*கூடுதல் பணிக்காக நிதி ஒதுக்க நடவடிக்கை
கூடலூர் : தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் நேரில் ஆய்வு செய்தார்.
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள குமுளியில் பொதுமக்களின் வசதிக்காக பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகளை தொடங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் குமுளியில் நவீன பேருந்து நிலையம் அமைக்க ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய பேருந்து நிலையம் 18 வணிக வளாக கட்டிடங்கள், 11 பயணியர் தங்கும் அறைகள், பேருந்து நிறுத்தம், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம், சிறிய அளவிலான பேருந்து பணிமனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய புதிய பேருந்து நிலையத்திற்கு கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன.ஆனால் ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையாமல் உள்ளது.
இந்நிலையில் நேற்று குமுளியில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் நேரில் ஆய்வு செய்தார். அதன் போது போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள்,கட்டுமான பணி ஒப்பந்ததாரர் ஆகியோர் உடனிருந்தனர். கட்டப்பட்டு வரும் புதிய கட்டுமானத்தின் அமைப்பு, தரம் மற்றும் பயன்பாடு குறித்து அதிகாரிகளிடம் எம்பி கேட்டறிந்தார்.
தொடர்ந்து தேனி எம்பி தங்கதமிழ்செல்வன் பேசுகையில், பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நிறைவடைந்து ஓரிரு மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ரூபாய் 5.5 கோடி நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில், கூடுதல் பணியாக கூடுதல் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கவும்,பேருந்து நிலையத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்புவதற்கும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து பெற்றுத்தரப்படும்.
குமுளியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு சில பெயர்களை முன் நிறுத்தி பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், யார் பெயர் வைப்பது என்பது குறித்து தமிழக முதல்வர் தான் முடிவெடுப்பார்’’ என்றார்.
சர்வே பணி துவக்கம்
போடி: போடி அருகே தர்மத்துப்பட்டி, அணைக்கரைப்பட்டி, துரைராஜபுரம் காலனி ஆகிய இடங்களில் தேனி வடக்கு மாவட்டம் திமுக, போடி மேற்கு ஒன்றிய திமுக, மேல சொக்கநாதபுரம் திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற திமுக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு தங்கதமிழ்ச் செல்வன் எம்பி பேசுகையில், “திண்டுக்கல்-சபரிமலை ரயில்வே திட்டம் நிச்சயமாக நிறைவேறும்.
அதை கொண்டு வந்தே தீருவேன். ஒன்றிய அரசின் முதல் கட்ட அனுமதியில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது சர்வே பணிகள் நடைபெற்று வருகிறது.’’ என்றார். நிகழ்ச்சிகளில் போடி மேற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணன், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் மனோஜ் குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆஜிப்கான், துணை செயலாளர் செந்தில் முருகன், மேலசொக்கநாதபுரம் பேரூர் செயலாளர் ராஜேந்திரன், பேரூர் தலைவர் கண்ணன் காளிராமசாமி, போடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நேருபாண்டியன், மீனாட்சிபுரம் பேரூராட்சி செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.