உத்தரபிரதேசம்: பக்தர்கள் வசதிக்காக கும்பமேளா நீரை மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல உ.பி. அரசு உத்தரவிட்ட நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்கு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி.13 முதல் பிப்ரவரி. 26 வரை 45 நாள்கள் மகா கும்பமேளா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் 66 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் புனித நீராடினர்.
இந்த நிலையில், மகா கும்பமேளாவில் பங்கேற்க முடியாத மக்களுக்காக மாநிலம் முழுவதும் புனித நீரைக் கொண்டு செல்லப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், பிரயாக்ராஜ் கும்பமேளாவில் நீராட முடியாத பக்தர்கள் வசதிக்காக, தீயணைப்பு வாகனங்கள் மூலமாக 31,000 லிட்டர் திரிவேணி சங்கம நீரை மாநில அரசு உத்தரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களுக்கும் கொண்டு செல்கிறது. முதற்கட்டமாக நொய்டாவுக்கு 10,000 லிட்டர் ‘அமிர்த ஜலம்’ கொண்டு வரப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு விநியோகம் செய்ய ட்ரம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்தது.