Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலையும் மனப்பிறழ்வும்!

நன்றி குங்குமம் தோழி

மனம் பேசும் நூல் 12

உளவியல் சார்ந்த ஒவ்வொரு புத்தகமும் வாழ்வியலையும், அதன் மாற்றங்களையும் பேசியது. இந்தப் புத்தகம் நாம் கொண்டாடும் கலையின் வழியாக மனிதர்கள் தங்களை என்ன மாதிரி நிலை நிறுத்துகிறார்கள் என்பதைச் சொல்கிறது. மேலும், இது மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட கட்டுரை.இதில் உலகளவில் நடைபெற்ற நாடகங்களின் மொழியினை பதிவு செய்து இருக்கிறார்கள். மொழிப்பெயர்த்தவர் வெளி ரங்கராஜன். நாடகத்துக்காகவே ‘வெளி’ என்ற இதழைத் தொடங்கி பத்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தியவர்.

இந்த மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள் வழியாக, நாடக அழகியல் என்று சொல்லக்கூடிய உடல் மொழியின் ஆற்றல் குறித்தும், இயங்கு தளங்களின் பாதிப்பு குறித்தும் செறிவான பார்வைகளின் பிரதிபலிப்பாய் விவரிக்கப்படுகிறது.உதாரணத்திற்கு கூட்டுணர்வு, உரையாடல், ஸ்பரிசம், அசைவுகள் மற்றும் பாத்திரம் என்று அறியப்படும் ஒரு குணாம்சத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும், அவை நம்முடன் கொண்டுள்ள உறவு நிலைகளும், பன்மை நாடக உருவாக்க முறைகளையும் இந்தக் கட்டுரைகள் விவரிக்கிறது.

‘பெரும்பாலும் நாடகங்களில், மனித நிலைமை என்பது அடிப்படையில் அபத்தமானதும், குறிக்கோளற்றுதுமானது’ என்று ஆல்பர்ட் காம்யூ, ‘The Myth of Sisypus’ கட்டுரையில் எழுதிய கோட்பாடு பற்றி அபத்த நாடகாசிரியர்கள், வழங்கி வந்த கட்டுமானங்களையும், தர்க்க ஒழுங்கு முறைகளையும் புறக்கணித்தனர். பாத்திரங்கள் தங்கள் நிலைமைகளின் யதார்த்தத்தை மாற்ற எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், அது தொடர்ந்து அர்த்தமற்று வழக்கமான கதியிலேயே இயங்கி வருவதையும் சித்தரித்தனர்.

ராபர்ட் வில்சன் ஒரு பள்ளி ஒன்றை ஏற்படுத்தி, தங்களுக்கு இயைந்த நிலையில் வைத்துக் கொள்வதற்கு ஆட்களை தயார் செய்தார். உடல்கள் பூரண நிலையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவருடைய நாடகம் மெதுவான நீண்ட அசைவுகள் மூலம் உடல்களின் மீது ஆதிக்கம் செலுத்தியது என்று நிரூபிக்கிறார்.நாட்டுப்புற நாடகங்களின் கால அட்டவணை என்பது, சிந்தனை மாற்றத்தைக் குறிப்பது அல்ல. ஓர் அனுபவத்தின் தன்மை, மக்களின் கற்பனை, மற்றும் உணர்வு ரீதியான தேவைகளை பொறுத்தே அது நுட்பமாக உணரப்படுகிறது.

ஒரு கலைஞன் யதார்த்தத்தைக் களமாகக் கொள்ளும் போது, தனக்குள்ளும், தன் மக்களிடத்திலும், தொடர்புகளிலும் சில மாற்றங்களை அவரால் விளைவிக்க முடியும். பெரும்பாலும் கலைஞனிடம் முழுமை என்ற நிலையை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.மனிதனுடைய வாழ்க்கையின் பெரும்பான்மை நிகழ்வுகள், மதம் சார்ந்த அமைப்பிலிருந்து விடுபட்டவையாய் இருக்கின்றன. மதம் தாக்கம் செய்கிற பகுதிகள் குறைந்து, சமூகம் அங்கீகரிக்கும் சில பகுதிகளில் செயல்படும் தொழிலாகி விடுகிறது. நாட்டுப்புற நாடகத்தில் தப்பித்தல் குணாம்சங்களும், அடையாளங்களும் ஒன்று போல் தோன்றுவது, அமைப்பு ரீதியான ஒற்றுமையில் நேர்ந்த விபத்து போல் இருக்கும்.

அபத்த நாடகம் 20ம் நூற்றாண்டின் மகத்தான நாடக நிகழ்வு என்றே நினைக்கிறேன். ஏனென்றால், அது நவீன மனிதனை அப்படியே ஒரு சிக்கலான நிலைப்பாட்டில் வைத்து விளக்குகிறது. இது ஆறுதலோ, நம்பிக்கையோ அளிப்பதல்ல. எப்படி நாம் நம்பிக்கையின்றி வாழ்கிறோம் என்பதையே நினைவுப்படுத்துகிறது. அபத்த நாடகத்தில் எச்சரிக்கையின் சாராம்சம் இதுவே. அபத்த நாடகாசிரியனிடம் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு இல்லை. அவன் தனது பார்வையாளர்களிடமிருந்து மேம்பட்டவனாகவோ, விழிப்படைந்தவனாகவோ நினைப்பதில்லை. நாம் எல்லோரும் உழன்று கொண்டிருக்கும் நிலைப்பாட்டிற்கு உருவம் கொடுப்பதிலும், நாம் துணையற்று நிற்கும் உண்மையை நினைவுப்படுத்துவதிலுமே தன் பங்கை அவன் உணர்கிறான்.

19ம் நூற்றாண்டின் கலாச்சார மறுமலர்ச்சி மேற்கத்திய உலகில் பல முற்போக்குக் கருத்துக்களையும் எடுத்துக் கொண்டு வந்தது. அந்தக் கருத்துக்கள் எல்லாப் பகுதிகளிலும் உள்ள முற்போக்குக் கருத்துக்களுடன் இணைந்து செயல்வடிவம் பெறாமல் தெளிவற்று நகரங்களிலேயே தேங்கிவிட்டன. உடல்மொழி மூலம் கலை எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை இத்தாலிய கலை விமர்சகர் Lea Vergine, உடல், மனம் சார்ந்து இயங்குவதை விளக்குகிறார். இதில் பெரும்பாலான கலைஞர்கள் எல்லாவற்றையும் அவநம்பிக்கையுடனே பார்க்கக்கூடியவர்கள். ஆனால், அறிவார்ந்த வடிவங்களை கவனத்துடன் நாடக்கூடியவர்கள். ஆர்தோவைப் போலவே உடல் சார்ந்த அறிவு மற்றும் ஆய்வு மனநிலை கொண்டவர்கள்.

உடல் ரீதியான மற்றும் மனரீதியான பலகீனங்கள் குறித்த தடையற்ற வெளிப்பாடுகள் மூலம்தான் கலைஞர்களால் தங்கள் வாழ்க்கையில் சில குறுக் கீடுகளை நிகழ்த்த முடிகிறது. இருபாலருக்கும் பொதுவான உடல்கூறு தன்மைகள் நம்மிடம் உள்ளன. ஆனால், பலரிடத்திலும் பால் ஆதிக்கம் என்பது பிற பாலினத் தன்மையை நசுக்குவதாகவே அமைகிறது. ஆண் - பெண் குணாதிசயங்களை மாற்றியமைத்தும், இருபால் தன்மைத் தோற்றங்களை பிரதானப்படுத்தியும், புனைவு சித்தரிப்புகளை உருவாக்கியும் அவர்களுடைய பாத்திரங்களை தீர்மானிப்பதில் நெருக்கடியை உருவாக்குகிறார்கள்.

உடல் அசைவுகள் பலவகைப்பட்டவை என்றாலும், அதில் அடிக்கடி செய்யப்படுபவை முக்கோணல்கள்தான். முகத்தை சிதைத்துக் கொள்வது என்பது யதார்த்தத்தை அல்ல. ஆனால், உண்மையை அணுகும் முறையாகும். கலை என்பதே சமூக அனுமதி பெற்றே தீவிர உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இடமாக இருக்கிறது. நவீன மனநோய் மருத்துவ முறைகளும், மனப்பிறழ்வுக்கான சிகிச்சை முறைகளும் வந்த பிறகு, இந்த இரண்டு வகைகளையும் இணைத்து ஒரு புதிய கலை உருவானது. மனப்பிறழ்வு கொண்டவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட நோயாளிகளால் கலைத் தன்மையுடன் உருவாக்கப்பட்ட மனவியல் கலை அது.

Deleuze&Guattari கருத்துப்படி இது போன்ற ஆக உலகங்கள் ஒருபோதும் நாம் நினைப்பது போல் அந்தரங்கமானவையோ, தன் வயப்பட்டவையோ அல்ல. தன் வயப்பட்டவன் பிரக்ஞயற்ற வடிவங்களில் சமூகத் தளத்தை ஆக்ரமிக்கிறான். மனப்பிறழ்வின் உண்மையான கலை இயக்கம் என்பது, வழக்கமான வாசித்தலுக்கு உருவாகும் தடைகளால் சரியாக புரிந்து கொள்ளப்படவோ, தாண்டிப்போக முடியாமலோ இருக்கிறது. வேலை இருக்கிற இடத்தில் மனப்பிறழ்வுக்கு இடமில்லை என்கிற பூக்கோவின் வாதத்துக்கு இதுவே பொருள் என்று நினைக்கிறேன்.

பல வழிகளில் ஒரு மனவியல் கலைஞனின் பிம்பம், ஒரு கலை மேதையின் மறுபதிப்பாக, தங்கு தடையற்ற இயல்பான படைப்பாளியாய் இருக்கிறது. ஆனால், துன்புற்றும், வதைக்கப்பட்டும், தோற்றம் கொண்டு, அதனால் இந்த நூற்றாண்டின் மையத்தில், மனநல மருத்துவம், மன இயல் கலையை, மனநோயின் குறிப்பிட்ட போக்கின் நேரடிச் சாட்சியாக எடுத்துக் கொண்டதில் ஆச்சரியம் இல்லை.

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மனநோயாளிகளில் கலை உருவாக்கத்தில் ஈடுபட்டவர்கள் இரண்டு சதவிகிதமாக இருக்கலாம் என்கிறது ஆய்வுகள். மனவியல் கலையின் சிதைவு, குவிப்பு, பாலியல் குறியீடுகள், பூடகத்தன்மை போன்ற அழகியல் குணாம்சங்கள் எல்லாம் மனநோயின் மனோதத்துவ அடையாளங்களுடன் நேரடியான தொடர்பு கொண்டவை.

பிளேட்டோ வகைப்படுத்திய பிறழ்வுகள் எல்லாம், சாமியேற்றம் அல்லது உற்சாகம், காதல், பிராயச்சித்தம், கடவுள் தன்மை அல்லது கவிதை சம்பந்தப்பட்டது. இவை ஆபத்தானவைதான். உடலுக்கும், மனத்துக்குமான உறவில் காயம் உண்டாகக் காரணமாக இருந்தவைதான். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாக இருக்கலாம், அதிகமான இருப்பு உள்ளவையாக இருக்கலாம், வழக்கத்திற்கு மாறான தன்மையுடன் சம்பந்தப்பட்டவையாக இருக்கலாம். பிறழ்வுகள் மற்ற வடிவங்கள் எல்லாம் அறியாமை மற்றும் குறைகளின் காரணமாக வெளிப்படுகிறது. மனப்பிறழ்வு கொண்டவர்களுக்கும், கலைஞர்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறேன். கலைஞனிடம் கட்டுப்பாட்டின் எல்லைகள் பத்திரமாக இருக்கின்றன. ஆனால், மனப்பிறழ்வு கொண்டவனிடம் சுதந்திரம் இருப்பதாக தோன்றினாலும், உண்மையில் அவனிடம் ஏதுமில்லை. கற்பனையை விடவும் சில விஷயங்கள் வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை படைப்பாளர்கள் மறக்க மாட்டார்கள்.

கட்டுரைத் தொகுப்பு முழுவதும் இவ்வாறாக நாடகங்களின் வகைகளையும், அதன் பிரதிபலிப்பையும் பேசுகிறது. கலைஞர்கள் அனைவரின் உடல் மொழியிலும், கலாச்சார மொழியிலும் அவர்கள் எந்தளவிற்கு தங்களை ஒப்படைக்கிறார்கள் என்பதையும் ஆய்வு செய்திருக்கிறது. நாடகத்தின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு, உலக அளவில் இருக்கும் நாடகங்களின் தன்மைகளை மிக நேர்த்தியாய் விவரித்திருக்கிறார் இந்த நூலின் ஆய்வாளர்.