லண்டன்: விம்பிள்டன் போட்டியில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற குவித்தோவா நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் விம்பிள்டனில் களமிறங்குகிறார். செக்.குடியரசைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை பெட்ரா குவித்தோவா. இளம் வயதிலேயே பல்வேறு பட்டங்களைப் பெற்று டென்னிஸ் உலகில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்ற குவித்தோவா விம்பிள்டன் தொடரில் கடந்த 2011 மற்றும் 2014ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தனது திறமையால் உலகின் 2ம் நிலை வீரராக மாறிய குவித்தோவா தனது பேறுகாலத்திற்காக கடந்த 17 மாதங்களாக மகப்பேறு விடுப்பெடுத்தார். கடந்த ஆண்டு விம்பிள்டன் தொடர் நடக்கும் போது இவருக்கு மகன் பிறந்தார்.
செக் குடியரசின் புரோஸ்டெஜோவில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த கொள்ளைச் சம்பவத்தின் போது தன்னைத் தற்காத்துக் கொள்ள முயன்றபோது இடது கை மற்றும் விரல்களில் தசை நாண்கள் மற்றும் நரம்புகளில் பல காயங்கள் ஏற்பட்டதால் குவித்தோவா நீண்ட இடைவெளி எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனால் தரவரிசை பட்டியலில் 572வது இடத்திற்கு தள்ளப்பட்ட இவர் கடந்த பிப்ரவரியில் மீண்டும் டென்னிஸ் களத்திற்கு வந்தார். இம்மாத தொடக்கத்தில் குயின்ஸ் கிளப்பில் புல்வெளி மைதானத்தில் நடந்த டபிள்யூடிஏ 500 போட்டியில் தொடக்க சுற்றிலேயே தோல்வியடைந்தார். இருப்பினும் தனது தளராத முயற்சியால் மீண்டும் விம்பிள்டன் போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளார். தனது 35வது வயதிலும் ஆக்ரோஷமாக ஆடும் அவரது திறமையை காண டென்னிஸ் ரசிகர்கள் தயாராகியுள்ளனர்.