நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் ஆன்லைன் செயலிகளை நம்பி ஏமாறும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இளம்பெண்களை காட்டியும், ஓரின சேர்க்கைக்கு அழைத்தும் பலரிடம் பணம் பறிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சமூக வலை தளங்களின் வளர்ச்சிக்கு பின், சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக செயலிகள் மூலம் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆன்ட்ராய்டு மொபைல் போன்களில் வரும் செயலிகளை நம்பி, அதை தொடர்பு கொண்டு லட்சக்கணக்கில் பணம் பறி கொடுத்தவர்கள் செய்வதறியாமல் தவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக சைபர் காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகின்றன. ஆன்லைனில் போட்டிகள் என்ற பெயர்களில் பண ஆசையால் அதில் பங்கேற்று ஏமாந்தவர்களில் படித்தவர்கள் தான் அதிகம் உள்ளனர் என்பதும் வேதனையான விஷயம் ஆகம். பணம், நகைகள் தவிர தங்களது மானத்தையும் பலர் இழந்து தவிக்கிறார்கள். அந்த வகையில் கூகுள் பிளே ஸ்ேடாரில் கிரைன்டர் (Grindr) என்ற செயலி (அப்ளிகேசன்) மூலம் ஏமாந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருநெல்வேலி சரகத்தில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இந்த ஆண்டில் மட்டும் 22 வழக்குகள் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட 70 பேர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.
இந்த செயலியில் முன், பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் (சாட்டிங்) செய்யும் வசதி உள்ளது . இந்த செயலியின் மூலம் சில நபர்கள் பொதுமக்களை குறிப்பாக இளம் வயதினரை ஏமாற்றி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த செயலியினால் முகம் தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு அதன் மூலம் பழக்கம் ஏற்பட்டு, ஆசை வார்த்தைகளை கூறி தனிமையில் சந்திக்க தூண்டி அதன் மூலம் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை வழிப்பறி செய்து வருகிறார்கள்.
பொதுமக்கள் இது போன்ற குற்ற செயல் புரியும் எண்ணத்தோடு சமூக வலைதளங்கள், பிற தகவல் ஊடகங்கள் ஆகியவற்றில் தங்களை அணுகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். இது போன்ற ஏமாற்று செயலியின் மூலம் பாதிக்கப்படாமல் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். கிரைன்டர் ஆப் மற்றும் அதை போன்ற வேறு செயலிகளை பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது போன்ற குற்ற செயல்களால் பாதிக்கப்படும் நபர்கள் 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையிலோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தையோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையையோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு டிஐஜி மூர்த்தி கூறி உள்ளார்.
இது தொடர்பாக சைபர் க்ரைம் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது கிரைன்டர் (Grindr) செயலி மட்டுமல்ல, ஆன்ட்ராய்டு மொபைல் போனில் ஏராளமான போலி செயலிகள் உள்ளன. இந்த செயலிகளை இயக்குபவர்கள் முதலில் சம்பந்தப்பட்ட நபர் எந்த விஷயத்தில் அதிக ஈடுபாட்டில் உள்ளார் என்பதை சாட்டிங் மூலம் தெரிந்து கொள்கிறார். பண ஆசையாக இருந்தால் அது தொடர்பான வழிகளில் ஏமாற்ற முயல்கிறார். சிறு முதலீடு பெரிய லாபம் என்ற பெயரில் ஆன்லைன் மூலமே பணத்தை முதலீடு செய்ய வைத்து தொடக்கத்தில் சரியாக பணம் வழங்குவது போல் நடித்து பெரும் தொகையை கறந்து விடுகிறார்கள்.
இதே போல் சம்பந்தப்பட்ட நபர் பெண் மோகம் கொண்டவராக இருந்தால் அவரது வழியிலேயே இளம்பெண்களை காட்டி பணத்தை பறிக்கிறார்கள். படித்தவர்கள் தான் அதிகம் ஏமாறுகிறார்கள். செயலி மூலம் முகம் தெரியாத நபர் அழைக்கிறார் என்ற பெயரில் தனிமையில் சென்று சிக்கி தவித்தவர்களில் தொழிலதிபர்கள், மாணவர்கள் என பல தரப்பட்ட நபர்கள் இருக்கிறார்கள். வெளியே கூறினால் மரியாதை போய் விடும் என நினைத்து வெளியே சொல்ல முடியாமல் பலர் தவிக்கிறார்கள். ஓரின சேர்க்கையாளர்கள் என்ற பெயர்களில் கூட பலர் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். தேவையில்லாமல் மொபைல் போன்களில் வரும் செயலிகளை தொடர்பு கொள்ளாமல் இருப்பது நல்லது. வங்கி சம்பந்தப்பட்ட விபரங்கள், ஆதார் விபரங்கள் எதையும் தேவையின்றி பதிவு செய்ய வேண்டாம் என்றார்.