எவ்வித அனுமதியும் இல்லாமல் நடத்தப்படும் அங்கீகாரம் இல்லாத விடுதிகள் பலவற்றில் சுற்றுலாப்பயணிகள் தங்குகின்றனர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் விதிகளை மீறி வீடுகள் விடுதிகளாக்கப்பட்டு வருவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுச்சேரிக்கு சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். பிரெஞ்சு கலாசாரத்தின் ஜன்னலாக விளங்குவதாலும், இங்குள்ள பாரம்பரிய கட்டிடங்கள், சுற்றுலா இடங்களை காணவும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக வெளிநாட்டவர் புதுச்சேரிக்கு வருகின்றனர். நடப்பாண்டு 2023-2024ம் ஆண்டு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு பயணிகளும் 1 லட்சத்து 50 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் வருகை தந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இங்குள்ள தங்குமிடங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இன்னும் கூடுதலாக 10 ஆயிரம் தங்குமிடங்கள் தேவைப்படுகின்றன.
இதனால் அறைகள் பாற்றாக்குறை நிலவுகிறது. இதனை பயன்படுத்திக்கொள்ளும் ஓட்டல்கள், வாடகையை உயர்த்தி வசூலிக்கின்றனர். இதனால் சுற்றுலாப்பயணிகள் அருகிலுள்ள தமிழகத்தின் கோட்டக்குப்பம் பகுதிக்கு சென்று தங்குகின்றனர். மேலும் அப்பகுதியில் புதிய தங்குமிடங்கள், ஓட்டல்கள் அதிகரித்து வருவதால், கோட்டக்குப்பம் நகராட்சி சிறப்பான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் புதுச்சேரியில் வியாபாரம் பாதிக்கப்படுவதுடன், அரசுக்கும் வரி இழப்பும் ஏற்படுகிறது. மேலும் புதுச்சேரியில் எவ்வித அனுமதியும் இல்லாமல் நடத்தப்படும் அங்கீகாரம் இல்லாத வீடுகள் பலவற்றில் சுற்றுலாப்பயணிகள் தங்குகின்றனர். இதனால் அரசுக்கு பல வகைகளில் வரி இழப்பு ஏற்படுகிறது.எனவே புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும், வீடுகளில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புடன் தங்குவதை உறுதி செய்யவும், வீடுகளில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் திட்டம் சுற்றுலாத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் இது அறிவிப்போடு காலாவதியாகிவிட்டது. இதனை சிறப்பாக செயல்படுத்துவதற்கான திட்டமிடல் இல்லாததால், இன்னமும் செயல்பாட்டுக்கு வரவில்லை. எனவே அனுமதியில்லாமல் இயங்கும் இத்தகைய விடுதிகள் முறைப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் அரசுக்கு வரிவருவாய் கிடைப்பதோடு, அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும். இதற்காக, சுற்றுலாத் துறை இயக்குநர், அப்பகுதியின் காவல்துறை எஸ்.பி, நகராட்சி ஆணையர், பொதுப்பணி துறை, ஓட்டல் சங்கம் ஆகியோர் கொண்ட குழுவினை அமைத்து தனியார் விடுதிகளை முறைப்படுத்த வேண்டும். வீடுகள் விடுதிகளாக்கப்படுவதால், பாதுகாப்பு விதி மீறல்கள், குற்றச்சம்பவங்கள் நடைபெறக்கூடிய வாய்ப்பும் ஏற்படும்.
குறிப்பாக தீயணைப்பு கருவிகள் பொருத்தப்படுதல், சுற்றுலாப் பயணிகளின் நேரம், அவர்களுடைய முகவரி உள்ளிட்டவைகளை சேகரித்தல், வெளிநாட்டவரிடம் பாஸ்போர்ட் விவரங்களையும் சேகரித்து வைத்திருக்க வேண்டும். புகை அல்லது தீப்பிடிப்பதை கண்டறியும் சாதனம், குப்பை வெளியேற்றத்துக்கு நகராட்சி விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகிறது. எனவே சுற்றுலாத்துறை, நகராட்சி நிர்வாகம் இணைந்து இதற்கான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தாறுமாறான கட்டணம்
புதுச்சேரியில் தங்குமிடங்கள் பற்றாக்குறையை பயன்படுத்திக்கொண்டு, ஓட்டல்கள் தாறுமாறாக கட்டணங்களை வசூலித்து வருகின்றன. சாதாரண நாட்களில் ஒரு கட்டணம், வார இறுதி நாட்களில் ஒரு கட்டணம் என மனம்போன போக்கில் வசூலிக்கின்றனர். ஆனால் நட்சத்திர ஓட்டல்கள், சாதாரண விடுதிகள், லாட்ஜ்களுக்கான கட்டணம் இவ்வளவுதான் வசூலிக்கப்பட வேண்டும் என்ற அளவுகோல் இல்லை. கட்டண விகிதங்கள் கண்காணிப்பதற்கான அமைப்பு ஏதும் இல்லாததால் வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இதனை யாராவது எதிர்த்து கேட்டால் அறை இல்லை, கிளம்புங்கள் என்ற பதில்தான் வருகிறது. அதேபோல் லோக்கலில் இருந்து அறை புக்கிங் கேட்டால், கொடுப்பது இல்லை என்ற புகாரும் உள்ளது.