தாராபுரம்: குண்டடம் அருகே, தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் இறந்தன. 2 ஆடுகள் உயிருக்கு போராடி வருகின்றன. இதுபோல் காங்கயம் அருகே 4 ஆடுகளை கடித்து கொன்றன. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடம் அருகேயுள்ள ஜோதியம்பட்டியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(37), விவசாயி. இவர், தனது தோட்டத்தில் 5 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 3 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தன. மேலும் 2 ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இத்தவகலறிந்து சம்பவயிடம் வந்த கால்நடை மருத்துவர் ஆய்வு செய்தார். இதில் ஆடுகளை கடித்து கொன்றது தெருநாய்கள் என்பது காலடி தடம் மூலம் உறுதியானது.
இதேபோல் நேற்று காங்கயம் அருகே, பகவதிபாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது பட்டியில் புகுந்த தெருநாய்கள் கூட்டம் 4 ஆடுகளை கடித்துக் கொன்றன.கடந்த 11ம் தேதி தாராபுரம் அடுத்த பஞ்சப்பட்டி, சென்னாக்கல்பாளையம், சின்னக்கம்பாளையம் பகுதிகளில் விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்த தெருநாய்கள் ஆடுகளை விரட்டி வேட்டையாடி கொன்றதில் 10 ஆடுகள் இறந்தன. இப்பகுதிகளில் தெருநாய்கள் கடித்து ஆடுகள் இறப்பது தொடர்கதையாகி வருவது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.