Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

இன்றைய வாழ்க்கை முறையில் மாற்றம் அவசியம் வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

போட்டி நிறைந்த உலகில் நம்முடைய வாழ்க்கையை தொழில்நுட்பம் எளிமைப்படுத்தி, உடல் உழைப்பை குறைத்துவிட்டது. பொருள் சார்ந்த வாழ்க்கை முறை அன்பு மற்றும் உறவுகளின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது. சீரான உணவுப்பழக்கம் இன்றி காசு கொடுத்து நோய்களை வாங்கி வருகிறோம். வருங்கால சந்ததியினருக்கு வசதியான வாழ்க்கையை தேடிப் போகும் பெற்றோர் அவர்களின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் என்பதை நினைவில் கொண்டு, வாழ்க்கை முறையில் மாற்றத்தினை ஏற்படுத்தினால்தான் அடுத்தடுத்த சந்ததியினரை பாதுகாக்க முடியும். இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையினை மக்களிடம் முன்னிறுத்தியவர்களுள் முதன்மையானவர் நம்மாழ்வார்.‘விவசாயத்திற்கு பயன்படும் இயந்திரங்கள் சாணி போடாது’ என்று அவர் சொன்ன வார்த்தைகளில் ஆழமான உண்மை இருக்கிறது. அவரின் கருத்தியலைப் பின்பற்றி பலர் வாழ துவங்கினாலும், அதனை மக்களிடம் கொண்டு செல்பவர்கள் ஒரு சிலர்தான். அதில் ஒருவர்தான் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ‘பொருநை ஈகோ கிராப்டர்ஸ்’ மற்றும் கவின் ஆர்ட் கேலரி நிறுவனர்களான கிரிஜா மற்றும் ஆனந்த பெருமாள் தம்பதியினர்.

‘‘எனக்கு சொந்த ஊர் மதுரை. நான் தனியார் வங்கியில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை பார்த்து வந்தேன். இறுக்கமான நகரச் சூழலில் வளர்ந்தேன். இயற்கை மற்றும் பயண விரும்பி. அதற்கான தேடலிலே வாழ்க்கை நகர்ந்தது’’ என்று பேசத் துவங்கினார் ஆனந்த பெருமாள். ‘‘ஒரு முறை தனியார் தொலைக்காட்சியில் நம்மாழ்வாரின் நிகழ்ச்சியினை பார்த்தேன். அதைப் பார்க்கும் போது எனக்குள் ஆர்வம் அதிகமாகி அவரைப் பற்றி தேட ஆரம்பித்தேன்.

அப்போது திருநெல்வேலியில் பாரம்பரிய உணவின் முக்கியத்துவத்தை உணர்த்த நம்மாழ்வார், வீதியெங்கும் இயற்கை உணவாகும் மற்றும் அடுப்பில்லா சமையல் பற்றியும் பயிற்சி நடத்தினார். அதில் கலந்து கொண்டேன். அங்கிருந்துதான் என் இயற்கைப் பயணம் தொடங்கியது. அந்தப் பயிலரங்கத்தில் எதை நோக்கி வாழ்க்கைப் போகிறது குறித்த புரிதல் கிடைத்தது. அவரின் மறைவுக்குப் பிறகு அவர் ஆரம்பித்த ‘வானகம்’ இயற்கை வழி வேளாண்மை மற்றும் வாழ்வியல் பயிற்சி மையத்திற்கு சென்றேன். அங்க நான் பெற்ற பயிற்சிதான் என் வாழ்க்கையின் திருப்புமுனைக்கு காரணமாக இருந்தது’’ என்றவர், ஈகோ கிராப்ட்ஸ் ஆரம்பித்த பயணம் குறித்து பகிர்ந்தார்.

‘‘நான் வங்கியில் பணியாற்றிய போது நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நிறுவனத்தைச் சார்ந்த ஒருவர் என்னிடம், ‘நீங்க நல்லா மார்க்கெட்டிங் பண்றீங்க. எங்க பயிற்சி நிறுவனத்திற்கும் மார்க்கெட்டிங் செய்து தாங்க’ என்று கேட்டுக் கொண்டார். என் மனைவியும் வங்கியில் பார்த்ததால், நான் இந்த வேலையில் ஈடுபட முடிவு செய்தேன். நிறுவனம் குறித்து மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்றால் அங்கு என்ன பயிற்சி அளிக்கிறார்கள் என்று முதலில் நான் தெரிந்து கொள்ளணும்.

அதனால் பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். அங்கு மரத்தில், வயரில் ஃபேஷன் ஜூவல்லரி வடிவமைப்பு மற்றும் ரிபைனிங் சார்ந்த பயிற்சி தந்தார்கள். அவர்கள் செய்யும் ஆபரணங்களை பயன்படாமல் தூக்கி எறியும் தேங்காய் சிரட்டையில் செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. செய்து பார்த்த போது மிகவும் சிறப்பாக வந்தது. அது என்னை இயற்கை ஆர்வலர்களோடு பயணிக்க வழிவகுத்து தந்தது.

‘‘நம்மாழ்வாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இயற்கை சார்ந்த பொருட்களைக் கொண்டு மேடையினை அலங்காரம் செய்தோம். நான் தேங்காய் சிரட்டையில் செய்த நகைகள் மற்றும் அலங்காரப் பொருட்களை மேடையில் வைத்தேன். வந்தவர்கள் அனைவருக்கும் தேங்காய் சிரட்டையில் செய்த என் பொருட்கள் மிகவும் கவர்ந்தது. புதிய முயற்சி என்று பலரும் பாராட்டினார்கள். மேலும், அங்கு வந்தவர்கள் அவர்களின் விசேஷங்களுக்கும் மேடை அலங்காரம் செய்ய என்னை அழைக்க ஆரம்பித்தனர். என் மேல் நம்பிக்கை வைத்த போது அது எனக்குள் ஒரு உத்வேகத்தை கொடுத்தது. ‘குக்கூ’ அமைப்பினர்களைதான் முக்கியமானவர்கள் என்று சொல்ல வேண்டும். என் வேலைப்பாட்டின் மேல் நம்பிக்கை வைத்து என்னை ஊக்குவித்தார்கள். அந்த நம்பிக்கைதான் ‘பொருநை ஈகோ கிராப்டர்ஸ்’ உருவாகக் காரணமாக அமைந்தது.

அதன் பிறகு வங்கிப் பணியை ராஜினாமா செய்தேன். முழுமையாக என்னை இந்த வேலையில் இணைத்துக் கொண்டேன். நகைக்கும் தேங்காய் ஓட்டுக்கும் என்ன சம்பந்தம் என்றவர்களும் என் கைவினையைப் பார்த்து வியந்தார்கள். மனைவியைத் தவிர சுற்றியுள்ளவர்கள் யாரும் இதுல சோறு, காசு கிடைக்காது என்றே பேசினார்கள். ஆனால், இன்று இந்த தேங்காய் சிரட்டைதான் எனக்கான ஒரு சொந்த வீட்டினை கட்டும் அளவிற்கு வளர்த்துள்ளது’’ என்றவர், அவர் செய்யும் மேடை அலங்காரம் குறித்து விவரித்தார்.

‘‘‘எங்க மேடை அலங்காரம் அங்கு கிடைக்கும் மரம், செடி, கொடிகள், தூக்கி எறியும் பொருட்களை வைத்தே இருக்கும். தேவையான சில பொருட்களை மட்டும் வாங்குவோம். எங்கள் வேலைப்பாடு எல்லோரையும் கவர்ந்தாலும், விசேஷங்கள் குறைவு என்பதால் வேலையும் குறைவாக கிடைத்தது. ஆனால், ஆர்கானிக் ஸ்டோர் வைத்திருப்பவர்கள் எங்களை அணுகி அவர்களின் கடைகளுக்கு உள்ளலங்காரம் செய்ய சொல்லி கேட்டார்கள். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

புத்தக கண்காட்சிகளுக்கும் மேடை அலங்காரங்கள் செய்துள்ளேன். சென்னை, மதுரை, பெங்களூரு போன்ற நகரங்களிலும் நாங்க வேலை பார்த்து வருகிறோம். அலங்கார வேலை இல்லாத நாட்களில் தேங்காய் ஓடுகளில் நகை வடிவமைப்பு குறித்த பயிற்சி அளிக்க ஆரம்பித்தேன். என்னிடம் பயிற்சி பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இன்று இதனை தொழிலாகவே செய்கிறார்கள்’’ என்றவர், ‘கவின் ஆர்ட் கேலரி’ பற்றி பேசினார்.

‘‘மனைவிக்கு வங்கிப் பணியில் மாற்றலாகி திருநெல்வேலி வந்தோம். அங்கு கோல்டு ரிபைனிங் யூனிட் வைத்தேன். என் மனைவியும் வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு ரிபைனிங் யூனிட்டினை கவனித்துக் கொண்டார். நான் சூழலியல் சார்ந்த பயணம் மற்றும் பயிற்சி எடுப்பதில் பிசியாக இருந்தேன். அந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. திருநெல்வேலியில் உள்ள கொண்டா நகரத்திற்கு குடியேறினோம். நான் விரும்பிய தற்சார்பு இயற்கை வாழ்வியலை எல்லோருக்கும் எளிமையாக உணர்த்த வாய்ப்பு கிடைத்தது.

நான் நகரத்தில் இருந்து கிராமச் சூழலுக்கு சென்ற நேரம் அந்தக் கிராம மக்கள் நகரத்தின் ஆடம்பர வாழ்க்கையை நோக்கிய தேடலில் இருந்தனர். அங்கிருந்தவர்களிடம் இயற்கை சார்ந்த வாழ்வியலை பற்றி புரிய வைக்க முன்னெடுத்த போது எல்லோரும் என்னை எதிரி போல பார்த்தனர். மிரட்டவும் செய்தனர். கண்டிப்பாக ஒருநாள் இதனை நம்புவார்கள் என்று என்னுடைய வேலையில் கவனமாக இருந்தேன். அந்தக் கிராமத்தில் சில குடும்பங்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களிடம் பேசிய போது ஒரு சிலர் மட்டுமே பீடி தொழிலை விட்டு விட்டு தேங்காய் சிரட்டை கைவினைக் கலையை கற்றுக் கொள்ள முன் வந்தார்கள். அவர்களுக்கு கூலியை கொடுத்து பயிற்சியும் அளித்தேன்.

ஆரம்பத்தில் சிரட்டைகளை வெட்டும் போது கைகளில் காயம் ஏற்பட்டதால், வேண்டாம் என்று ஒதுங்க நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து அவர்கள் செய்த பொருட்களை காட்சிப்படுத்தினேன். ஆரோவில் போன்ற வெளிநாட்டவர் இருக்கும் இடத்திலும் மற்றும் முக்கிய இடங்களில் பலரிடம் அவர்களை அறிமுகப்படுத்தினேன். அனைவரும் அவர்களின் கைவினையை புகழ்ந்தார்கள். அவர்களை தொடர்ந்து பலரும் இத்ெதாழிலில் இணைய ஆரம்பித்தார்கள்’’ என்றவரை தொடர்ந்தார் அவரின் மனைவி கிரிஜா.

‘‘நானும் வங்கிப் பணியில் இருந்தாலும் என் கணவரின் இயற்கைச் சார்ந்த வாழ்வியல் கோட்பாடு எனக்கும் பிடித்திருந்தது. குறிப்பாக அவர் வடிவமைக்கும் தேங்காய் ஓடு கைவினைப் பொருட்கள். நானும் அந்தக் கலையினை ரசிக்கத் தொடங்கினேன். கணவர் பயிற்சி அளிப்பது மட்டுமில்லாமல் பொருட்களை வடிவமைப்பார். நான் விற்பனை, புரோமோஷன், மார்க்கெட்டிங் போன்றவற்றை கவனித்துக் கொள்வேன். மேலும், மகளிர் சார்ந்த பணிகளை ஒருங்கிணைத்தல், ஆர்டர், பேக்கிங் போன்ற வேலைகளையும் நான் பார்த்துக் கொள்வேன்.

தேங்காய் ஓட்டின் மூலமே பல உயர் அதிகாரிகளும் வேளாண் துறை அறிஞர்களும் அறிமுகமானார்கள். அதில் முக்கியமானவர் விஷ்ணு சார். அவர்தான் எங்களுக்கு அடையாளம் கொடுத்தது மட்டுமில்லாமல் வாய்ப்பு மற்றும் அஙகீகாரமும் ஏற்படுத்திக் கொடுத்தார். அரசு தரப்பில் பல வகையில் உதவி செய்தாலும் திட்டம் வகுத்து ஆட்களை தேடுகின்றனர். ஆட்கள் இல்லாமல் இயந்திரங்கள் பழுதாகின்றன. நாங்கள் இத்தொழிலில் ஆட்களை வைத்துக் கொண்டு திட்டங்களை வேண்டுகிறோம். காய்கறி தோட்டம், இயற்கை விவசாயம் பயிற்சி ஆகியவற்றைப் பார்த்து நானும் இயற்கை ஆர்வலர்கள் குழுவில் இணைந்து செயல் பட தொடங்கிவிட்டேன்’’ என்கிறார் கிரிஜா ஆனந்த பெருமாள்.

செய்தி: கலைச்செல்வி