சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட குவைத் விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னையில் இருந்து ஜஷீரா ஏர்வேஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை 1.50 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் 145 பயணிகள், 10 விமான ஊழியர்கள் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இந்த நிலையில் விமானம் வானில் பறந்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விமான ஓடுபாதையில் நிறுத்தப்பட்டு கதவுகள் திறக்கப்பட்டன.
விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி, இயந்திர கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இயந்திர கோளாறு சரி செய்யப்பட முடியவில்லை. இதையடுத்து சென்னையில் இருந்து குவைத் செல்ல இருந்த ஜஷுரா பயணிகள் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பழுதடைந்த விமானத்தை ஓடுபாதையில் இருந்து அப்புறப்படுத்தி ஓரமாக நிறுத்தப்பட்டது. விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட 145 பயணிகளும் தனிப்பேருந்துகளில் ஏற்றிச் சென்று ஓட்டல்களில் தங்க வைப்பட்டனர். இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.