Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

1 லட்சம் வாடிக்கையாளர்கள்... தினம் 700 ஆர்டர்கள்!

நன்றி குங்குமம் தோழி

தொழிற்நுட்பம், பொழுதுபோக்கு வளராத காலத்தில் பெண்கள் அன்றாட வீட்டு வேலைகளை செய்வதிலேயே பொழுதைக் கழித்தனர். அவர்களுக்கு வீட்டு வேலைகள் பெரிய பளுவை தரவில்லை. ஆனால், இன்றைய பொருளாதார சூழலில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். குடும்பத்தில் இருவரும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பச் செலவுகளை பெரும்பாலும் குறைக்க முடிகிறது. இதை ஆண்களும் மறுப்பதில்லை.

இப்படியிருக்க பெண்கள் வேலையோடு சேர்த்து ஏற்கனவே உள்ள சமையல், குழந்தைகள் என குடும்ப பொறுப்புகளையும் கூடுதல் கவனத்துடன் பார்க்க வேண்டியுள்ளது. வேலைக்குப் போகும் பெண்களால் அவசர கதியில் சரிவர சமைக்க முடியாமலும் போகின்றது. குடும்பத்தினரை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் சமையலுக்கு துணையில்லாமல் போவதால் பெரும்பாலும் வெளியில் கிடைக்கும் துரித உணவுகளுக்கு எல்லோரும் பழக்கமாகின்றனர். காசு கொடுத்து நோய்களை வாங்குகின்றனர். இத்தகைய அம்மாக்களுக்கு நாங்கள் உதவுகிறோம் என்கிறார் பாரதி. இவர் சென்னை நங்கநல்லூரில் ‘ஃபிரஸ்ஜிஸ்’ என்ற பெயரில் காய்கறிகளை சமைப்பதற்கு ஏற்ப வெட்டி, அழகாக பேக்கிங் செய்து ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார்.

‘‘நான் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தேன். பி.காம் முடிச்சு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். குடும்பம், குழந்தை, வேலை என அனைத்தும் மேனேஜ் செய்யும் போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. வேலைக்குப் போய்விட்டு அசதியுடன் வீட்டிற்கு வரும் போது இரவு நேர உணவினை சமைக்க சிரமமாக இருக்கும். இதனால் அடிக்கடி ஹோட்டல் சாப்பாட்டினை நாட வேண்டி இருந்தது. ஒரு கட்டத்தில் இப்படியே தொடர்ந்தால் பாதிப்பு நமக்குதான் என்று தோன்றியது.

சரியான வாழ்க்கை வாழ ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தேன். நல்லா வாழ, சாப்பிட தானே சம்பாதிக்கிறோம். என்னைப் போல அம்மாக்களுக்கு உள்ள பிரச்னை சமைக்க ஆசையிருந்தாலும் சமையலுக்கான வேலைக்கு உதவ யாருமில்லை என்பதுதான். சமையலில் பெரிய வேலையே காய்கறிகளை நறுக்குவதுதான். வீட்டில் உள்ளவர்கள் அந்த வேலை செய்து கொடுத்தால், சமையல் வேலை பெரிசாக தெரியாது.

இந்தக் கஷ்டம் வேலைக்குப் போற பெண்களுக்கு மட்டும் இல்லை. தனியாக இருக்கும் வயதானவங்க, நோயாளிகள், கர்ப்பிணிகள் எல்லோருக்கும் இருப்பதை யோசிச்சேன். அந்த சிந்தனைதான் ‘ஃபிரஸ்ஜிஸ்’ ஆரம்பிக்க காரணம். நாங்க ஃபிரண்ட்ஸ் மூணு பேர் சேர்ந்து 2023ல் சிறிய அளவில் துவங்கினோம். இன்று மாதம் 700 ஆர்டர்கள் வருகின்றன’’ என்றவர் இதன் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

‘‘கோயம்பேட்டில் தான் காய்கறிகளை வாங்குகிறோம். எங்க இடத்துக்கு விடியற்காலை 2 மணிக்கு காய்கறிகள் வந்துவிடும். எல்லாவற்றையும் கழுவி, அன்றைய ஆர்டர்களுக்கு ஏற்ப வெட்டி துவங்குவோம். இதற்காக இணையம் மற்றும் ஆப் உள்ளது. அதில் முந்தைய நாள் ஆர்டர்கள் வந்துவிடும். அதற்கேற்ப காய்கறிகளை வெட்டி பேக்கிங் செய்திடுவோம். பேக்கிங் முடித்த ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்திடுவோம். நாங்க காய்கறிகளை ஸ்டோர் செய்வதில்லை என்பதால், அன்றைய ஆர்டர் பொருத்துதான் காய்கறிகளை வெட்டுவோம்.

எல்லாவித காய்கறிகள், பழங்கள், கீரைகள் மற்றும் இட்லி, தோசை மாவுகள் மேலும், சிறுதானிய வகைகள், பாரம்பரிய அரிசி மாவுகள் என 250 பொருட்களை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப டெலிவரி செய்கிறோம். ஆரம்பத்துல நானும் என் மூன்று தோழிகளும் சேர்ந்துதான் இதனை துவங்கினோம். ஆனால், தற்போது நான் மட்டுமே இதனை செய்து வருகிறேன். 20க்கும் மேற்பட்ட பெண்கள் மூன்று ஷிஃப்ட் அடிப்படையில் வேலை செய்கிறார்கள்.

வீட்டிலிருந்து கொண்டே சிலர் ஆர்டர்கள் மற்றும் கஸ்டமர் கேரினை பார்த்துக்கிறாங்க. முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே வேலைக்கு நியமித்து இருக்கிறேன்’’ என்றவர், காம்போ

முறையிலும் வழங்கி வருகிறார்.‘‘ஆரம்பத்துல கத்தரித்த காய்கறிகளை மட்டுமே டெலிவரி செய்து வந்தோம். வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைகளை சொல்ல ஆரம்பித்தார்கள். தோசை மாவு வகைகள், வடை மாவு, தேங்காய் துருவல், தேங்காய்ப்பால், முளைக்கட்டிய தானியங்கள், ஒரு உணவு தயாரிக்க தேவையான காய்கறிகளையும் மற்ற பொருட்களையும் கேட்டார்கள். அதாவது, கேரளா அவியல் என்றால் அதற்கேற்றவாறு காய்கறிகள், தேங்காய் துருவல், மசாலா என காம்போவாக கேட்டார்கள். இதே போல் சாம்பார் கிட், சூப் கிட், குருமா கிட், பஜ்ஜி கிட் என பல வகையான உணவுகளுக்கும் காம்போ கிட் தருகிறோம்’’ என்றவர், முழுக்க முழுக்க சைவ உணவுகளுக்கான கிட்களை மட்டுமே டெலிவரி செய்து வருகிறார்.

‘‘நாங்க குழந்தைகளுக்கு தேவையான ஹோம்மேட் பிஸ்கெட்டுகள், கேக்குகள், பிரெளனிஸ் ஆகியவற்றுக்கும் ஆர்டர் எடுக்கிறோம். இதனை வீட்டிலிருந்து பேக்கரி தொழில் செய்யும் பெண்களிடம் இருந்து பெற்றுக் கொள்கிறோம். எங்கள் காய்கறி யூனிட் அருகே ‘நியூரிஸ் ஃபிரஸ்ஜிஸ்’ என்ற பெயரில் கிளவுட் கிச்சன் ஒன்றையும் திறந்திருக்கிறோம். ஆர்டர் மூலம் உணவினையும் தயாரித்து தருகிறோம்’’ என்றவர், பிசினஸில் தான் சந்தித்த சவால்களை பகிர்கிறார்.

‘‘இந்த பிசினஸ் தொடங்கிய நாள் முதல் இன்று வரை பல சவால்களை சந்தித்துவிட்டோம். பொருட்களின் தரம் குறையக்கூடாது. சில சமயம் டெலிவரியில் சிக்கல் ஏற்படும். அவை எல்லாம் பிசினஸில் எங்களுக்கு ஒரு அனுபவமாக ஏற்று அதற்கான தீர்வினை கண்டறிந்தோம். சில சமயம் டெலிவரி நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆட்கள் மது அருந்திவிட்டு வருவார்கள். பொருட்களை டெலிவரி செய்யாமல் எடுத்துக் கொண்டு போய்விடுகின்றனர். இல்லையென்றால் கூடுதல் பணம் கேட்கிறார்கள். சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை. பல நேரங்களில் பொருட்களை இழந்திருக்கிறோம்.

நாங்கள் சென்னையில் 23 கிலோ மீட்டர் ரேடியஸ் வரை பொருட்களை சப்ளை செய்கிறோம். நாங்கள் தயாரிப்பது ‘ரெடி டூ ஈட்’ மற்றும் ‘ரெடி டூ குக்’ முறையில் இருப்பதால் நேரம் கடந்து போனால் கெட்டுவிடும். அதனால் தூரமாக உள்ள இடங்களுக்கு சப்ளை செய்வதில்லை. வீட்டு விசேஷங்கள் மற்றும் விருந்துகளுக்கும் நறுக்கிய காய்கறிகளை ஆர்டர் மூலம் சப்ளை செய்கிறோம். சுமார் 80 பேருக்கு தேவையான காய்கறிகள் வரை நறுக்கி தருகிறோம். அசைவ உணவுகளுக்கும் அசைவம் தவிர மற்ற காய்கறிகளை நறுக்கி தருகிறோம்.

காய்கறிகளை நறுக்க இயந்திரங்களை பயன்படுத்துவதில்லை. அன்றைய சமையலுக்கு தேவையான பொருட்களை டெலிவரி செய்வதால், பிரிசர்வேட்டிவ்களை உபயோகிப்பதில்லை. கத்தரிக்காய், வாழைக்காய் போன்றவை நறுக்கியவுடன் கறுத்துப் போகும். அதனால் அதனை மட்டும் மஞ்சள் கலந்த தண்ணீருடன் பேக் செய்து தருகிறோம். பெரிய உணவகங்களும் எங்களை அணுகியிருக்கிறார்கள். அதற்கான முயற்சியில் இருக்கிறேன்’’ என்றவர் உணவுக் கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ் பெற்றுள்ளார்.

‘‘இங்கு வேலை செய்யும் பெண்கள் அனைவரும் எளிமையான குடும்பப் பின்னணியை சேர்ந்தவர்கள். சில பெண்கள் சிங்கிள் பெற்றோராகவும் இருக்கின்றனர். எங்கள் நிறுவனம் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது. அவர்களின் உழைப்புதான் எங்கள் மூலதனம். எங்களின் இணையத்தில் வெப்சைட்டில் ஆர்டர் நேரம், கிடைக்கும் நாட்கள், டெலிவரி டைம் என எல்லா விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.

வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் உணவுக்கான காய்கறி பட்டியலும் தரலாம். நாங்கள் டெலிவரி செய்வோம். நான் என் குடும்பம், குழந்தைக்காக தொலைநோக்குடன் ஆரம்பித்தது இன்று விருட்சமாக வளர்ந்து கைக்கொடுக்கிறது. பெண்களின் சிரமங்களை ஆண்கள் உணர வேண்டும். எங்கள் குடும்பத்தில் எனக்கு முழு சுதந்திரம் உள்ளது. ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை அடைந்திருக்கிறோம் என்று நினைக்கும் ேபாது பெருமையாக உள்ளது’’ என்கிறார் புதுமைப்பெண்ணான பாரதி.

செய்தி: கலைச்செல்வி