Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

போட்டோ மேக்னட் தொழிலில் கலக்கும் சென்னை தம்பதி!

நன்றி குங்குமம் தோழி

புகைப்படங்கள் கடந்த கால நினைவுகளின் பெட்டகங்கள். இன்று செல்போன்களால் புகைப்படங்களின் முக்கியத்துவம் பல மடங்கு கூடியிருக்கிறது. போட்டோ எடுத்தால் ஆயுசு குறையும் என்ற எண்ணத்தை மாற்றி தாங்கள் செலவிடும் ஒவ்வொரு நிமிஷத்தையும் போட்டோவாக எடுத்து குதூகலிக்கின்றனர் இன்றைய இளைஞர் பட்டாளம். செல்ஃபி போட்டோக்களுக்காக எந்த எல்லைக்கும் செல்கின்றனர். பழமொழிகளை சொல்லித் திரிந்த வயதானவர்களும் புகைப்படங்களை விரும்பும் அள விற்கு தொழிற்நுட்ப வளர்ச்சியால் தெளிவான புகைப்படங்கள் எல்லோரையும் கவர்ந்து வருகின்றன.

முன்பு புகைப்படங்களை பிரேம் போட்டு வீட்டில் மாட்டி வைப்போம். ஆனால், இன்று அந்த புகைப்படங்களை பல்வேறு முறையில் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். அந்த வரிசையில் இன்று டிரெண்டிங்காக இருந்து வருகிறது, போட்டோ மேக்னட்ஸ். நம்முடைய புகைப்படங்களை அழகாக வடிவமைத்து அதில் மேக்னட் இணைத்து தருகிறார்கள். இதை நாம் விரும்பும் இடங்களில் ஒட்டிக் கொள்ளலாம். ‘‘சிறிய அளவில் பிரேம் போட முடியாத முக்கிய போட்டோக்களை போட்டோ மேக்னட்களாக வடிவமைக்கலாம்’’ என்கின்றனர் போட்டோ மேக்னட் தொழிலில் கலக்கும் சென்னை தம்பதியினரான நிரஞ்சனா மற்றும் சங்கர்குமார்.

‘‘நான் படிச்சு வளர்ந்தது சென்னையில் தான்’’ என்று பேசத் துவங்கினார் நிரஞ்சனா. நான் இன்டீரியர் டிசைனிங் இளங்கலைப் பட்டமும், மனிதவளத்துறையில் முதுகலைப் பட்டமும் முடிச்சிருக்கேன். எனக்கு ஆர்ட் அண்ட் கிராஃப்ட் என்றால் மிகவும் பிடிக்கும். என் கணவர் ஐ.டி ஊழியர். அவர் கொடுத்த ஊக்கத்தினால், ஓவியம் மற்றும் கலை வேலைப்பாடுகளுக்கு பெயின்ட்டுகள் தயாரிக்கும் பிரபல கம்பெனியில் ஆர்ட் அண்ட் கிராஃப்ட் பயிற்சியாளராக ஐந்து வருடங்கள் பணியாற்றினேன். ஐ.டியில் வேலை பார்த்தாலும் என் கணவருக்கு சொந்தமா தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. குழந்தை பிறந்த பிறகு வேலையை ராஜினாமா செய்தேன். அப்போது ஒருநாள் இன்ஸ்டாவில் போட்டோ மேக்னட்ஸ் பற்றிப் பார்த்தேன். அதை செய்து பார்க்க விரும்பினேன்’’ என்றவரை தொடர்ந்தார் சங்கர்குமார்.

‘‘நாங்கள் இந்த பிசினஸினை தற்செயலாகத்தான் ஆரம்பித்தோம். என் மனைவி சொன்ன போது, அதிக முதலீடு இல்லாமல் மற்றும் எளிமையாக செய்யக்கூடியதாகத்தான் இருந்தது. அதனால் முழுமையாக இது குறித்து தெரிந்து கொண்டோம். கடந்தாண்டு அக்டோபர் மாதம், ‘ஸ்னாப் டேல்ஸ் மேக்னஸ்’ என்ற பெயரில் ஆரம்பித்தோம். வட இந்தியாவிலிருந்து போட்டோ மேக்னட் இயந்திரங்கள் வாங்கினோம். ஆரம்பத்தில் நிறைய தவறுகள் நடந்தன. பொருட்கள் எதுவும் தரமாக இல்லை. போட்டோக்கள் சரியான பேப்பரில் பிரின்ட் செய்ய முடியாமல் சிக்கி கிழிந்தன. மேக்னட்டில் ஒட்டும் போது உடைந்தன. பிளாஸ்டிக் உடைவதால் மெட்டலில் தயாரித்தோம். இப்படி பல சிக்கல்கள். ஆனால், என் மனைவி இதை விடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இருந்தார்’’ என்றார்.

‘‘எந்த ஒரு பிசினஸ் என்றாலும் மூணு மாசம் பிரச்னைகளை சமாளித்தால் அதில் ஜெயித்துவிடலாம். இதை மனதில் வைத்து மூன்று மாதங்கள் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் என்னுடைய படைப்புகளை பதிவு செய்தேன். ஆர்டர் வரத் துவங்கியது. என் கணவர் வேலையை முடித்து வந்தபிறகுதான் நான் என் வேலையை ஆரம்பிப்பேன். காரணம், நான் செய்வதை அவர் வீடியோவாக எடுப்பார். அதை நாங்க இன்ஸ்டாகிராமில் பதிவிடுவோம். ஆரம்பத்தில் வட இந்தியாவில் இருந்துதான் பொருட்கள் வாங்கினோம். அவை தரமாக இல்லை. அதனால் பல ஆய்வுக்குப் பிறகு வெளிநாடுகளில் வாங்க ஆரம்பித்தோம். தற்போது நான்கு மிஷின்கள் வைத்திருக்கிறோம். சதுரம், வட்டம், செவ்வகம், இதயம் என அந்தந்த வடிவங்களுக்கான மிஷின்களும் குறிப்பிட்ட அளவுகளில் பிரேம்களும் வைத்திருக்கிறோம்’’ என்ற நிரஞ்சனா இதுகுறித்து பயிற்சியும் அளித்து வருகிறார்.

‘‘என் வீடியோக்களை பார்த்த இல்லத்தரசிகள், கல்லூரி மாணவிகள் இதுகுறித்து பயிற்சி அளிக்க சொல்லி கேட்டார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் 25 நபர்கள் என இதுவரை ஒன்பது பேட்சுகள் முடித்திருக்கிறோம். உபகரணங்கள் இல்லாமலும் இயந்திரங்கள் கொண்டு செய்யவும் பயிற்சி அளிக்கிறோம்.

ஆன்லைன் மட்டுமில்லாமல் நேரடி பயிற்சியும் அளிக்கிறோம். என்னிடம் பயிற்சி பெற்றவர்களுக்கு அவர்கள் பிசினஸ் ஆரம்பிக்க அனைத்து வசதிகளும் செய்து தருகிறோம். பெண்களுக்கு ஏற்ற எளிமையான குறைந்த முதலீடு உள்ள தொழில்களில் இதுவும் ஒன்று. எட்டு மாதங்களில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் என் கணவர் ஐ.டி வேலையை விட்டுவிட்டு முழுமையாக இந்தத் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார். இப்போது நாங்க இருவரும் சேர்ந்துதான் இதை செய்து வருகிறோம்.

சாதாரணமாகத்தான் ஆரம்பித்தோம். எல்லோரும் தந்த ஊக்கம் மற்றும் வரவேற்பால் சிறு தொழிலாக பதிவு செய்யுமளவிற்கு வளர்ந்திருக்கிறோம். நான் பயிற்சி குறித்து பார்த்துக் கொள்கிறேன். அவர் உபகரணங்கள் வாங்குவது, சர்வீஸ், கணக்கு வழக்கு எல்லாம் பார்த்துக் கொள்கிறார். சாதாரண மக்கள் மட்டுமில்லாமல் கடைகளுக்கும் போட்டோ மேக்னட்களை வழங்கி வருகிறோம். கடவுள், மிருகங்கள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் என பல வகையான மேக்னட்களை நாங்க வடிவமைத்து தருகிறோம். திருமணம், பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளுக்கு இதனை ரிட்டர்ன் பரிசாகவும் கொடுக்க ஆர்டர் தருகிறார்கள். மேலும், விழாக்களில் அழகான தருணங்களை படம் பிடித்து அதை போட்டோ மேக்னட்டாக தரும் ேபாது அவர்களின் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது.

எல்லா தொழில்களை போல இதற்கும் போட்டியாளர்கள் வந்துவிட்டார்கள். இருந்தாலும் நம்முடைய தொழில் தரமாக இருந்தால் வாடிக்கையாளர்கள் நம்மை விட்டு விலகமாட்டார்கள். நாங்கள் தரத்தைதான் முதலீடாக கருதுகிறோம். எங்களுடையது நீடித்து உழைக்கக் கூடியவை. ஒரு இயந்திரத்தில் ஒரு நாளைக்கு 400 போட்டோக்கள் வரை செய்யலாம். எங்களுக்கு அதிகளவில் ஆர்டர்கள் வரும் போது எங்களிடம் பயிற்சி முடித்தவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்குகிறோம்.

எங்களால் போக முடியாத இடங்களுக்கு அவர்களை அனுப்பி விடுவோம். தற்போது என்னிடம் இரண்டு பணியாளர்கள் உள்ளனர். எங்களை பொறுத்தவரை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறிய பரிசில் பெரிய நினைவை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உழைக்கிறோம்’’ என்கின்றனர் இளம் தொழில்முனை ஜோடியான நிரஞ்சனா-சங்கர்குமார் தம்பதியினர்.

தொகுப்பு: கலைச்செல்வி