நாகர்கோவில்: குமரியில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பெண் சார்பதிவாளர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மேலும் ஒரு சார்பதிவாளர் கைதாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. குமரி மாவட்டம் தோவாளை சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக இருப்பவர் மேகலிங்கம். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் விடுமுறையில் சென்றார். இவருக்கு பதிலாக, நாகர்கோவில் இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார்பதிவாளராக இருந்த சுப்புலெட்சுமி (33) என்பவர், கூடுதல் பொறுப்பாக தோவாளைக்கும் சார்பதிவாளராக நியமிக்கப்பட்டார். அவர் ரகசிய லிங்க் வசதியை பயன்படுத்தி, மேகலிங்கம் பணியில் இருந்த அன்றைய தினத்திலேயே, அவர் நிறுத்திவைத்து இருந்த பத்திரங்களை அவசர, அவசரமாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்ததும் மேகலிங்கம் அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனத்திடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில், தோவாளை சார்பதிவாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்ட சுப்புலெட்சுமி, முறைகேடாக பத்திரங்களை பதிவு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படையினர் விசாரணை நடத்தி, சார்பதிவாளர் (பொறுப்பு) சுப்புலெட்சுமி, அவருக்கு உதவியதாக மாவட்ட பதிவாளர் அலுவலக உதவியாளர் தனராஜா (50), அலுவலக ஊழியர்கள் நம்பிராஜன், ஜெயின் ஷைலா, டெல்பின் ஆகிய 5 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர் விசாரணையில் மேலும் ஒரு சார்பதிவாளருக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. இவரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரும் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மோசடி குறித்து சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘ஒவ்வொரு சார்பதிவாளருக்கும் தனித்தனி ரகசிய குறியீட்டு எண் இருக்கும். அவர்கள் அந்த குறியீட்டு எண் மூலமே லிங்க் ஓபன் செய்து பத்திரங்களை பதிவு செய்ய முடியும்.
மற்றொரு அலுவலகத்துக்கு பொறுப்பு சார்பதிவாளராக நியமிக்கப்பட்டால், அந்த அலுவலகத்துக்கு உட்பட்ட பத்திர ஆவணங்களையும் இந்த லிங்க் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரி பார்ப்பதற்கான வசதி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இருந்து தான் ஏற்பாடு செய்யப்படும். அதன்படி இடலாக்குடியில் பணியில் இருந்த சுப்புலெட்சுமி, தோவாளை சார்பதிவாளராக நியமிக்கப்பட்டதும், தோவாளை சார்பதிவாளர் அலுவலகத்துக்கான ஆவணங்களை பார்ப்பதற்கான ஆன்லைன் லிங்க் அவருக்கு வழங்கப்பட்டது. அவர் தனது ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி அதை பார்த்து உள்ளார். அப்போது தான் நிலுவையில் இருந்த பத்திரங்களை, மேகலிங்கம் பணியில் இருந்த நாளில் பதிவு செய்தது போல் பதிவு செய்துள்ளனர். இதில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். புரோக்கர்கள், அலுவலக ஊழியர்கள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு விசாரணை நடக்கிறது என்றனர்.