கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். இதில் அவருக்கு உதவியாக இருந்த செவிலியரும் சிக்கினார். தமிழக – ஆந்திர எல்லையோர பகுதியான ஆரம்பாக்கத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல் ஒருவர் கடந்த ஒரு வருட காலமாக சிகிச்சை அளித்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீராவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு நேற்று வந்த இணை இயக்குனர் மீரா தலைமையிலான மருத்துவ குழுவினர், மருத்துவமே படிக்காமல் போலியாக மருத்துவம் பார்த்து வந்த காளிமுத்து (27) என்பவரை கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும் அவருக்கு உதவியாக பணிபுரிந்த செவிலியரான பாத்திமா (25) என்பவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் இருவரும் உரிய ஆவணங்கள் இல்லாமல் சிகிச்சை அளித்து வந்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீரா அளித்த புகாரின் பேரில் ஆரம்பாக்கம் போலீசார் போலி மருத்துவர் காளிமுத்து மற்றும் பாத்திமா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் மாதர்பாக்கம், எளாவூர், கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, தச்சூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலி மருத்துவர்கள் கிளினிக்குகளை நடத்தி வருவதும், இதற்காக சென்னையில் உள்ள மருத்துவரின் அரசு அங்கீகார ஆவணங்களை அவர்கள் பயன்படுத்தி வருவதும் உண்மை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இனிவரும் காலங்களில் மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.