பெரியகுளம்: கும்பக்கரை ஆற்று வெள்ளப்பெருக்கில் சிக்கித்தவித்த 5 குழந்தைகள் உள்பட 9 பேரை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 12ம் தேதி முதல், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
அருவியில் நீர்வரத்து சீரானதுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, பெரியகுளம் கீழவடகரை ஊராட்சி பெருமாள்புரத்தை சேர்ந்த 5 குழந்தைகள் மற்றும் 4 பெண்கள் கும்பக்கரை அருவிக்கு கீழ் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் அதில் குளித்துக்கொண்டிருந்த பெண்கள், செய்வதறியாது திகைத்துப் போய், தங்களது குழந்தைகளுடன் ஆற்றின் மறுகரையில் தஞ்சம் அடைந்தனர். குழந்தைகளுடன் சிக்கிக் கொண்ட பெண்கள், ஆற்றை கடந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கயிறு கட்டி அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.