கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே. அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2002 ஆண்டு பிளஸ்-2 படித்த முன்னாள் மாணவர்கள் 22ஆண்டுகள் கழித்து ஒன்று கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நட்பின் சந்திப்பு நிகழ்வில் அவர்கள் படித்த போது அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களான எல்.எழிலரசி, கே.ஜெயச்சந்திரன், கே.ஜி.சடகோபன், பி.அண்ணாமலை, கே.ஜி.சிவலிங்கம், ஏ.எல்.வாசுதேவன், வி.முருகராஜ், கே.சந்திரசேகர், இ.பன்னீர்செல்வம், என்.எஸ்.வாசு, எஸ்.சரோஜினி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த விழாவிற்கு கே.எல்.கே அரசு மேல்நிலைப்பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர் மினி, உதவி தலைமை ஆசிரியர் வள்ளிமுத்து, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆர்.ரமேஷ் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கு சால்வை மற்றும் நினைவு பரிசளித்ததோடு, முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
இதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சார்பில் மின்விசிறி, மேசை அமைத்ததோடு. சீரமைக்கப்பட்ட இரு வகுப்பறை கட்டிடத்தை ஆசிரியர்கள் திறந்து வைத்தனர். மேலும் பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் சிறப்பிடம் பிடித்த 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் 10 பேருக்கு ஊக்கத்தொகை மற்றும் நினைவு கேடயம் விழாவில் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதோடு. நிகழ்வில் பங்கேற்ற 200 மாணவர்களும் நட்பின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக அவர்களது குடும்பத்தாரோடு பலூன்களை பறக்கவிட்டும் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்தியும் மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியர்களோடு குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.