கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுகவின் 23 சார்பு அணிகளுக்கு 2 நாள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் பகலவன், மாவட்ட நிர்வாகிகள் கதிரவன், உமா மகேஷ்வரி, ரவி, ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் மாநில நிர்வாகிகள் சிவாஜி, பாஸ்கர் சுந்தரம், அன்புவாணன், ஸ்டாலின், பொதுக்குழு உறுப்பினர்கள் குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் மணிபாலன், முர்த்தி, பூண்டி சந்திரசேகர், செல்வசேகரன், சக்திவேல், வெங்கடாசலபதி ஆகியோர் உரையாற்றினர்.
நேற்று முன்தினம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி, ஆதிதிராவிடர் நல அணி, விவசாய அணி, மகளிரணி மகளிர் தொண்டரணி, விவசாய தொழிலாளரணி நிர்வாகிகளுக்கு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று திமுக அமைப்புசாரா ஓட்டுனரணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி, பொறியாளர் அணி, இலக்கிய அணி, சிறுபான்மை நல உரிமை அணி, நெசவாளர் அணி, வர்த்தகர் அணி, மருத்துவ அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, மீனவரணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, அயலக அணிகளுக்கு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து அணிகள் சார்பில் நடத்தப்பட்ட கட்சி பணிகள் குறித்து கேட்டறிந்த எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பணி ஆலோசனைளை வழங்கினார். இதில் திமுக ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் மணிபாலன், சந்திரசேகர், நகரச் செயலாளர் ரவிக்குமார், பேரூர் செயலாளர் அறிவழகன், தமிழ் உதயன், முத்து, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், மாணவரணி அமைப்பாளர் வெற்றி ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்றைய ஆய்வு கூட்டத்தில் திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் பங்கேற்று திமுக நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். நிகழ்வில் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், சசிகாந்த் செந்தில் எம்பிக்கு 40/40 தென் இசையின் தீர்ப்பு மற்றும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலரை திமுக அணி நிர்வாகிகள் சார்பில் வழங்கினார்.
* ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் புதிய பேருந்து நிழற்குடை
ஊத்துக்கோட்டை பேரூராட்சி, திருவள்ளூர் சாலை அரசு மேல் நிலைப்பள்ளி அருகில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் செலவில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் தலைமை தாங்கினார். மேலும், பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அபிராமி குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு நிழற்குடையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், திமுக பூண்டி ஒன்றியச் செயலாளர்கள் சந்திரசேகர், ஜான், பொன்னுசாமி, பேரூர் அவைத்தலைவர் வெங்கடேசன், துணைச் செயலாளர்கள் பார்த்திபன், திரிபுரசுந்தரி, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் வக்கீல் சீனிவாசன், சம்சுதீன், கோகுல்கிருஷ்ணன், ரகீம், கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் கவுன்சிலர் கோல்டு மணி நன்றி கூறினார்.