நன்றி குங்குமம் தோழி
வழிகாட்டும் Apps...
Clue... பெண்களின் மாதவிடாய் சுழற்சி, கருமுட்டை வெளியீடு, இனப்பெருக்க ஆரோக்கியத்தை அறிவியல் பூர்வமாகக் கண்காணிக்க இந்த செயலி உதவுகிறது.
இந்த செயலி மூலம் மாதவிடாய் தேதிகளை கணித்தல், PMS மற்றும் பக்க விளைவுகள், கருவுறுதல் மற்றும் கருமுட்டை கண்காணிப்பு, கருத்தடை முறைகளை பதிவு செய்தல், கர்ப்பக்கால கணித்தல் போன்ற பல அம்சங்களை இந்த ஆப் கொண்டுள்ளது.
மாதவிடாய் நாட்களை நாம் சரியாக கணக்கிட தவறிவிடுகிறோம். அந்த சிக்கல் இனி இல்லை. இதில் உங்களின் மாதவிடாய் தொடங்கிய தினத்தினை பதிவிட்டால் அடுத்த மாதத்தில் வரக்கூடிய நாளினை கணக்கிட்டு நினைவுபடுத்த உதவுகிறது. ஒரு சிலருக்கு மாதவிடாயின் போது வயிற்றுவலி, மனநிலை மாற்றங்கள், தூக்கம், சருமத்தில் மாற்றம் ஏற்படும். அதனையும் இதில் பதிவு செய்யலாம். கர்ப்பத்திற்கு திட்டமிடும் போது கருமுட்டை வெளியேறும் நாட்கள் மற்றும் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள நாட்களை அறிவியல் முறைப்படி கணித்துக் கூறுகிறது.
மாதவிடாய் கண்காணிப்பு மட்டுமின்றி, கர்ப்பத்தினை கணக்கிடுதல், பூப்படைதலுக்குப் பிந்தைய காலக்கட்டம் என பருவ நிலைகளுக்கு ஏற்ப இச்செயலியை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட வழிமுறைகளை கொண்டு இச்செயலி இயங்குவதால், ஓரளவு துல்லியமாக கணக்கிட முடிகிறது.
மேலும், இதனை பயன்படுத்துபவர்கள் தங்களின் உடலைப் பற்றி எளிதாக புரிந்துகொள்ள 400-க்கும் மேற்பட்ட அறிவியல் ரீதியிலான வழிகாட்டல்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் விட முக்கியமானது, உங்களின் தரவுகள் பாதுகாக்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் தரவுகளை விளம்பர நிறுவனங்களுக்கோ அல்லது மூன்றாம் தரப்பினருக்கோ விற்க மாட்டோம் என்பதில் Clue உறுதியாக உள்ளது.இந்த செயலி மாதவிடாய் சுழற்சியை ஒழுங்காகவும் துல்லியமாகவும் திட்டமிட விரும்புபவர்கள், கர்ப்பம் அடைய திட்டமிட்டு, அதற்கான சரியான நாட்களை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், உடல் மற்றும் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களின் பின்னணியை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் என இரண்டு செல்போன்களிலும் இந்த செயலியினை பதிவிறக்கம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் அம்சங்கள் கொண்ட ‘Clue Plus’ செயலியினை சந்தா முறையில் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது. மாதவிடாய் சுழற்சி பற்றி மட்டுமே கணிக்காமல் பெண்கள் தங்களின் உடலைப் பற்றிய முழுமையான புரிதலை வழங்கும் ஒரு நவீன செயலியாகவும் செயல்பட்டு வருகிறது. பொதுவாக இதுபோன்ற செயலிகள் காலண்டர் கணக்கீடுகளை கொண்டு கணிப்பது வழக்கம்.
அப்படி இல்லாமல் முற்றிலும் தரவு மற்றும் அறிவியல் அடிப்படையில் செயல்படுகிறது. ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி வேறுபடும். அதற்கேற்ப நாட்களை கணக்கிடுகிறது.
மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஏற்படும் மனநிலை மாற்றங்கள், தலைவலி, சோர்வு அல்லது முகப்பரு போன்ற அறிகுறிகளை கண்டறிந்து, அடுத்த முறை அவை தோன்றுவதற்கு முன்பே எச்சரிக்கிறது. கர்ப்பமடைந்த பிறகு, குழந்தையின் வாராந்திர வளர்ச்சி, தாயின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மருத்துவர் சந்திப்புகளை கண்காணிக்க உதவுகிறது. ப்ரீமெனோபாஸ் காலத்தில் ஹார்மோன் மாற்றங்களை புரிந்துகொள்ள உதவுகிறது. எதிர்காலத் திட்டமிடுதல்களுக்கு (பயணங்கள், நிகழ்வுகள்) அடுத்த ஆறு மாதங்களுக்கான மாதவிடாய் தேதிகளை முன்கூட்டியே பார்க்கும் வசதியும் இதில் உள்ளது.
Clue செயலியினை இலவசமாக பதிவு செய்து கொண்டு அடிப்படை அம்சங்களை பெறலாம். அதுவே கூடுதல் நன்மைகளுக்கு சந்தா மூலம் Clue Plus செயலியினை பெற்றுக் கொள்ளலாம்.
Clue, உங்கள் உடலின் இயற்கை மொழியை புரிந்துகொள்ள உதவும் ஒரு மெய்நிகர் ஆரோக்கிய தோழியாகும். உங்கள் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தவும், உடலின் மாற்றங்களை அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ளவும் இச்செயலி ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது.
தொகுப்பு: மகி



