Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

வருமானத்தை தேடித் தரும் ஓவியப் பயிற்சி!

நன்றி குங்குமம் தோழி

‘‘நான் பிறந்தது, வளர்ந்தது காஞ்சியில். அப்பா கார் மெக்கானிக். அம்மா இல்லத்தரசி. ஒரே தம்பி, செல்போன் சர்வீஸ் செய்கிறார். சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம். பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீடுகளில் சுவர்கள் முழுக்க கிரையான்களால் கிறுக்கப்பட்டிருக்கும். நான் அப்படித்தான். கிரையான்ஸ், கலர் பென்சில்கள், ஸ்கெட்ச் பென் வைத்து நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வீட்டுச் சுவர்களில் கிறுக்கி இருக்கிறேன். அப்படித்தான் நானாகவே ஓவியங்களை வரைய பழகினேன். இதுவரை யாரிடமும் நான் ஓவியங்கள் வரைய கற்றுக்கொண்டதில்லை’’ என்று பேசத் துவங்கினார் தேவிகா.

பள்ளி நாட்கள் முதல் ஓவியப் போட்டியில் பங்கு பெற்று பல பரிசுகளை வென்றிருக்கும் இவர் இப்போது முழுக்க முழுக்க ஓவியங்களை தன் முழு நேர பயணமாக மாற்றிக்கொண்டுள்ளார்.

‘‘சின்ன வயசில் கிறுக்கியதுதான் இன்று எனக்கான பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது. அதற்கு முதல் படியாக என் பள்ளியில் என்னுடைய திறமைக்கு அங்கீகாரம் கொடுத்தார்கள். ஓவியப்போட்டி என்று அறிவித்தால் போதும், ஆசிரியர் என் பெயரை கட்டாயம் கொடுத்துவிடுவார். நானும் அவரின் நம்பிக்கையை இழக்க செய்யாமல், பங்கு பெறும் போட்டியில்

பரிசினை பெற்றுவிடுவேன்.

ஆனால், என் பெற்றோர்களோ படிப்பில் நான் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தார்கள். காரணம், நான் நன்றாக படித்து கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். படிப்பை தவிர என்னுடைய கவனம் வேறு எதிலும் சிதறவிடக்கூடாது என்று உறுதியாக இருந்தார்கள். அதனால் நான் ஓவியப் போட்டியில் பெற்ற பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஒரு அட்டைப்பெட்டியில் போட்டு வைத்திருந்தேன்’’ என்றவர், திருமணத்திற்குப் பிறகுதான் தன்னுடைய ஓவியக்கலையில் விஸ்வரூபம் எடுத்துள்ளார்.

‘‘கல்லூரியில் BCAவில் சேர்ந்தேன். ஆனால், அதற்கான கட்டணத்தை கட்ட நான் மாலை நேரம் சிறுமிகளுக்கு ஓவியப் பயிற்சி அளித்தேன். படிப்பு முடித்ததும் வீட்டில் திருமணம் பேசி முடித்துவிட்டார்கள். என் மகன் பிறந்த பிறகு என் கணவரிடம் ஓவியப் பயிற்சி மையம் ஆரம்பிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்தேன். அவரும் ஊக்குவித்தார். 2012ல் படப்பையில் ‘ஷான் இன்ஸ்ட்டியூட் ஆஃப் பைன் ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் ஓவியப் பயிற்சி மையத்தினை துவங்கினேன்.

மாணவர்கள் ேசர ஆரம்பித்தார்கள். குழந்தைகள், குடும்பம், பிசினஸ் என அனைத்தையும் தனித்து பார்த்துக் கொண்டேன். என் பயிற்சி மையத்தின் முதலாண்டு விழாவில் என் மாணவர்கள் வரைந்த ஓவியங்களை கண்காட்சியாக வைத்தேன். மேலும், ஓவியப் போட்டியும் நிகழ்த்தினேன். இதன் மூலம் படப்பை மக்கள் மத்தியில் என் பயிற்சி பள்ளி மேல் ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டது. அதன் பிறகு ஐந்து வருடம் கழித்து காஞ்சிபுரத்தில் ஒரு கிளையினை துவங்கி அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.

ஓவியம் என்றாலே நம்முடைய நினைவுக்கு வருபவர் நடிகர் சிவகுமார்தான். கடந்த ஜூலை மாதம் எங்களின் ஓவியக் கண்காட்சி இடம் பெற்றிருந்தது. அதில் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். எங்களின் மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கம் அளித்து பேசினார். மேலும், அவர் வரைந்த ஓவியங்களை காண்பித்து அதிலுள்ள நுணுக்கங்களை விளக்கினார். இது எங்களுக்கு சிறந்த வழிகாட்டுதலாக அமைந்தது. நான் படித்த படிப்பு சார்ந்த வேலையில் ஈடுபடவில்லை.

மாறாக என் மனசுக்குப் பிடித்த வேலைதான் எனக்கான அடையாளத்தினை கொடுத்திருக்கிறது. இன்று பல சோதனைகள், வேதனைகள், துயரங்களை தாங்கி என் வாழ்க்கையின் திசையை மாற்றியது இந்த ஓவியக்கலைதான். என்னதான் அனுபவ அறிவைக் கொண்டு நான் பலருக்கு பயிற்சி அளித்தாலும், பயிற்சியாளர் என்ற முறையில் நான் முறையாக படித்திருக்க வேண்டும். அதனால் ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் சேர்ந்து ஓவியம் குறித்து இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றேன்.

எனக்கு ரியலிஸ்டிக் ஓவியங்கள் வரைய பிடிக்கும். பார்ப்பதை அப்படியே வரைவேன். இன்று பலரும் மாடர்ன் ஓவியங்களைதான் அதிகம் விரும்புகிறார்கள். அதற்கு ஏற்பவும் என் திறமையை நான் அப்டேட் செய்து கொள்கிறேன். என்னுடைய பல ஓவியங்கள் பெண்ணியம் சார்ந்திருக்கும். பயிற்சி அளிப்பது மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்கள் விரும்பும் ஓவியங்களை நான் வரைந்தும் தருகிறேன். தாத்தா, பாட்டியின் பழைய போட்டோக்களை அப்படியே வரைந்து அது ஓவியமா அல்லது புகைப்படமா என வியக்கும் அளவுக்கு வரைந்து தருகிறேன். இன்று பலரும் AIயில் புகைப்படங்களை மாற்றுகிறார்கள். என்னதான் அறிவியல் துறை வளர்ந்து வந்தாலும், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களில் இருக்கும் உயிரோட்டம் AI புகைப்படங்களில் உணர முடிவதில்லை.

ஓவியக்கலை மீது ஆர்வம் உள்ள பெண்கள் இதனை கற்றுக்கொள்வதன் மூலம் யாருடைய தயவும் இல்லாமல், சுய மரியாதையுடன், உழைத்து உயர முடியும். என் பயிற்சி மையத்தில் டிப்ளமோ பயிற்சி அளிப்பதால், அதை பயில்பவர்கள் பள்ளியில் டிராயிங் டீச்சராக பணியில் சேரலாம். சிலர் பொழுதுபோக்கிற்காக கற்றுக் கொள்வார்கள். அதற்கான தனிப்பட்ட பயிற்சியுள்ளது. பென்சில் ஷேடிங், பேஸ்டல் பெயின்டிங், வாட்டர் கலர் பெயின்டிங், அக்ரலிக் பெயின்டிங், ஆயில் பெயின்டிங், ரெசின் ஆர்ட், வுட் கார்விங் என பல பயிற்சிகளை அளித்து வருகிறோம். இந்தியாவில் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் பயிற்சி அளிக்கிறோம்.

பெண்களுக்கு ஓவியப் பயிற்சி அளித்து அவர்களும் என்னைப்போல் பள்ளி ஒன்றை துவங்கி சொந்தக் காலில் நிற்க வேண்டும். வெளிநாடுகளில் என் ஓவிய பயிற்சி பள்ளி சார்பாக ஓவியக் கண்காட்சிகள், ஓவியப் போட்டிகள் நடத்தவும் திட்டமிட்டு வருகிறேன்’’ என்ற தேவிகா ஓவியக் கலையில் பல பரிசுகள் மற்றும் விருதுகளை பெற்றுள்ளார்.

தொகுப்பு: விஜயா கண்ணன்