கே.வி.குப்பம் : வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சந்தை மேடு பகுதியில் வாரத்தோறும் திங்களன்று ஆட்டுச்சந்தை நடைபெறும். மாவட்டத்தின் பிரபலமான சந்தைகளுள் ஒன்றான இந்த கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் கடந்த சில வாராங்களாகவே வியாபாரம் மந்தமாகவே இருந்தது. தற்போது காதணி விழா, சுப நிகழ்ச்சிகள் மற்றும் தீபாவளி நெருங்கும் நிலையில் நேற்று ஆடுகள் விற்பனை ஜோராக நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சந்தை கூடியது.
இதில் கே.வி.குப்பம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும், குடியாத்தம், பரதராமி, காட்பாடி, அணைக்கட்டு, பள்ளிகொண்டா, ஒடுகத்தூர் என மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா மாநிலம் பலமநேரி, வேதமூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஆடுகள் தலா ₹15 ஆயிரம் வரையும் விலை போனது. கடந்த வாரங்கள் வர்த்தகம் மந்தமாக இருந்த நிலையில் நேற்று மொத்தமாக ₹1 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக வியாபாரிகள் கூறுகையில், ‘தற்போது விழாக்கள் தொடங்கியுள்ள நிலையில், இறைச்சிக்காக ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தோம். ஆனால் கடந்த வாரங்களில் நடைபெற்றது போல இல்லாமல் தற்போது விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது. தீபாவளி முன்னிட்டு நடைபெற்ற ஆட்டுச்சந்தை என்பதால் கடந்த வாரங்களை விட தற்போது கூடுதலாக விற்பனை ஆகியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஆடுகளின் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இருந்ததால், தற்போது மகிழ்ச்சியில் உள்ளோம்’ என்றனர்.