெளியூர்களுக்கு அனுப்பும் போது ஒரு உயிருள்ள பொருளை அனுப்புகிறோம் என்ற பொறுப்பு எப்போதும் மனதில் இருக்கும். தாவரப் பாதுகாப்பு நடைமுறைகள், பேக்கேஜிங், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கவனித்துதான் அனுப்புகிறோம்’’ என்றார் அனிதா.
தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்


