Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஏலக்காயில் ஒரு கலைநயம்!

நன்றி குங்குமம் தோழி

ஏலக்காய், நாசியை துளைக்கும் நறுமணமும் நாவிற்கு இதமளிக்கும் அதன் சுவையும் ஒரு புத்துணர்வை நமக்குத் தரும். Queen of spices என்று அழைக்கப்படும் ஏலக்காய்க்கு அதற்கு வழங்கப்பட்ட இப்பெயரை போல சற்றே மவுசு அதிகம்தான். இந்த நறுமணப் பொருளான ஏலக்காயை ஒரு கலைப் பொருளாகவும், தனித்துவமான ஆபரணமாகவும் மாற்ற முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார் கம்பம் பகுதியை சேர்ந்த சுபிட்சகா.

“எங்க குடும்பம் பல தலைமுறைகளாக ஏலக்காய் எஸ்டேட் மற்றும் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ளது. என் கணவர் பல ஆண்டுகளாக இந்தத் தொழிலில் இருப்பதால், ஏலக்காய் என்பது எங்களுக்கு பரிச்சயமான ஒரு பொருள். நானும் என் மகள்களும் சிறுவயதிலிருந்தே ஓவியம் மற்றும் கைவினைப் பொருட்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். அவ்வப்போது ஏதாவது கலைப்பொருட்களை செய்து கொண்டிருப்போம். ஒருமுறை ஏலக்காயை வைத்து ஒரு சிறு மாலை கோர்த்துப் பார்த்தேன். நறுமணப் பொருளை ஒரு கலைப்பொருளாக பார்க்க மிகவும் அழகாக தெரிந்தது. மேலும், இதில் ஆர்வம் அதிகரிக்கவே ஏலக்காயை வைத்து ஒரு ‘ப்ரோச்’ (Brooch) போல செய்து பார்த்தபோது மிகவும் நன்றாக வந்தது.

இதுபோன்ற முயற்சிகளே இந்தத் தனித்துவமான தொழிலுக்கு அடித்தளமாக அமைந்தது. என் அடுத்தகட்ட நகர்வாக கம்பம் பகுதியில் ஒரு ஸ்டால் அமைத்து எனது தயாரிப்புகளை முதன்முதலில் அறிமுகப்படுத்தினேன். ஒரே வாரத்தில் ஏலக்காயை வைத்து 100 வகையான தயாரிப்புகளை தயார் செய்து முடித்தேன். மாலைகள், ப்ரோச், ஹாம்பெர்ஸ், பூங்கொத்து போன்றவற்றின் பல வகைகளை புதுவிதமாக தயாரித்தேன். ஸ்டால் அமைத்ததில் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

எனது தனித்துவமான கலைப்பொருட்களை கண்டு ரசித்ததுடன், வாங்கியும் சென்றார்கள். நன்கு விலை மதிப்புள்ள ஏலக்காய் மாலைகள், அனைத்து மக்களுக்கும் எட்டும் வகையில் குறைந்த விலையை நிர்ணயம் செய்திருக்கிறேன்.கழுத்தில் அணிவது போன்ற ஜரிகையில் ஏலக்காயை பதித்து செய்யப்படும் சர மாலை மிகவும் குறைவாக ₹400க்கு விற்பனை செய்வதால் இதற்கு அதிக வரவேற்பு உள்ளது. கிரீடங்கள், பூங்கொத்துகள் மற்றும் பரிசுப் பொருட்கள் எனப் பல வகைகளில் ஏலக்காயை பயன்படுத்துகிறேன்.

என் அடுத்த புது முயற்சியாக ஏலக்காயை வைத்து அழகிய ஆபரணங்களை தயார் செய்தேன். சமீபத்தில் பிரபல நடிகை அம்பிகாவின் விருப்பத்திற்கேற்ப பிரத்யேகமான ஏலக்காய் ஆபரணங்களை செய்து கொடுத்துள்ளேன்” என்று தன் கலைநயத்தை எண்ணி பெருமைக்கொள்ளும் சுபிட்சகா, ஏலக்காயை வைத்து செய்து வரும் இந்த புதுவிதமான தொழிலில் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.

“ஏலக்காய் விளையும் பகுதிகளான போடி, கம்பம் போன்ற இடங்களில் இது ஒரு சாதாரண விஷயமாகத் தெரிந்தாலும் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் வட மாநிலங்களில் இதற்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. குறிப்பாக வட இந்தியர்கள் ஏலக்காயை ஒரு ஆடம்பரமான பொருளாகப் பார்ப்பதால், அங்கிருந்து அதிக ஆர்டர்கள் வருகின்றன. என்னுடைய இந்த முயற்சிக்கு என் கணவர் மிகப்பெரிய ஆதரவாக இருந்து வருகிறார். தற்போது சி.ஏ படித்துக் கொண்டிருக்கும் என் மூத்த மகளும், பத்தாம் வகுப்பு படிக்கும் இளைய மகளும் ஐடியாக்கள் கொடுப்பதிலும், இன்ஸ்டாகிராம் பதிவுகளை நிர்வகிப்பதிலும் எனக்கு பேருதவியாக இருந்து வருகின்றனர்.

பெண்கள் மற்றவர்களிடம் எதிர்பார்த்து நிற்பதை விட, சொந்தமாக உழைத்து சம்பாதிப்பதையும், தனித்துவமாகச் சிந்திப்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தாயாக நான் சொந்தமாக தொழில் செய்வதிலிருந்து என் பிள்ளைகள் என்னிடமிருந்து தன்னம்பிக்கை, சுதந்திரம், சுயமதிப்பு ஆகியவற்றை கற்றுக்கொள்வார்கள் என்பதை விரும்புகிறேன். தற்போது என் தாயார் வீட்டில் ஒரு பிரத்யேக தளத்தை அமைத்து, அங்குதான் ஆர்டருக்கான வேலைகளை செய்து வருகிறேன். இனி வரும் காலங்களில் எனது VSRA hampers எனும் ப்ராண்டையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் மேலும் வலுப்படுத்தி, சென்னை போன்ற பெருநகரங்களில் ஸ்டால்கள் அமைத்து எனது வணிகத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளேன்” என்றார் சுபிட்சகா.

தொகுப்பு: ஆர். ஆர்