Sunday, July 14, 2024
Home » பெண்கள் இதற்காக இனி தயங்க வேண்டாம்!

பெண்கள் இதற்காக இனி தயங்க வேண்டாம்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

‘‘அதிர்ந்து சிரித்தால், வேகமாக தும்மினால், ஒரு சில பெண்களுக்கு அவர்களை அறியாமல் சிறுநீர் வெளியேறும். இது பெண்கள் எதிர்கொள்ளும்‌ தலையாய பிரச்னை. வயதானவர்கள்‌ மட்டுமல்ல இளம்‌ பெண்களும்‌ இதனால்‌ அவதிப்படுகிறார்கள்‌. இதற்கு பல காரணங்களை குறிப்பிடலாம். இந்தப் பிரச்னைக்கு மருத்துவ துறையில் ஸ்ட்ரெஸ் யூரினரி இன்கான்டினென்ஸ் மற்றும் அர்ஜ் யூரினரி இன்கான்டினென்ஸ் என்று குறிப்பிடுவார்கள்.

ஆண்டுதோறும், ஜூன் மாதம் 17 முதல் 23ம் தேதி வரை உலக கான்டினென்ஸ் வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வாரம் முழுதும் இயற்கை உபாதைகளை அடக்க இயலாமை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர்ப்பை பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். குறிப்பாக பெண்களிடம் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. ஆனால் இதனால் உடல் மற்றும் மனம் சார்ந்த பாதிப்பு ஏற்படும் என்பதால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்கிறார் இயன்முறை
மருத்துவரான பேராசிரியர் சத்யபிரபா.

‘‘பெரும்பாலும் இப்பிரச்னை அதிகமாக பகிரப்படாத காரணத்தால் இது ஒரு சமூகப் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. வெவ்வேறு வயது நிலைகளில் உள்ள பெண்கள் இப்பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுகளின்படி 25% இளம் வயதினர், 44-55% நடுத்தர வயதினர் , 75% வயதானவர்கள் இப்பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். ஹார்‌மோன்‌ பாதிப்பு, கர்ப்ப காலம்‌, பிரசவம்‌, மெனோபாஸ்‌, பிறப்புறுத்தசை சார்ந்த அறுவை சிகிச்சை, மலச்சிக்கல், உடல் பருமன் என பல காரணங்களை குறிப்பிடலாம்.

முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள்‌ ‘ஸ்ட்ரெஸ்‌ யூரினரி இன்கான்டினென்ஸ்‌’ என்ற பிரச்னையால்‌ அவதிப்படுகிறார்கள்‌. சிறுநீர்‌ பாதையில்‌ ஏற்படும்‌ பிரச்னையாலும்‌, அதைச்‌ சுற்றியிருக்கும்‌ தசைகள்‌ தளர்வடைவதாலும்‌ இந்தப்‌ பிரச்னை ஏற்படும்‌. இவர்கள்‌ தும்மினாலோ, சிரித்‌தாலோ, இருமினாலோ, எடையை தூக்கும்‌ போதோ அல்லது குனிந்து நிமிரும்‌ போதோ சிறுநீர்‌ கசிவு ஏற்படும்‌. பொதுவாக மற்றவர்கள்‌ 4 முதல்‌ 6 மணி வரை சிறுநீரை அடக்க முடியும்‌. ஆனால்‌, இவர்களால்‌ அடக்க முடியாது. லேசான தும்மல்‌ வந்தால்‌ கூட பெரும்‌ அளவில்‌ கசிவு ஏற்படும்‌.

சிலர்‌ அடக்க முடியாமல்‌ சிறுநீர்‌ கழிக்கவும்‌ வாய்ப்பு உள்‌ளது. இந்தப்‌ பிரச்னை சுகப்பிரசவத்தில்‌ குழந்தை பெற்றவர்கள்‌, நரம்பியல்‌ குறைபாடு உள்ளவர்கள்‌, சிறுநீர்‌ நோயாளிகள்‌, தண்டு வடம்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌, உடல்‌ பருமனாக உள்ளவர்களை அதிகம்‌ பாதிக்கும்‌. இதனால்‌ அவர்கள்‌ மனதளவில்‌ பாதிப்படைகிறார்கள்‌. வெளியே சொல்லவும்‌ கூச்சப்படுகிறார்‌கள்‌. பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்கிறார்கள். குடும்பத்திலிருந்து தங்களை தனிமைப்படுத்தி, மற்றவர்களுடன் உரையாடுவதையும், தொலைதூரப் பயணங்களையும் தவிர்த்து மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களில் 50%க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ உதவியை நாடுவது இல்லை. இப்பிரச்னைக்கு தகுந்த நேரத்தில், மகளிர் நலம் மற்றும் சிறுநீரக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சை முறைகளை பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்வதால் இதற்கான தீர்வினை அடைய முடியும். மேலும் பரிசோதனையில் ஆரம்ப கால அறிகுறிகள் உள்ளவர்கள் எளிய இடுப்பு மற்றும் அடித்தள தசைப் பயிற்சி (pelvic floor muscle exercises), சிறுநீர்ப்பை பயிற்சி பழகுவித்தல் (bladder training) போன்ற பயிற்சிகளை இயன்முறை மருத்துவரின் உதவுடன் பின்பற்றினால் விரைவில் பிரச்னை குறைய வாய்ப்புள்ளது.

முக்கியமாக பெண்களின் இடுப்புத்தள தசைகள் வலுவாக்க தேவையான பயிற்சி, கர்ப்ப காலம் முன்னும் பின்பும், மாதவிடாய் நிற்கும் தருவாயிலும் அதற்கான பயிற்சிகளை தெரிந்து கொண்டு பிரச்னை ஏற்படும் முன்பே அது வராமல் தவிர்க்கலாம். மேலும் அவர்களின் அன்றாட வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்களில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும். இனி இந்தப்‌ பிரச்னையை கண்டு கூச்சப்படாமல்‌ அதற்கான நிபுணரை அணுகி பிரச்னைக்கு தீர்வு காண முடியும்‌” என்றார் பேராசிரியர் சத்யபிரபா.

தொகுப்பு: ரிதி

You may also like

Leave a Comment

nineteen − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi