*கடற்படை வீரர் உள்பட 5 பேர் கைது
கும்பகோணம் : கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் காண்டாமிருக கொம்பை விற்க முயன்ற முன்னாள் கடற்படை வீரர் உள்பட 5 பேரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் காண்டாமிருக கொம்பு விற்பனை செய்ய உள்ளதாக தமிழ்நாடு வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு சென்னை மற்றும் ராமநாதபுரம் பிரிவுகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இந்த தகவலின்பேரில் கும்பகோணம் வனச்சரக அலுவலர் பொன்னுச்சாமி தலைமையிலான வனத்துறையினர் நேற்றுமுன்தினம் இரவு அந்த விடுதியில் அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது ஒரு அறையில் காண்டாமிருக கொம்பினை விற்க செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அறையில் இருந்த கும்பகோணம் அருணா ஜெகதீசன் கார்டன் பகுதியை சேர்ந்த கலியபெருமாள் (80), விஜயகுமார் (57), திருவாரூர் மாவட்டம் குடவாசல் விஷ்ணுபுரம், உஸ்மானிய தெருவை சேர்ந்த ஹாஜாமைதீன் (76), திருவிடைமருதூர் திருநீலக்குடி அருகே அந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த செந்தில் (45), திருநாகேஸ்வரம் பேரூர், இந்திராநகரை சேர்ந்த தென்னரசன் (47) ஆகியோர் காண்டாமிருக கொம்பு விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து வனத்துறையினர் வழக்கு பதிந்து 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து காண்டாமிருக கொம்பை பறிமுதல் செய்தனர்.இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில், கடந்த 1982ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் கலியபெருமாள் கடற்படை வீரராக பணியாற்றிய போது அவருக்கு, இவரது நண்பர் உரிய உரிமங்களுடன் காண்டமிருக கொம்பை பரிசாக அளித்துள்ளார்.
பணி ஓய்வில் தமிழ்நாட்டிற்கு வந்த கலியபெருமாள், அந்த உரிமத்தை மாற்றியமைத்து புதுப்பிக்காமல் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அதனை மருத்துவ பயன்பாட்டிற்கு என்ற காரணத்தை கூறி பல லட்ச ரூபாய்க்கு விற்க முயன்றது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.