தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளை மறுநாள் பருத்தி ஏலம் நடைபெற உள்ள நிலையில் விவசாயிகள் இன்றே பருத்தி மூட்டை நிரம்பிய வாகனங்களுடன் காத்திருக்கின்றனர். கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை நிலையத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இதற்காக கொண்டுவரப்படும் பருத்தி மூட்டைகள் அங்குள்ள 6 கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டு பின்னர் ஏலம் விடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள ஏலத்தில் தாங்கள் விளைவித்த பருத்தி இடம்பெற வேண்டும் என்பதற்காக விவசாயிகள் காலை முதல் லாரி, டிராக்டர் மற்றும் லோடு ஆட்டோக்களில் அவற்றை ஏற்றி வந்து ஒழுங்குமுறை விற்பனை நிலையம் முன்பாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். கிடங்கில் பருத்தி மூட்டைகள் அடுக்க இடம் கிடைக்காவிட்டால் மழையில் நனைந்து சேதமடையும் என கவலை தெரிவிக்கும் விவசாயிகள் இதற்காகவே அதிகாலையிலேயே வந்து காத்திருப்பதாக தெரிவித்தனர். இதனிடையே பருத்தி மூட்டைகளுடன் நிலையம் வந்துள்ள விவசாயிகள் கடந்த வாரத்தை விட நடப்பு வாரம் பருத்திக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.