குளச்சல்: கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்ட எல்சா 3 என்ற சரக்கு கப்பல் 640 கன்டெய்னர்களுடன் கடலில் மூழ்கியது. இவ்வாறு மூழ்கிய கன்டெய்னர்கள் தற்போது கரை ஒதுங்கி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் குமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடியில் கன்டெய்னர் ஒன்று கரை ஒதுங்கியது. அதை கடலில் இருந்து மீட்பதற்காக குஜராத்தில் இருந்து மரைன் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் சென்டரை சேர்ந்த அலுவலர்கள் 4 பேர், கடலோர பாதுகாப்பு படையினர் 8 பேர் வாணியக்குடி வந்தனர்.
அவர்கள் நேற்று முன்தினம் காலை வாணியக்குடிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ராட்சத இயந்திரம் கொண்டு வரப்பட்டு அதில் கயிறு கட்டி, கன்டெய்னரை தூக்கும் பணி நடந்தது. நேற்று 2வது நாளாக மீட்பு பணி நடந்தது. மதியம் கன்டெய்னர் கரைக்கு கொண்டு வரப்பட்டது. அது தூத்துக்குடியில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு லாரியில் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.