சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அலுவலக கூட்டரங்கில் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்தில் நடந்து வரும் பல்வேறு பணிகள் குறித்தும் மற்றும் பேருந்து முனையத்தின் இதர பணிகளான மழைநீர் வடிகால் அமைப்பு, பேருந்து முனையத்தில் முழுவதும் குளிரூட்டப்படும் பணிகள் குறித்தும், சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையிலிருந்து பேருந்து நிலையத்திற்கு செல்லும் அணுகு சாலை அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த பேருந்து முனையத்தில் மாநகர பேருந்துகள் நிறுத்தம், புறநகர் பேருந்துகள் நிறுத்தம், பேருந்துகளை பராமரிப்பதற்கான பணிமனை, தனியார் பேருந்துகள் நிறுத்தம், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், துணை மின் நிலையம், மருத்துவ மையம், குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை, தானியங்கி பணப்பொறி, பொருள் பாதுகாப்பு அறை, தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை, காவல் நிலையம், கடைகள் மற்றும் கழிவறைகள் போன்ற வசதிகள் அமைக்கப்படுவது குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
இதை தொடர்ந்து, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தினை நவீனமயமாக்கும் பணிகள் தொடர்பாக தற்போது நடந்து வரும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துதல், வளாகத்திலுள்ள சாலைகளை சீரமைத்து சுத்தப்படுத்துதல், வளாகத்திற்கு வரும் மக்களின் அடிப்படை தேவைகளை மறுசீரமைத்தல் மற்றும் வளாகத்தில் அமைய உள்ள பூங்கா பணிகள் குறித்து விரிவாக ஆய்வு நடந்தது. இக்கூட்டத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.