புழல்: புழல், ஒற்றைவாடை தெருவில் புகழ்பெற்ற பழமைவாய்ந்த வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி முருகன் கோயில் உள்ளது. கடந்த சில மாதங்களாக இக்கோயில் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்தது. 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியசாமி வீற்றிருக்கும் மூலஸ்தான கோபுரம் உள்பட பல்வேறு பரிவார மூர்த்தி சன்னதிகளிலும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக பல்வேறு சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, கோவில் நிர்வாக செயல் அலுவலர் குமரன், அறங்காவலர் குழுத் தலைவர் ரவி, அறங்காவலர்கள் குணசேகரன், லட்சுமி நீதிராஜன், மாதவரம் மண்டல குழு தலைவர் நந்தகோபால், மாதவரம் தெற்கு, வடக்கு பகுதி திமுக செயலாளர்கள் துக்காராம், வழக்கறிஞர் புழல் நாராயணன், வட்ட செயலாளர் சுந்தரேசன், ஐகோர்ட் குப்பன், சந்துரு உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் சார்பில் அன்னதானம் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புழல் போலீஸ் உதவி ஆணையர் ஆதிமூலம், புழல் இன்ஸ்பெக்டர் மல்லிகா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். முன்னதாக, திருக்கோயிலின் முன்பு புழல் நட்பு வட்டார நண்பர்கள், அனைத்து சமூக மக்கள் நல சங்கத்தின் சார்பில், அனைத்து பக்தர்களுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.