சென்னை: தமிழ்நாடு முழுவதும் தொழிலாளர் துறை அமலாக்க அதிகாரிகள் கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது எடை குறைவாக பொருட்கள் விநியோகம் செய்த கடைக்காரர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் சட்டமுறை எடையளவுகள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் தொழிலாளர் துறை அமலாக்க அதிகாரிகளால் தமிழ்நாடு முழுவதும் 1358 கடைகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 292 விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், தபால் அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் முத்திரையிடப்படாத எடையளவுகளை வைத்திருத்தல்,சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காதது போன்றவை தொடர்பாக 1132 ஆய்வுகள் மேற்கொண்டு 315 முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.
2011ம் ஆண்டு பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் மாநிலம் முழுவதும் மொத்த மற்றும் மளிகைக்கடைகள், இறக்குமதியாளர்கள், பொட்டலமிடுபவர்கள் என பல்வேறு இடங்களில் அறிவிக்கப்பட்ட உரிய அறிவிப்புகள் இல்லாதிருத்தல், அதிகபட்ச சில்லரை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் போன்ற முரண்பாடுகள் தொடர்பாக, 1117 ஆய்வுகள் மேற்கொண்டதில், 129 விதிமீறல்கள் கண்டறியப்பட்டது. இந்த விதிமீறல்களுக்கு ரூ.5000 வரை அபராதம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற திடீர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தொழிலாளர் ஆணையரகம் எச்சரித்துள்ளது.