நன்றி குங்குமம் தோழி
பெண்கள் வாழ்வில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திறன்களை கற்றுக் கொண்டு வித்தியாசமான பல துறைகளில் சாதித்து வருகிறார்கள். நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, இன்று மொழி பயிற்சியாளராகவும், சாஃப்ட் ஸ்கில் டிரெயினராகவும், மிகச் சிறந்த பெண் தொழில்முனைவோராகவும் தனித்துவம் பெற்று விளங்குகிறார் செந்தில் நாயகி நடராஜன்.
‘‘கற்பித்தல் என்பது மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் கற்றுத் தருவது. அது எனக்கு நன்றாக வருகிறது” என்றவர், ஆங்கில மொழிஅறிவினை வளர்த்துக் கொள்வது மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்தும் நம்மிடையே தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
பன்முகத் திறமையாளராகவும், மொழியியல் பயிற்சியாளராகவும் சிறப்பாக செயல்பட விதையினை போட்டவர் என் தந்தை. அதே போல் என்னுடைய கற்பித்தல் பணியினை துவங்கி வைத்தவர் எனது தாய். என்னுடைய குடும்பச் சூழல் காரணமாக என்னால் கல்லூரியில் தொடர்ந்து படிக்க முடியவில்லை. அதனால் ஒரு தனியார் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றினேன். கற்பித்தலில் என்னுடைய முதல் பணி. அதில் வந்த வருமானத்தைக் கொண்டு கல்லூரியில் சேர்ந்தேன்.
ஆனால், பாடங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் இருந்ததால், என்னால் பாடங்களை புரிந்து படிக்க சிரமமாக இருந்தது. என் நிலையை புரிந்து கொண்ட ஆசிரியர்கள் எனக்கு புரியும் படி சொல்லிக் கொடுத்து உதவினார்கள். பின்னர் நடைபெற்ற தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றேன். கல்லூரி முடிக்கும் தருவாயில் ஆங்கிலத்தில் கதை மற்றும் கவிதை எழுதும் திறனை பெற்றிருந்தேன்’’ என்றார்.
தொழில்முனைவோரான அனுபவம்...
நான் கல்லூரி காலத்தில் ஆங்கிலத்தில் பாடங்களை படிக்க மிகவும் சிரமப்பட்டேன். அந்த அனுபவத்தால் கற்பித்தலை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். பட்டப் படிப்பிற்கு பிறகு நான் கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். அப்போது குரூப் லீடராக நான் இருந்தேன். என்னுடைய குழு உறுப்பினர்கள் புரிந்து கொள்ளும் படி கற்பிக்க முடிந்தது. கற்பித்தல் எனக்கு இயல்பாக வருகிறது என்று தெரிந்தது.
அதனால் வேலையை ராஜினாமா செய்தேன். தனியார் அகாடமியில் பயிற்சியாளராக வேலைக்கு சேர்ந்தேன். அங்கு மென் திறன்கள் குறித்த பயிற்சியினை அளித்தேன். பின்னர் 2019ல் ‘லேனன்’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை துவங்கினேன். அதில் பலருக்கு பயிற்சி அளித்தேன். கற்பித்தலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது எனது மிகப்பெரிய கனவாக இருந்தது. குறிப்பாக கொரோனா காலத்தில் ஆன்லைனில் இதற்கு மிகப்பெரிய வாய்ப்புகளும் கிடைத்தது.
சாஃப்ட் ஸ்கில் பயிற்சிகள்...
இது தொடர்பு திறன்கள் குறித்து மட்டுமல்ல... ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது மற்றவர்களுடன் சேர்ந்து வேலை பார்க்கும் திறன்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். சவாலான புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளவும், அதனை கையாளும் திறன்களை வளர்த்துக் கொள்ள உதவும். மேலதிகாரிகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட்டு வேலைகளில் முன்னேற முடியும்.
பணியில் ஏற்படும் பிரச்னைகளைக் கண்டறிந்து தீர்வுகளை காணமுடியும். மொழித்திறன் மற்றும் ஆளுமைத் திறன் மேம்படும். சாஃப்ட் ஸ்கில் ட்ரெயினிங் ஒருவரின் வேலைத் திறனை மேம்படுத்தும், தனிப்பட்ட குணாதிசயங்கள் மற்றும் தகவல் தொடர்பு, குழுப்பணி, தகவமைப்பு மற்றும் உணர்ச்சி நுண்ணறிவு போன்ற திறன்களை வளர்க்கிறது. இவை பணியிடத்தில் மற்றவர்களுடன் திறம்பட பணியாற்றுவதற்கும் சக பணியாளர்களிடையே உறவுகளை வளர்ப்பதற்கும் உதவுகின்றன.
இந்த துறையில் கிடைத்த அங்கீகாரம்...
என்னுடைய பணிகள் அனைத்தும் பொறுப்புகள் நிறைந்தவை. இதுவரை 5000த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறோம். அவர்களும் இப்போது உயர் பதவியில் உள்ளனர். மேலும், 46க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறோம். பள்ளி மாணவர்களுக்கும் எங்களின் பணியினை அர்ப்பணித்து வருகிறோம். வரும் காலங்களில் தமிழ்நாடு முழுவதும் பயணித்து நிறைய கல்லூரிகளிலும், நிறுவன ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டிருக்கிறோம்.
கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளராக செல்லும் போது இளம் தலைமுறையினருக்கு கற்பித்தலில் நிறைய மாற்றங்களை கொடுக்க முடிகிறது. என் கல்லூரி முதல்வர்தான் என் வாழ்வில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தினார். அவருக்கு நன்றிக் கடனாகத்தான் இந்தப் பயிற்சி மையத்தினை துவங்கினேன்.
பெண்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். உங்களின் விருப்பமான பணியை தேர்ந்தெடுத்து பயணியுங்கள். அதில் வரும் சவால்களை துணிந்து முறியடியுங்கள். சிறு தொழில்... பெரிய நிறுவனங்கள் என சொந்தமாக எந்த தொழில் செய்தாலும் அதில் பிரச்னைகளும் தடைகளும் வரத்தான் செய்யும். அதை முறியடித்து தன்னம்பிக்கையுடன் சாதிக்க வேண்டும். எத்தகைய கஷ்டங்கள் வந்தாலும் உங்களின் குறிக்கோளினை விட்டுவிடக்கூடாது. தொடர்ந்து உழைத்தால் கண்டிப்பாக வெற்றி நம் வாசல் ேதடி வரும்’’ என தன்னம்பிக்கை மிளிர பேசும் செந்தில் நாயகி வாவ் விருது, ரோல் ஸ்டார், ரோட்டரி இன்டர்நேஷனல் போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

