நன்றி குங்குமம் தோழி
போதனா சிவானந்தன், உஸ்பெகிஸ்தானில் சமர்கண்ட் நகரில் செப்டம்பர் 15 முதல் 27 வரை நடைபெற்ற 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இங்கிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தி ‘உமன் கிராண்ட் மாஸ்டர்’ (Woman Grand master) பட்டத்தை வென்றார். மிகக் குறைந்த வயதில் இந்தப் புகழ்பெற்ற பட்டத்தை வென்ற இந்திய வம்சாவளியான போதனா சிவானந்தனின் வயது 11.
இதற்கு முன் உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்திய கேடெரினா லாக்னோ, 12வது வயதில் கிராண்ட் மாஸ்டர் (Grand master) பட்டத்தை வென்றிருந்தார். சீனாவைச் சேர்ந்த ஹூ யிஃபான் (Hou Yifan) என்பவரும் 12 வயதில் ஒருபடி உயர்வான ‘ஓபன் கிராண்ட் மாஸ்டர்’ (Open grand master) பட்டத்தைப் பெற்றார். ‘உமன் கிராண்ட் மாஸ்டர்’ பட்டத்தை 11 வயதில் வென்றுள்ளதால் போதனா கின்னஸ் சாதனை புத்தகத்திலும் மூன்றாவது முறையாக இடம் பெற்றுள்ளார்.
10 வயதிலேயே போதனா சதுரங்கத்தில் மிகக் குறைந்த வயதில் ‘உமன் இன்டர்நேஷனல் மாஸ்டர்’ ஆனதும், சதுரங்கப் போட்டியில், கிராண்ட்மாஸ்டர் ஒருவரை தோற்கடித்த மிகக் குறைந்த இளம் வயது வீராங்கனை ஆனதும் அந்த முதல் இரண்டு சாதனைகளாகும்.உலகெங்கிலும் உள்ள போட்டியாளர்களிடமிருந்து கடுமையான சவாலை எதிர்கொண்ட பிறகு, இப்பட்டத்தைப் பெறுவதற்கான தனது மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டத் தகுதியை போதனா உறுதி செய்தார். போதனா விளையாடிய 11 ஆட்டங்களில் எட்டு புள்ளிகளை பெற்றார்.
சென்ற ஆண்டு இங்கிலாந்தின் லிவர்பூலில் நடைபெற்ற பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், போதனா சிவானந்தன், கிராண்ட் மாஸ்டர் பீட்டர் வெல்ஸை வீழ்த்தி மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டரை தோற்கடித்த சிறுமி என்ற பெருமையை பெற்றவர். 60 வயதான கிராண்ட் மாஸ்டர் பீட்டர் வெல்ஸை போதனா தோற்கடித்து தலைப்பு செய்தியானார். “பத்து வயது போதனா எப்படி அனுபவம் மிகுந்த 60 வயது கிராண்ட் மாஸ்டரை வென்றிருப்பார்? போதனா மேஜிக் செய்யும் மந்திரவாதியாகத்தான் இருக்க வேண்டும்” என்று செஸ் ஜாம்பவான்கள் அதிசயித்து கருத்து தெரிவித்தனர்.
முழுநேரப் பள்ளிப் படிப்பிற்கும், செஸ் விளையாட்டிற்கும் சம முக்கியத்துவம் வழங்கி வரும் போதனா, இந்த மகத்தான வெற்றி தன்னை உலகமெங்கும் கொண்டு சென்றுள்ளது என்கிறார்.
‘உமன் கிராண்ட் மாஸ்டர்’ என்பது செஸ் உலகில் பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பட்டமாகும். இது வாழ்நாள் முழுவதும் பெயருடன் இணைந்திருக்கும்.‘‘இந்த ஒலிம்பியாட் போட்டியின் போது, ‘போர்டு 1’-ல் (Board one) விளையாடினேன். பொதுவாக ஒரு அணியின் மிகச் சிறந்த வீரருக்காக இந்த இருக்கை ஒதுக்கப்படும். இது எனது இரண்டாவது ஒலிம்பியாட் என்பதால், நான் செஸ் ஆட்டத்தை ரசித்து விளையாடினேன். நான் ஆடிய சதுரங் கப்பலகைதான் வேறு. மற்றபடி ஆட்டம் முந்தைய போட்டியை போலவே இருந்தது.
சதுரங்கப் போட்டி தவிர எனக்குப் பயணம் செய்வது பிடிக்கும். போட்டிகளுக்காக வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால், பள்ளிக்கு விடுப்பு சொல்ல வேண்டியிருக்கும். போட்டி முடிந்து வீட்டிற்கு வரும்போது, பள்ளியில் நடத்தப்பட்ட பாடங்களை வீட்டில் படித்து எழுதி விடுவேன். ஒரு பக்கம் செஸ் விளையாட்டு, மறுபக்கம் படிப்பு என்று பயணிக்கிறேன்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பொழுது போக்காக சதுரங்கம் விளையாடத் தொடங்கினேன். சதுரங்கக் காய்களின் பலவித வடிவங்கள் என் ஆர்வத்தைத் தூண்டி தொடர்ந்து ஆடச் செய்தன. இணையவழிப் பாடங்கள் மற்றும் யூடியூப் காணொளிகள் மூலம் காய்கள் எவ்வாறு எதற்காக நகர்த்தப்படுகின்றன என்பதை கற்றுக் கொண்டேன். சதுரங்கம் விளையாடுவதால், கணக்குப் பாடமும் எனக்கு எளிதாக உள்ளது. நான் லண்டனில் பிறந்தவள். நாங்கள் தற்போது ஹாரோ(Harrow) பகுதியில் வசித்து வருகிறோம்’’ என்றார் போதனா.
தொகுப்பு: கண்ணம்மா பாரதி


