நன்றி குங்குமம் தோழி
நான்கு சுவர்களுக்குள் நந்தவனம்
அனைவருக்குமே தங்கள் வீடு அழகாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை. அழகுற அமைப்பது என்பது ஒரு கலை. ஆனால், எப்படிப் பொருட்களை பராமரிப்பது என்று தெரியாது. பொருட்களை அடுக்குவதிலும் குழப்பம் ஏற்படும். ஆடம்பரப் பொருட்கள் மட்டும் அழகைத் தராது. ஒரு வீட்டின் அமைப்பு அந்தந்த வேலைகளுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். ஒவ்வொரு பொருளும் அதற்கான இடத்தில் அழகுற வைக்கப்பட வேண்டும்.
நம் வீட்டிலுள்ள ஒவ்வொரு அறையும் அதற்கு ஏற்பதான் இயங்கப்படுகிறது. சமையல் அறையில் படுத்து உறங்குவதும், உறங்கும் அறையில் உட்கார்ந்து சாப்பிடுவதும் எப்படி சரியாகாதோ, அதே போல்தான் பொருட்கள் வைக்கும் இடமும் சரியாக இருக்க வேண்டும். மேலும், சுகாதாரம், சுத்தம் இரண்டும் சேரும் போது அழகும் வந்து விடும். வீட்டு உறுப்பினர்கள் எத்தனை பேர் இருந்தாலும், ஒவ்வொருவரும் எந்தப் பொருள் எங்கு இருக்கும் என்பதை தெரிந்து கொண்டால்தான், வேலைகளும் சரியாக நடைபெறும்.
வீட்டில் பொருட்களை அழகாக வைக்க வேண்டும் என்று நினைப்போம். ஆனால், அதற்கான வசதி வீட்டில் இருக்காது. நம் வீட்டுக்குத் தேவையான வசதிகளை நாமே நிச்சயிக்க வேண்டும். மற்றவர் வீட்டில் உள்ள பொருட்களும் நம் வீட்டில் அமைக்கலாமே என்று யோசிப்போம். ஆனால், நம் இடத்திற்கு அது ஒவ்வாமல் போகலாம். எனவே, நம்மிடம் இருக்கும் பொருட்களை அழகழகாய் அடுக்க நமக்கு என்னவெல்லாம் தேவைப்படுமோ, அதை மட்டுமே இடத்திற்குத் தகுந்தபடி அமைத்துக் கொள்வதுதான் நல்லது.
விருந்தினர் நம் வீட்டிற்கு முதலில் வரும் போது, பெரிய வீடு என்று ஆச்சர்யப்படுவதுடன் ‘அழகான வீடு?’ என்று சொல்வதைத்தான் நாம் விரும்புவோம். அந்தக் காலத்தில் பெண்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டை மட்டுமே நிர்வகித்து வந்தார்கள். ஆனால், இன்று பெண்களும் ஆண்களுக்கு நிகராக வேலைக்கு செல்கிறார்கள். அதனால் வீட்டுப் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு என ஒவ்வொரு செயலிலும் இருவர் பங்கு காணப்படுகிறது. வீட்டுப் பொருட்களை எப்படி வைக்க வேண்டும்? எவ்வாறு பராமரிக்கலாம் என்று கணவன்-மனைவி இருவரும் கலந்து ஆலோசிக்கிறார்கள். ஒவ்வொரு அறையையும் எப்படி அமைக்கப் போகிறோம் என்று அவரவர் விருப்பப்படி செய்து கொள்ளலாம்.
அழகழகாக பொருட்களை அடுக்க வேண்டுமானால் அலமாரிகள் அவசியம். உள் அலங்காரம் மேற்கத்திய பாணியில் செய்கிறார்கள். ஒரு சில இடங்களில் பொருட்களே கண்களுக்குத் தென்படாது. வீட்டில் சமைப்பார்களா, சாப்பிடுவார்களா என்று கூட புரியாது. மிக்ஸி, கிரைண்டர் போன்ற உபகரணங்களைக்கூட கண்ணாடி அலமாரியில் வைத்து விடுகிறார்கள்.
இதுவும் ஒரு ரசனைதான்.குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, தேவைப்படும் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், பயன்படும் உபகரணங்களுக்கு ஏற்ப அலமாரிகளை அமைக்கலாம். தண்ணீர் புழங்கும் இடத்தைத் தவிர, எங்கெல்லாம் அடுக்குவதற்கான அலமாரிகள் போட முடியுமோ அங்கெல்லாம் போடலாம். அந்த நேரத்தில் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். மூன்று பேர் இருக்கும் குடும்பத்தில் ஐந்து பேர் இருக்கும்படியான வசதியும், ஐந்து பேர் இருக்கும் குடும்பத்தில் ஒருவர் தங்குவதற்கான வசதியோடு கூடிய அழகான அலமாரிகளை நம் இஷ்டம் போல் செய்து விடலாம். இது சமையல் அறைக்கு பொருந்தும்.
வரவேற்பறையில் மனதிற்குப் பிடித்த பொருட்களை வைத்து அலங்கரிக்கிறோம். சமையலறையில் டப்பாக்கள், பாத்திரங்கள், சமைப்பதற்கான உபகரணங்களை வைக்கிறோம். அவற்றையும் அழகுற அடுக்கி, காட்சிப் பொருளாக்கி விட்டால் வேறு விதமான கலைக்கூடமாகத் திகழும். சுவற்றிலும் முடிந்த அளவிற்கு அலமாரிகளை அமைக்கலாம். சுவரின் பரப்பளவு அதிகம் இடம் முழுமையும் பயன்படுத்த உதவும்.
மேலும், சுவற்றோடு ஒட்டி காணப்படுவதால், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும். கிச்சன் கேபினட்கள் பார்க்க சிறியதாக இருந்தாலும், அதற்குள் நிறைய பொருட்களை சிறியதொரு பிரிவு மூலம் உள்ளே அடக்க முடியும். உதாரணத்திற்கு மாடுலர் கிச்சனில், பெரிய பெரிய பொருட்கள் மட்டுமில்லாமல், கரண்டிகள், சிறிய கப்புகள், ஸ்பூன்கள், தட்டுகள் என அனைத்தையும் தனித்தனியாக அடுக்கிவிடலாம்.
கேபினட்டுகளை ‘இன்பில்ட்’ மற்றும் ‘ப்ரீஸ்டாண்டிங்’ என இரண்டு வகையில் அமைக்கலாம். மேலே சொன்னவை அனைத்தும் ‘இன்பில்ட்’ வகைதான். மரத்தால் அமைப்பது ‘ப்ரீஸ்டாண்டிங்’ முறை. ஸ்டீலிலும் அமைக்கலாம். அந்தக் கால வீடுகளில் நிறைய மர பீரோக்கள் இருந்தன. மரம் உறுதியானது. தரம் வாய்ந்தது, விலையுயர்ந்தது என்பதால், நிறைய பயன்படுத்தினார்கள். இன்றைய காலக்கட்டம் அப்படி இல்லை. எல்லாமே ரெடிமேடாக கிடைக்கிறது. பூஜை அலமாரியில் துவங்கி டிரெஸ்ஸிங் டேபிள், படுக்கும் மேசை என அனைத்தும் ரெடிமேடாக கிடைக்கிறது.
மருத்துவர் மற்றும் வக்கீல் வீடுகளில், நுழைந்தவுடன் அழகழகான கண்ணாடி அலமாரிகள் நம் கண்களில் படும். சட்டப் புத்தகங்களும், மருத்துவப் புத்தகங்களும் வரிசையாக அடுக்கியிருப்பதைப் பார்க்க முடியும். அப்பொழுதெல்லாம் மர பீரோக்களில் கண்ணாடி போட்டு பார்வை படுத்தியிருப்பார்கள். அது பல தலைமுறைகளுக்கு அப்படியே இருக்கும். இன்று புதுப்புது டிசைன்கள் வந்து விட்டன. இப்பொழுதைய காலகட்டத்தில் தொலைக்காட்சிப் பெட்டியும் சுவற்றிலேயே ‘ஷோகேஸ்’ அமைப்பிலேயே இடம் பெறுவதால், புது வீடு கட்டுபவர்கள் ஒரு பக்க சுவர் முழுவதையும் கூட இதற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
ஒரு தோரணம் கட்டுவது போன்ற அமைப்பில், நடுவில் தொலைக்காட்சிப் பெட்டியும், இரண்டு பக்கவாட்டிலும், மேற்புறமும் கண்ணாடி அலமாரிகள் அமைக்கப்படுகிறது. இதற்கு பெயர் ‘வால்யூனிட்’. இதன் அடிபாகம் முழுவதும், மூடிய அலமாரிகளாக மாற்றிக் கொண்டுவிட்டால் செய்தித்தாள்கள், ஆல்பங்கள், பத்திரிகைகள் என அடுக்கி வைத்து விடலாம். ஸ்டோரேஜாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அளவுக்கு அதிகமான அலங்காரப் பொருட்களோ, வாங்கிய விருது சான்றிதழ்களோடு நிறைய ஞாபகார்த்த படங்களோ மேலும் காட்சிப்படுத்த வேண்டுமானால், அறையின் நடுப்பகுதியில் அலமாரி அமைத்து அங்கு இதனை வைத்தால் பார்ப்பவரை வியக்க வைக்கும்.
மேலை நாடுகளில், விதவிதமான உருவங்களில் கூட அலமாரிகள் விற்கிறார்கள். அவற்றை வரவேற்பறையில் காட்சியாக்குகிறார்கள். உதாரணத்திற்கு A வடிவ அலமாரிகள் உயரமாக இருக்கும். அதில் பீங்கான் குவளைகளை அடுக்கினால் பார்க்க அழகாக இருக்கும். இந்த அலமாரிகள் மேல் சின்னச் சின்ன மணிபிளான்ட் செடியினை படரவிடலாம்.
சாப்பிடும் இடத்தில் அழகிய கண்ணாடி அலமாரி அமைத்து, அதில் சாப்பிடும் தட்டுகள், டீ கப்புகள், கண்ணாடி டம்ளர்கள் போன்றவற்றை அடுக்கி வைக்கலாம். இடம் இல்லாதவர்கள் சமையலறைப் பகுதியில் ஒரு பிரிவை இதற்காக பிரித்துக் கொள்ளலாம். கனமான பல்வேறு பொருட்கள் அடங்கக்கூடிய இடம்தான் சமையலறை. அதனால்தான் சமையலறை ‘ஸ்டோரேஜுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
சமையலறையில் தண்ணீர் புழங்கும் இடம் தவிர்த்து மேலும் கீழும் நிறைய அலமாரிகள் போட்டுக் கொள்ளலாம். அவ்வாறு அமைக்கும் போது பெரிய உயரமான டின், தூக்குகள், டப்பாக்களுக்கு தனி இடம் ஒதுக்கிவிட வேண்டும். இல்லை என்றால் பெரிய டின் போன்ற பாத்திரங்களை நாம் வெளியே வைக்க வேண்டிய சூழல் ஏற்படும். பார்க்கவும் அழகாக இருக்காது. அலமாரிகள் போடும்போதே, பொருட்களை அடுக்க ஏதுவாக இடம் விட்டு அமைத்தால், பார்க்க அழகாக இருக்கும்.
மேலை நாடுகளில் குளிர் அதிகம் என்பதால், வருடத்திற்கு ஆறு மாதங்களுக்கு மேல் ‘கோட், சூட்’ அணிவார்கள். அவற்றிற்கென ஒரு அழகான அறை போன்ற அலமாரியே இருக்கும். விருந்தினர் வீட்டு முகப்பிலேயே ‘கோட்டை’ மாட்டி விட்டுதான் வருவார்கள். போகும் போது திறந்து மாட்டிக் கொண்டு போவார்கள். அதேபோல்தான் ‘ஷூ’க்களுக்கும். எதுவுமே வெளியில் தெரியாது. ஒவ்வொரு பொருளுக்கும் ஏற்றவாறு நாம் ‘ஸ்டோரேஜ்’ அலமாரிகளை அமைத்துவிட்டால், எதுவும் அழகாகிவிடும்.
படுக்கையறையில் துணிகளை அடுக்க வார்டுரோப்கள் தேவை. அதில் அனைவரின் உடைகள், உடமைகள் பாதுகாப்பாக வைக்கலாம். தட்டுகள், திறந்து மூடும் உள்ளறை டிராக்கள், துணிகளை ெதாங்க விடுவதற்கு வசதியாக ஹாங்கர் வசதியுடன் இன்று டிசைன் செய்யப்படுகிறது. ‘பாக்ஸ்’ வடிவில் மூடிய அலமாரிகளில் உள் அறைகள் பிரிக்கப்பட்டு தனித்தனி அறைகள் போன்று இருக்கும். வார்ட்ரோபுடன் இணைந்து டிரெஸ்ஸிங் டேபிளும் வைக்கலாம். சுவர் முழுவதும் ‘வார்டுரோப்’ போடுவதால் அழகிற்கு அழகு. ஒரு பகுதி கண்ணாடி வைத்து அமைக்கும் போது அனைத்தும் ஒரே இடத்தில் பொருந்திவிடும்.
பெட்ரூம் அலமாரி அமைக்கும் போதே ஆண்கள் துணிகள் அடுக்க ஒரு புறமும், பெண்கள் துணிகளுக்கென ஒரு புறமும் பிரித்துக் கொள்ளலாம். அதனால்தான் உள்ளே வைக்கப்படும் உட்பிரிவுகளின் ‘டிசைன்’ முக்கியம். ஒவ்வொரு அறைக்குமான ‘வால்யூனிட்’ என்று சொல்லப்படும் அலமாரிகளை சரிவர அமைத்து, அழகுற அடுக்கிவிட்டால், நம் தரை முழுவதும் நடமாடுவதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். எவ்வளவு சிறிய அடுக்குமாடிக் கட்டடமாக இருந்தாலும், சரியான போதுமான ‘ஸ்டோரேஜ்’ வசதி தந்துவிட்டாலே பார்க்க அழகாக தெரியும். குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, அவர்களுக்குத் தேவைப்படும் உடைகளுக்கான இடம் இவற்றின்படி அலமாரி அமைக்க வேண்டும்.
அகலம் அதிகமான அலமாரியாக இருந்தால் இரட்டைக் கதவுகள் போடலாம். சுவர் முழுவதும் போடுவதானால் மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம். கதவுகள் திறந்து மூடும் பொழுது எதிலும் உரசாமல் இருப்பதும் முக்கியம். அந்தந்த அறைகளுக்கேற்றபடி ‘லாமினேட் ஷீட்’ போட்டு அலங்கரிக்கலாம். குழந்தைகள் அறை தனியாக இருக்குமானால், அதற்கேற்றபடி அலமாரிகள் அமைக்கலாம். விளையாட்டுப் பொருட்கள், துணி மணிகள், புத்தகங்கள் என தனித்தனி உட்பிரிவு அமைத்து விடலாம். மேலும், குழந்தைகள் வளர வளர தேவைகள் அதிகரிக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு அதற்கேற்ற எதிர்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் அதிக பிரிவுகள் கொண்ட அலமாரிகள் போடலாம். எப்படியிருந்தாலும் புத்தக அலமாரிகள் பிள்ளைகளுக்கு அவசியம்.
எவ்வளவோ பிளான் செய்து அனைத்தையும் அமைத்தாலும் ஒரு சந்தர்ப்பத்தில், அதிக பொருட்கள் ேசரும் பொழுது குழப்பம் வரும். அதனால் எதையும் செய்யும் பொழுதே, அதிகப்படியான பொருட்கள் வைப்பதற்கு ஏற்ப அலமாரிகள் அமைக்க வேண்டும். ஒருமுறை செலவழித்து எதிர்காலத்திற்கும் ஏற்றவாறு அமைப்பதுதான் சிறந்தது.
தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்


