கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சாணாபுத்தூர் ஊராட்சியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மிளகாய், காராமணி, நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். ஊராட்சி பகுதியில் சுமார் 150 ஏக்கரில் வனப் பகுதி உள்ளது. தற்போது வரை 100 ஏக்கருக்கு மேல் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் வனப்பகுதியில் இருந்த செம்மரம், தேக்கு, சவுக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களும் முந்திரி, மா, பலா என பலன் தரும் மரங்களும் அழிக்கப்பட்டு அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக மாதர்பாக்கத்தில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடமும் திருவள்ளூரில் உள்ள மாவட்ட வன அலுவலரிடமும் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிகளை பாதுகாப்பதற்கு பதிலாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக சமூகநல ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர். வனத்துறை ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தில் மா, பலா, வாழை போன்ற மரங்கள் நன்றாக வளர்ந்து வருகிறது. இதில் கிடைக்கும் லாபத்தில் வனத்துறையினருக்கு சரிபாகம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுதவிர வனப்பகுதியில் வெட்டப்படும் செம்மரம், தேக்கு, சவுக்கு ஆகியவற்றுக்கு கடும் கிராக்கி உள்ளதால் தனி நபர்களுடன் சிலர் கூட்டணி வைத்துக்கொண்டு இரவோடு இரவாக மரங்களை வெட்டி விற்பனைக்கு அனுப்பிவைக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் கொண்டமாநல்லூர் பகுதியை சேர்ந்த ஒருவர் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை அத்துமீறி வெட்டி நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள் அபகரிப்பு குறித்து சமூக வலைதளங்களிலும் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளிவந்தபிறகும் வனத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதை பயன்படுத்தி நில ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து மரங்களை வெட்டுவது நிலத்தை ஆக்கிமிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலைமை நீடித்தால் மீதமுள்ள சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலமும் காணாமல்போயிடும் என்று கூறுகின்றனர். ஆகவே, வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதுடன் அதில் உள்ள மரங்களை வெட்டி கடத்தி கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.